மயிலாடுதுறை சு.உதயமூர்த்தி என்கிற
எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்களின் நினைவு நாளில்..,
எம் எஸ் சுப்புலட்சுமி
எம் எஸ் விஸ்வநாதன்
எம் எஸ் சுவாமிநாதன்
எம் எஸ் தோனி என்று அறியப்படுகிற பிரபலங்கள் வரிசையில் எம் எஸ் உதயமூர்த்தி அவர்கள்
நாளைய இந்தியா, இளைஞர்கள் கையில் என்று நம்பியவர். இளைஞர்களை தவறான திசையில் செல்லாமல் நெறிப்படுத்த எழுத்து மூலமும், பேச்சு மூலமும் அவர் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியவை.
மனித வளம் பற்றி பல ஆண்டுகளுக்கு முன் பேசியவர். வெளிநாட்டில் பல ஆண்டுகள் இருந்தாலும் இந்தியாவின் மேல் மாறாத பற்று வைத்திருந்தவர். சீடன் தயாராகும் போது குரு தோன்றுவார் என்ற இவருடைய சொற்கள் மறக்க முடியாதவை.
25 ஆண்டு கால அமெரிக்க தொழில் அதிபர் வாழ்க்கையை உதறி தள்ளிவிட்டு, நாட்டு பற்று காரணமாக தாயகம் திரும்பியவர், நதிகளை இணைப்பதன் மூலம் நாட்டை வளம் கொழிக்க செய்யலாம் என்று விரும்பியவர்.
கண்ட இலட்சிய சமூகத்தை நோக்கி சமகால இளைஞர்களைப் பொறுப்புடன் வழிநடத்தியவர் என்ற சாதனை அவரின் புகழை நிலைபெறச் செய்யும். பொதுப்பணிகளில் அனைத்திற்கும் அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் நாமாக ஒன்றிணைந்து சிலவற்றை சாதிக்கலாம் என நடத்தியும் காட்டியவர் டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி.
இவருடைய உன்னால் முடியும் தம்பி என்ற வார்த்தைகள் மந்திரம் போல கல்லூரி மாணவர்கள் மத்தியில் அதிர்வலைகளை உருவாக்கின. உடல் நலம், மன நலம் சுற்றுச் சூழல் வாழ்க்கை வெற்றி எல்லாம் அமைப்பது நமது எண்ணங்களே என்பதை தன் எண்ணங்கள் புத்தகத்தில் வலியுறுத்தியவர். இவருடைய அனைத்து புத்தகங்களும் தூண்டுகோலாக அமைந்து
இளைஞர்களுக்கு உந்து சக்தியாக விளங்குகின்றன.
இன்று அவர் நம்முடன் இல்லாவிட்டாலும் அவரது சிந்தனைகளும், எழுத்துகளும் நம்மோடு தான் இருக்கிறது, நம்மை இயக்குகிறது.
இங்கிலாந்திலிருந்து
சங்கர் 🎋
கருத்துகள்
கருத்துரையிடுக