உரைகல்லின் உரைக்கோவை
===========================
பால் செசான்
============
** பிரெஞ்சு ஓவியர்
பிறந்த தினம் ஜனவரி 19, 1839
நினைவு தினம் அக்டோபர் 22,1906
இவர் 1839 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி ஃபிரான்ஸில் பிறந்தார்.
செசான் குடும்பத்தினர் மேற்கு பைடுமான்டில் உள்ள செசானா எனும் நகரத்தில் வாழ்ந்து வந்தனர்.இவரது தந்தை லூயி அகஸ்டெ செசான் ஒரு வங்கியின் துணை நிறுவனர். இவரது தந்தையின் பணி இவருக்கு வளமையுடன் வாழ உதவியது.
இவர் 10 வயதில் அதே நகரத்தில் உள்ள புனித ஜோசப் பள்ளியில் படித்தார். 1852ல் காலேஜ் பௌர்பான் எனும் கல்லூரியில் சேர்ந்தார்.பின்பு 1857ல் இவர் முனிசிபல் ஸ்கூல் ஆஃப் டிராயிங்க் எனும் ஓவிய கல்லூரியில் சேர்ந்தார் அங்கு ஓவியக் கல்வி கற்றார்.
தந்தையின் ஆசையை நிறைவேற்ற சட்ட கல்லூரியில் சேர்ந்தார். ஓவியத்துடன் சட்டமும் படித்தார். ஓவியப் படைப்பில் முழுமையாய் ஈடுபட செசானுக்கு ஊக்கமூட்டினார் ஸோலா. ஸோலா செசானின் உயிர்தோழர். தன் தந்தையின் எதிர்ப்பை மீறி தன் கலை வளர்ச்சிக்காக 1861ல் இவர் பாரிஸுக்கு சென்றார்.
இவரது ஓவியம் இயற்கையோடு அமைந்த ஓவியங்கள்.காடுகளிலும் நதிக்கரைகளிலும் தனிமையில் நடந்து இயற்கையன்னையின் முகச் சாயலை அறிந்து அவற்றை அழகுடன் நேர்த்தியாக வரைவார்.
எட்ரோயின் குன்றுகளிலும் சோங் விக்டோவர் மலைச் சரிவுகள் காட்சிகளனைத்தும் உண்மை என்று நினைக்க தோற்றும் விதமாக இவரது ஓவியம் அமைந்துள்ளது.ஒவ்வோர் நிலக்காட்சிக்கும் அதற்கு உயிர் இருப்பதாய் இவர் நம்பியிருந்தார்.அதனால் செசானின்
ஓவியங்கள் அவ்வுயிரின் மனக் கண்ணாடிகளாய் இருந்தன.
காரணமில்லாத குழப்பம், பொறுமையின்மை, தெரிந்தெடுத்த வாழ்க்கை பற்றிய ஆவேசம் இவையனைத்தும் நிம்மதியற்ற கொந்தளிப்பை உருவாக்கும்போது செசான் நிறக் கலவையுடன் கேன்வாஸின் முன்னமர்ந்து மனம்போன போக்கில் எண்ணற்ற ஓவியங்களை வரைந்து தள்ளுவார்.செசான் கிராமிய வாழ்வின் வாழ்க்கையை ஓவியமாக வரைந்தார்.இயற்கையின் அருகில் நின்று ஓவியம் தீட்டவே செசான் விழைந்தார்.
கோடுகளைக் குறைத்தார். பிரஷின் தன்மய பாவத்தை ஆதீதமாய் ஆதரித்தார்.செசானின் முதல் ஓவிய கண்காட்சி 1863ல் பாரிஸ் ஸலொன் டெ ரெஃபுஸஸில் நடைப்பெற்றது.இவரது ஓவியம் பாரிஸ் சலொனின் நீதிபதிகளை பெரிதாக கவரவில்லை. செசானின் படைப்புகளை நிராகரித்து வந்தனர். செசான் தன் தந்தை லூயி-அகஸ்டே செசானின் ஓவியத்தை வரைந்தார் அதுவே இவரின் வெற்றிகரமான முதலும் கடைசியுமான ஓவியம்.
20 ஆம் நூற்றாண்டின் புதிய கலை தேடுதல்கள், கியூபிசம் முதலியவற்ரோடு இணைப்பு ஏற்படுத்தியவர். மாட்டிஸ்ஸே, பாப்லோ பிக்காசோ ஆகிய இருவரும் "செசான் எங்கள் எல்லோருக்கும் தந்தை" என்று கூறியுள்ளனர்.தன்னுடைய படைப்பு அருங்காட்சியகங்களில் இருக்கும் ஓவியங்களை போல அனைவரின் மனத்தில் நீண்ட நாட்கள் இடம் பிடிக்க வேண்டும் என்று நினைத்து ஓவியங்களை வரைந்தார்.
1906 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி தமது 67 அகவையில் மறைந்தார்.
தொகுப்பு முருகுவள்ளி
கருத்துகள்
கருத்துரையிடுக