இலக்கியமும் இயக்கமுமாய் வாழ்ந்தவர் தோழர் நாறும்பூநாதன் – தமுஎகச புகழஞ்சலி

இலக்கியமும் இயக்கமுமாய் வாழ்ந்தவர் தோழர் நாறும்பூநாதன் – தமுஎகச புகழஞ்சலி தமுஎகச மாநிலத்தலைவர்களில் ஒருவரும் தமிழின் மதிப்புமிகு எழுத்தாளருமான தோழர் நாறும்பூநாதன் (64), உடல்நலக்குறைவால் நேற்று நெல்லையில் காலமானார் என்ற செய்தி நம்மை மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் – சண்முகத்தம்மாள் இணையரின் மகனாக 1960 ஆகஸ்ட் 27 அன்று பிறந்தவர் நாறும்பூநாதன். தமிழாசிரியரான அவரது தந்தையின் பணிநிமித்தம் கோவில்பட்டிக்கு வந்துசேர்ந்த அவர்களது குடும்பம் பின்னர் அங்கேயே வசிக்கத் துவங்கியது. பள்ளிப் பருவந்தொட்டே புத்தகப்படிப்பில் நாட்டம் கொண்டிருந்த நாறும்பூநாதன், அந்த ஈடுபாட்டை தனது நட்புவட்டத்திலும் பரப்பியவர். அவரது அண்ணன்களான ஆர்.எஸ்.மணி, ஓவியர் குமரகுருபரன் இருவருமே பொதுவுடமை இயக்கத்தோடு இளம்பருவத்திலேயே தம்மை இணைத்துக்கொண்டவர்கள். அந்தப் பாரம்பரியத்தை நாறும்பூநாதனும் தொடர்ந்தார். நாறும்பூநாதன், 1970களில் கோவில்பட்டியில் இளம் படைப்பாளிகளுடன் துடிப்பாக இயங்கிக் கொண்டிருந்த இலக்கிய வட்டத்தில் தீவிரமாக செயல்பட்டார். சிலேட்டு என்கிற கையெழுத்து இதழ் வெளிவருவதிலும், தர்சனா, சிருஷ்டி ஆகிய நாடகக் குழுக்களின் செயல்பாட்டிலும் அவரது பங்கு முக்கியமானது. வங்கிப்பணி நிமித்தம் நெல்லைக்கு மாற்றலாகிச் சென்ற நாறும்பூநாதன், அந்த மண்ணோடும் மக்களோடும் கரைந்து நெல்லையின் போற்றத்தக்க ஆளுமைகளில் ஒருவராக வளர்ந்தெழுந்தார். அங்கிருந்த இலக்கிய ஆளுமைகள், ஆய்வாளர்கள், இளம் எழுத்தாளர்கள், கலைஞர்கள், இலக்கிய அமைப்பினர், கல்வியாளர்கள் அனைவருடனும் உயிர்த்துடிப்பான தோழமையைக் கொண்டிருந்தார். தமுஎகச கோவில்பட்டி கிளையின் செயலாளராக தனது அமைப்புப்பணியைத் தொடங்கிய அவர் அளப்பரிய பணிகளின் வழியாக விரைவிலேயே அடுத்தடுத்த நிலைகளுக்கு உயர்ந்தார். தமுஎகச நெல்லை மாநில மாநாட்டின் வரவேற்புக்குழு பொருளாளராக திறம்பட பணியாற்றியிருந்தார். ஒன்றுபட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அமைப்பினை உருவாக்குவதிலும் வழிநடத்துவதிலும் “புறவுலகும் புனைவுலகும்” போன்ற முகாம்களை நடத்திக்கொடுத்ததிலும் அவர் ஆற்றிய பணி மெச்சத்தகுந்தது. சென்னையில் நடைபெற்ற தமிழர் உரிமை மாநாட்டிற்கு முன்னோட்டமாக ஆதிச்சநல்லூரில் பிடிமண் எடுத்து எழுச்சிமிக்கதொரு நிகழ்வினை நடத்திக்கொடுத்தார். தொல்லியல் அகழாய்வுக் களங்களில் அரசின் கவனத்தைக் கோருவதில் தொடர் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். கனவில் உதிர்ந்த பூ, இலை உதிர்வதைப்போல, ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன் ஆகிய சிறுகதைத்தொகுப்புகள், தட்டச்சு கால கனவுகள், என்னும் குறுநாவல் ஆகிய நூல்கள் இவரது இலக்கியப் பங்களிப்புகளாக உள்ளன. ஒரு தொழிற்சங்கப் போராளியின் டைரிக் குறிப்புகள், கண் முன்னே விரியும் கடல், யானை சொப்பனம் உள்ளிட்டு எட்டு கட்டுரைத்தொகுப்புகள் வெளியாகி கவனம் பெற்றுள்ளன. இவரது “திருநெல்வேலி: நீர் நிலம் மனிதர்கள்” என்ற நூலுக்காக இவருக்கு தமிழ்நாடு அரசு 2022 ஆம் ஆண்டுக்கான “உவெசா விருது” வழங்கிச் சிறப்பித்துள்ளது. வங்கிப்பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற பிறகான கடந்த பத்தாண்டுகளில், மாணவர்களிடையே கலை இலக்கிய உரையாடல்களை நடத்துவது, புத்தகக் கண்காட்சிகளையும் கலை இலக்கிய விழாக்களையும் ஒருங்கிணைப்பது, உள்ளூர் வரலாறுகளை தொகுத்து வெளியிடுவது என அவரது கலை இலக்கியப்பணிகள் வேகமெடுத்தன. தென்மாவட்டங்களில் கலை இலக்கியம் பண்பாடு சார்ந்து அரசு முன்னெடுக்கும் பல நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு அவரை தேடிவந்தது. அந்தளவிற்கு அவர் செயலூக்கம் மிக்கவராகவும் அனைவரையும் உள்ளிணைத்து இயங்கும் ஜனநாயகப்பண்புள்ளவராகவும் இருந்தார். குடும்பப்பொறுப்புகள், அலுவலகப்பணிகள், புத்தகப்படிப்பு, எழுத்து, அமைப்பின் பணிகள் ஆகியவற்றுடன், சகமனிதர்களிடம் நல்லுறைவைப் பேணுவதிலும் அவர்களுக்கொரு நெருக்கடி எனில் தீர்வுக்கு உதவுவதிலும் நாறும்பூநாதனின் பணி போற்றத்தக்கது. அவர் மேற்கொண்ட தொடர் முயற்சியினால்தான் தெருக்கூத்துக் கலைஞர் நெல்லை தங்கராசுவுக்கு அரசு வீடும், அவரது மகளுக்கு அரசுப்பணியும் கிடைத்தன. நாங்குநேரி மாணவர் சின்னதுரையும் அவரது சகோதரியும் சாதி விஷமேறிய சகமாணவர்களின் தாக்குதலுக்கான போது, நாறும்பூநாதன் ஒவ்வொரு நாளும் உடனிருந்து கவனித்துக்கொண்டதுடன் அவர்களது படிப்புக்கும் பாதுகாப்புக்கும் அரசினைப் பொறுப்பேற்கச் செய்வதில் உறுதியுடன் செயல்பட்டார். நாறும்பூநாதனும் அவரது இணையர் உஷாவும் தங்களது ஒரே மகன் திலக் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ள துணை நின்றுள்ளனர். ஒரு கலை இலக்கிய அமைப்பின் ஊழியர் கலை இலக்கியத்தில் ஆழங்கால் பதித்திருப்பதுடன், சக கலை இலக்கியவாதிகளுடனும் அமைப்புகளுடனும் வெகுமக்களுடனும் உள்ளார்ந்த பிணைப்பைக் கொண்டிருக்கவேண்டும் என்பதற்கு உதாரணம் தோழர் நாறும்பூநாதன். அவருக்கு தமுஎகச தனது வீரவணக்கத்தை உரித்தாக்குகிறது. எதிர்பாராத அவரது இழப்பினை தாங்கிக்கொள்ள முடியாமல் துயரடர்ந்து வாடும் அவரது இணையர், மகன் மற்றும் குடும்பத்தாரின் கரங்களைப் பற்றிக்கொள்கிறது தமுஎகச. இவண், மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர் ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர் 17.03.2025

கருத்துகள்