ூலின் பெயர் : திரும்பிப் பார்க்கிறேன் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி வானதி பதிப்பகம் 21, தீனதயாளு தெரு, தியாகராயர் நகர், சென்னை 17. தொலைபேசி 044 24342810. / 24310769
நூலின் பெயர் : திரும்பிப் பார்க்கிறேன்
நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி
நூல் விமர்சனம் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி
வானதி பதிப்பகம் 21, தீனதயாளு தெரு, தியாகராயர் நகர்,
சென்னை 17. தொலைபேசி 044 24342810. / 24310769.
விலை ரூபாய் 70.பக்கங்கள் 78.
மதிப்பிற்குரிய ‘தமிழ்ச் செம்மல்’ விருது பெற்ற கவிஞர் இரா. இரவி அவர்களின் `திரும்பிப் பார்க்கிறேன்’ என்ற இந்த நூல் பலரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் நூலாக வந்துள்ளது.
புகழ்பெற்ற வானதி பதிப்பகம் சர்வதேச தர எண்ணுடன் (ISBN) அச்சிட்டு இருப்பது கூடுதல் சிறப்பு. கவிஞரின் நூலுக்கு கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதகிருஷ்ணன் அவர்களின் அணிந்துரை இரா. இரவி அவர்களின் புகழை பறைசாற்றுகிறது. மாமனிதர் அப்துல்கலாம் முதல் ஹலோ பண்பலை செல்வகீதா வரை உள்ள அனைத்தும் திரும்பி பார்த்து வாசகர்களை வியக்க வைத்திருக்கிறார்.
மனதிற்குள் இருந்த செய்திகள் யாவும் வாசகர்களின் பார்வைக்கு வைத்திருக்கிறார். இனி, பல வாசகர்களும் இவரைத் திரும்பிப் பார்க்கப்போவது உறுதி. சாதாரணமாக தமிழ் வாசிக்கத் தெரிந்த ஒன்றாம் வகுப்பு மாணவன் கூட கவிஞரின் நூலை வாசிக்கும் வாசகராகி விடலாம், அவ்வளவு எளிமையான நடை. இதுவரை எவரேனும் இரா. இரவி பற்றி சாதாரணமாக எண்ணம் கொண்டிருந்தால் இந்நூலை வாசித்த பிறகு அவரை சாதனையாளராக அறிந்து தங்களின் பார்வையையும் எண்ணத்தையும் மாற்றிக் கொள்வார்கள்.
என்னைப் பொறுத்தவரை இந்நூல் அவசியம் என்பேன். கடந்து வந்த பாதையையும், மனிதர்களையும் திரும்பிப் பார்ப்பது எத்தனை மகிழ்ச்சி தெரியுமா? அவசரத்தில் சொல்ல மறந்த நன்றியை, மகிழ்வை, நட்பை, அன்பை, என்றாவது திரும்பிப் பார்த்து சொல்லும் போது நமக்குள் ஊடுருவும் மகிழ்வும் நிம்மதியும் ஒவ்வொருவருக்கும் தேவையான ஒன்றுதான். அதை இந்நூலின் மூலம் சொல்லி மனதிற்கு ஆறுதில் அளித்து உள்ளார் கவிஞர்.
திறமையும் முயற்சியும் இருந்தால் எளிய மனிதரால் கூட மிகப்பெரிய ஆளுமைகளுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்பதனை மாமனிதர் அப்துல்கலாம், நீதியரசர் கற்பகவிநாயகம், சுற்றுலாத்துறை அமைச்சர் திருமதி கோகுல இந்திரா போன்றவர்களைப் பற்றி வாசிக்கையில் உணர வைத்திருக்கிறார்.
பிறருக்கு உதவும் மனப்பான்மை இருந்தாலே போதும் அவை நம் வாழ்வை நல்ல விதத்தில் மாற்றியமைக்கும் என்பதை செனாய் நகர் இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி என்ற தலைப்பில் HCL அதிபர் சிவ் நாடார் மூலமும், சுற்றுலாத்துறை இணை இயக்குநர் ‘இராமேஷ்வர தீர்த்தம்’ கொண்டு செல்வதற்கு உதவியும், சுற்றுலாத்துறையில் அமைச்சரின் நேர்முக உதவியாளருக்கு மறந்து சார்ஜ் போட்ட அலைபேசியை கொடுத்து அனுப்பி அவரிடம் சேர்த்தது போன்ற செய்திகள் படிப்பதற்கு வியப்பாகவும், சுவையாகவும் இருக்கிறது. மேலும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு உதவும் மனப்பான்மையை வளர்க்க இவை உதவும் என்பதில் மாற்றுக்-கருத்து இல்லை.
நம் செயலை செவ்வனே செய்யும்போது அதன் பலன் நிச்சயமாய் கிடைக்கும் என்பதற்கு ‘மாயாண்டி குடும்பத்தார்’ என்ற திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதியதையும் அதனை புரட்சித்தலைவி ஜெ. ஜெயலலிதா அவர்கள் அலைபேசியில் அழைத்து பாராட்டியதையும் படிக்கும் போது மெய்சிலிர்க்கிறது.
நா. பார்த்தசாரதி நிறுவனர் இறையன்பு நூலகம் திருமங்கலம் என்ற தலைப்பில் இறையன்பு நூலகத்தை தனது சொந்த வீட்டில் திறந்து பராமரிக்கும் மதிப்பிற்குரிய நா. பார்த்தசாரதி அவர்களை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் வரும். அதனால் அவரைப் பார்க்க இனி நிறைய பேர் வருவார்கள். அவரின் குணத்தை இவ்வளவு அழகாக எழுதியமைக்கு இரா. இரவிக்கு பாராட்டுக்கள்.
அதைப் போலவே அகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர் பழனியப்பன் அவர் தம்பி கோபி பற்றிய செய்திகளை வாசிக்கும் போது எனக்கு கண்ணீரும் ஆனந்தக் கண்ணீரும் ஒருசேர வந்து விட்டது. சொத்துச் சண்டையும், சோத்துச் சண்டையும் போடும் மனிதர்கள் கட்டாயம் இதை வாசித்தால் திருந்தி வாழ வாய்ப்புண்டு. பழனியப்பன் அவர்களின் குடும்பத்தையும் அவரின் தம்பி கோபியின் அன்பையும் பிறருக்கு வெளிப்படுத்தி அவர்களை பலருக்கும் அடையாளம் காட்டியதற்கு கவிஞருக்கு பாராட்டுக்கள்.
கலைமாமணி பேராசிரியர், ஏ. எட்நேம்ஸ் பற்றிய செய்திகளை வாசிக்கும் போது நாமும் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை நமக்குள் விதைக்கிறது.
தன்னோடு உலாவரும் மதுரை உலா ரெ. கார்த்திகேயன் புகைப்படக் கலைஞர் முதல் தனது நூல்களை ஆய்வு செய்த சொல்லின் செல்வி சங்கீத்ராதா வரை அனைவரையும் இந்நூலில் பகிர்ந்து பலரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்துள்ளார். அதில் என்னைப் பற்றியும் எழுதியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை எனக்கு அளித்திருக்கிறது. இதிலுள்ள 46 தலைப்பும் மிக அருமையாக உள்ளது. எழுதிக்கொண்டே சென்றால் எனது விமர்சனமும் ஒரு நூலின் அளவிற்கு சென்றுவிடும் என்பதால் நிறைவு செய்கிறேன். இந்நூல் முழுவதுமே முயற்சியும், திறமையும், தயக்கமின்மையையும், பிறருக்கு உதவும் பண்பையும் நமக்குச் சொல்லித் தருகின்றது. அனைவரும் இந்நூலை அவசியம் படிக்க வேண்டும் என்றே விண்ணப்பிக்கிறேன். கவிஞர் இரா. இரவி திரும்பிப்பார்த்ததில் பலருக்கு வெளிச்சம் கிடைத்திருக்கிறது. காரணம் இரவி அல்லவா? வெளிச்சம் இருக்கத்தானே செய்யும்.
மேலும் பலரையும் வெளிச்சத்திற்கு கொண்டு வர வாழ்த்துக்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக