சங்கப் புலவர்கள் பொன்னுரை – 8 : பிறர் துன்பம் துடைத்தலே உண்மைச் செல்வம்! – இலக்குவனார் திருவள்ளுவன் ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன்

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 8 : பிறர் துன்பம் துடைத்தலே உண்மைச் செல்வம்! – இலக்குவனார் திருவள்ளுவன் ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 12 April 2025 அகரமுதல (சங்கப் புலவர்கள் பொன்னுரை – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 8 பிறர் துன்பம் துடைத்தலே உண்மைச் செல்வம்! “நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் செல்வம் அன்றுதன் செய்வினைப் பயனே” – மிளைகிழான் நல்வேட்டனார் (நற்றிணை 210: 5-6) அரசின் பாராட்டுரையும் ஆடம்பரப் போக்குவரத்து வசதிகளும் செல்வமன்று. இவை நம் செயல்களால் கிடைப்பவை! நெடிய மொழிதல் என்பது அரசால் தரப்படும் பாராட்டுரை அடங்கிய விருதிதழ்கள் ஆகும். சிலர் தன் பெருமை பேசும் வீரப்பேச்சுகள் என்கின்றனர். இவ்வாறு சொல்வதை விட உயர்வாகக் கருதுவதற்குரிய அரசுப் பட்டங்களையே குறிப்பதாகக் கொள்வதே சிறப்பு. தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே மாராயப் பட்டம் சிறந்த போர் வீரர்களுக்கு அரசரால் வழங்கப்பெற்றது. இதைப் போன்ற பட்டங்கள்தாம் நெடிய மொழிதல் என்கிறார்கள் அறிஞர்கள். இக்காலத்தில் ஒன்றிய அரசால் தாமரை விருதுகள் போன்றவை வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசாலும் கலைமாமணி, கலைச்செம்மல் முதலிய விருதுகள் வழங்கப்படுகின்றன. கலைஞர் செம்மொழி விருது முதலிய உயரிய விருதினையும் குறிப்பிடலாம். கடிய ஊர்தல் என்பது பாடப்பெற்ற காலத்தில் தேர், குதிரை, யானை முதலியவற்றில் பெருமிதத்துடன் செல்வதைக் குறித்தது. இக்காலத்தில் அரசு மகிழுந்தில் செல்வதையும் செல்வத்தால் பெறும் ஆடம்பர ஊர்திகளில் செல்வதையும் குறிக்கும் எனலாம். செல்வத்தினாலும் செல்வாக்கினாலும் பெறுவன யாவும் உண்மையான செல்வம் அன்று. இவையெல்லாம் நாம் ஆற்றும் செய்கைகளால் கிடைப்பன. செய்வினைப் பயன் என்றால் முற்பிறவியில் செய்த வினைப்பயன் எனப் பலரும் கூறுவர். இது பொருந்தாது. நாம் உழைத்து மேற்கொள்ளும் செயல்களால் விளைவன என்பதே சரியாகும். தீவினை புரிந்தும் செல்வம் ஈட்டுவர். அரசின் தவறான செய்கைகளையும் பொருட்படுத்தாமல் புகழ்ந்து, செல்வமும் செல்வாக்கும் அடைவோரும் இக்காலத்தில் உள்ளனர். அவை ஏற்கத்தக்கன அல்ல. “சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென் கட் செல்வம் செல்வம் என்பதுவே.” என்பன பாடலின் இறுதி அடிகளாக வரும். புன்கண் என்றால் துன்பம்; அஞ்சும் மென்கண் என்றால் அத்துன்பம் கண்டு வருந்தி ஏற்படும் இரக்க உள்ளம் அல்லது அருட்தன்மை. நாம் ஈட்டும் பொருட் செல்வமும் அப்பொருளால் பெறும் பிற செல்வமும் தகை நலம் (convenience), வாய்ப்பு நலம் (comfort) முதலியனவும் உண்மையான செல்வமன்று. பிறர் துன்பங்கண்டு இரங்கி அத்துன்பத்தைத் துடைக்க மேற்கொள்ளும் பரிவுச்செயலே செல்வமாகும். இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் துன்பம் துடைத்தூன்றும் தூண் (திருக்குறள், ௬௱௰௫ – 615) என்கிறார் திருவள்ளுவரும். தனக்கு வரும் இன்பத்தை விரும்பாமல் தன் சுற்றத்தார்க்கு ஏற்படும் துன்பத்தைத் துடைப்பதில் கருத்து செலுத்திச் செயலாற்றுபவன் அவர்களைத் தாங்கும் தூணாக விளங்குவான் என்கிறார் வள்ளுவர். முழுப்பாடலும் தோழி தலைவனிடம் கூறுவதால் தலைவியைத் துன்புறச் செய்து விட்டுப் பரத்தையிடம் செல்லாதே என ஆடவர் கற்பை வலியுறுத்துவதாக உள்ளது என விளக்குவர் ஆன்றோர். “பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்” என்பார் புலமைப்பித்தன் (படம்: கோயில் புறா. “அமுதே தமிழே” எனத் தொடங்கும் பாடலில் இடையில் வரும் அடி). எனவே, காலங்காலமாகப் பொருட்செல்வத்தை உண்மையான செல்வமாகச் சான்றோர் கருதுவதில்லை. நாமும் பிறர் துன்பத்தைப் போக்குவதையே இன்பமாகக் கருதக் கூறும் சங்கப் புலவர் பொன்னுரையைப் போற்றி வாழ்வோம்! – இலக்குவனார் திருவள்ளுவன் தாய், 11.04.2025

கருத்துகள்