’மனோன்மணீயம்’ சுந்தரனாரின் பிறந்தநாள் ஏப்ரல் 4. மேகலா இராமமூர்த்தி

’மனோன்மணீயம்’ சுந்தரனாரின் பிறந்தநாள் ஏப்ரல் 4. கேரளாவிலுள்ள ஆலப்புழையில் 1855-ஆம் ஆண்டு ஏப்ரல் 4-ஆம் நாள், பெருமாள் பிள்ளை, மாடத்தி அம்மாள் இணையருக்கு மகனாய்த் தோன்றிய சுந்தரனார், தத்துவத் துறையில் முதுகலைப் பட்டம்பெற்றுத் திருவனந்தபுரத்திலுள்ள மகாராஜா கல்லூரியில் (The Maharaja’s College) தத்துவத்துறைப் பேராசிரியராய்ப் பணியாற்றியவர். தம் மாணாக்கர் பலரும் ஆங்கில நாடக ஆசிரியரான ஷேக்ஸ்பியரின் நாடகங்கள்மீது பெருங்காதல் கொண்டு அவற்றைப் படித்தும் நடித்தும் வருவதைக் கண்ட சுந்தரனார், செந்தமிழில் சிறந்ததோர் நாடகம் இயற்றித் நந்தமிழில் நாடக நூல்கள் இல்லையெனும் குறை களையத் தீர்மானித்தார். அதற்கு ஏற்றதொரு கதையினை அவர் சிந்தித்திருந்த வேளையில், புகழ்பெற்ற ஆங்கில நூலாசிரியரும், அரசியல்வாதியுமான லிட்டன் பிரபு (Edward George Earle Bulwer Lytton) 1866-இல் இயற்றிய ’The Lost Tales of Miletus’ எனும் நூல் அவர் நினைவுக்கு வந்தது. அந்நூலுக்கு ’The Secret Way’ எனும் மற்றொரு பெயருமுண்டு. அதனைத் தெள்ளுதமிழ்க் காப்பியமாய்த் தீட்டினார்; அதுவே ‘மனோன்மணீயம்’ எனும் புகழ்வாய்ந்த நாடகத் தமிழ்நூல். 1891-ஆம் ஆண்டு, எளிய செய்யுள் நடையில், ஆசிரியப்பாவில் இயற்றப்பட்ட இந்நூல், தமிழின் ஐம்பெருங்காப்பியங்களுக்கு ஈடான இலக்கியச் சுவையும், செறிவான நடையும் கொண்டு கற்பாரைக் காந்தமெனக் கவர்கின்றது. இந்நூலில், இடைப்பிறவரலாக இடம்பெறும் ’சிவகாமி சரிதை’ எனும் கதை (another short story in the middle), படித்துச் சுவைக்கவேண்டிய மற்றோர் இனிய பகுதி. இஃது, ஆங்கிலக் கவிஞர் ஆலிவர் கோல்ட்ஸ்மித் (Oliver Goldsmith) எழுதிய ’The Vicar of Wakefield’ (வேக்பீல்டு பாதிரியார்) எனும் நூலிலுள்ள கிளைக்கதையான ’Edwin and Angelina, A Ballard’ என்பதன் தழுவலாகும். Edwin-ஐச் சிதம்பரனாகவும், Angelina-வைச் சிவகாமியாகவும் மாற்றியுள்ளார் சுந்தரனார். ஆங்கில நூலின் தழுவலாயினும், தமிழ் மரபையொட்டியே கதை அமைக்கப்பட்டிருக்கின்றது. கதைக்குள் மற்றொரு கதையாய்த் திகழும் இச்சிவகாமி சரிதை, நறுந்தேனில் தோய்த்தெடுத்த தீம்பலாவாய்த் தித்திக்கின்றது. மனோன்மணீயம் காப்பியத்தைச் சுவைத்தறியாதவர்கூட அதில் இடம்பெற்றுள்ள ’நீராருங் கடலுடுத்த’ எனத் தொடங்கும் ”தமிழ்த் தெய்வ வணக்கத்தை” நன்கறிவர். அப்பாடலையே தமிழக அரசு, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாய்ப் பாடநூல்களில் அச்சிட்டுள்ளது. ஆயினும், முழுப்பாடலும் தரப்படாமல் பாடலின் அடிகள் அங்குமிங்குமாய்க் கத்தரிக்கப்பட்டுச் சுருக்கப்பட்ட பாடலையே நாம் பாடநூல்களில் பயில்கின்றோம். ஆதலால் பாடநூலில் இடம்பெறாத, அப்பாடலின் சிறந்த அடிகள் ஒருசிலவற்றை இங்கே காண்போம். ”பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே? வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொருநீதி?” தமிழ்நூல்களின் தொகுப்பான பத்துப்பாட்டைக் கற்று அதனிடத்துப் பற்றுக் கொண்டோர், எள்ளளவும் பொருட்செறிவோ, இலக்கணமோ இல்லாத பிற (கவிஞர்களின்) கற்பனைகளில் தம் உள்ளத்தைச் செலுத்துவரோ? வள்ளுவப் பேராசானின் திருக்குறளைக் கசடறக் கற்றோர், சமநீதியற்றதாய், குலத்துக்கொரு நீதி சொல்லும் மனு முதலான சாத்திரங்களை மறந்தும் நினைப்பரோ? தத்துவ அறிஞராகவும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளராகவும், வாடிக்கிடந்த நாடகக் கலைக்குத் தேடி நீர்வார்த்த நற்றமிழ்ப் புலவராகவும் விளங்கிய சுந்தரனார், கல்வெட்டாராய்ச்சியாளராகவும் முத்திரை பதித்த வித்தகராவார். பல்துறை வித்தகரான சுந்தரனாரைப் பீடித்திருந்த நீரிழிவு நோய் (diabetes), 42 வயதிலேயே அவரை அகாலத்தில் கொண்டுபோனது வருத்தத்திற்குரியது. குறைந்த காலமே வாழ்ந்தாலும் தாம் தோன்றிய துறைகளிலெல்லாம் புகழோடு தோன்றிய சுந்தரனார், தமிழ்த்தாயின் தவப்புதல்வர்களுள் தலையாயவர் என்பதில் ஐயமில்லை. ~மேகலா இராமமூர்த்தி

கருத்துகள்