எழுத்துவேந்தர் இந்திரா சௌந்தரராஜன்
கவிஞர் இரா.இரவி
எழுத்துவேந்தர் என்ற பட்டத்திற்கு முற்றிலும் பொருத்தமானவர். எழுத்தின் வேந்தராகவே வலம் வந்தார். சிறுகதை, நாவல், கட்டுரை என தொலைக்காட்சித் தொடர்கள், திரைக்கதை என சகலதுறையிலும் சகலகலா வல்லவராகத் திகழ்ந்தார். இவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர் தமிழ்த்தேனீ இரா.மோகன் அவர்கள்.
இந்திரா சௌந்தரராஜன் அவர்கள் ஆத்திகர். நான் நாத்திகர். நல்ல நட்போடு இருந்தோம். நான் மட்டுமல்ல, எனது குருவான புரட்சிப் பாவலர் மன்றத்தின் தலைவர் பி.வரதராசன் அவர்களும் நாத்திகர். அவரோடும் நல்ல நட்புடன் இருந்தார்.
பெரிய எழுத்தாளர் என்ற கர்வம், பந்தா எதுவுமில்லாமல் எல்லோருடனும் எளிமையாக பழகிடும் பண்பாளர். ஈடுசெய்ய முடியாத இழப்பு என்பது உண்மையிலும் உண்மை. அவருக்கு ஈடு அவர் மட்டுமே. அவர் எழுதிய நூல்களை எல்லாம் குவித்து வைத்தால் குன்று போல இருக்கும். அவ்வளவு நூல்கள் எழுதி குவித்த எழுத்து இமயம் அவர்.
என்னுடைய நூல்களுக்கு தமிழ்த்தேனீ இரா. மோகன் வழக்கமாக அணிந்துரை தருவார். நூலாக்கி விழாக்களில் சந்திக்கும் போது ஐயா இந்திரா சௌந்தரராஜன் அவர்களின் கைகளில் கொடுத்தால் இரண்டே நாளில் நூல் மதிப்புரை கைப்பட எழுதி அனுப்பி வைத்து விடுவார். நம்மிடம் அணிந்துரை கேட்காமல் மதிப்புரை மட்டுமே கேட்கிறானே என்று ஒருபோதும் எண்ண மாட்டார்.அவருடைய இல்லம் சென்றால் அவரது மனைவியாகிய அம்மையாரும் அன்புடன் வரவேற்று உபசரிப்பார்கள். அவரது வீட்டின் மாடியில் உள்ள நூலக அறை தான் அவர் எழுதும் அறை. அங்கும் அழைத்துச் சென்று காண்பித்து மகிழ்ந்தார். அக்கிரகாரத்தில் பிறந்த அதிசய மனிதர் என்றே சொல்லலாம்.
ஒருநாள் விசுவசாந்தி ஆசிரமத்தில் பேசும்போது உடன் அழைத்துச் சென்றார். அவரது பெரும்பாலான உரைகளை எனது முகநூலில் நேரலை செய்வேன். வந்து பார்த்து விட்டு உடன் நன்றி சொல்வார். உலக திருக்குறள் பேரவை நடத்திய புகழ்வணக்கம் நிகழ்வையும் நேரலை செய்தேன். அவரது மூத்தமகள் பார்த்து நன்றி சொன்னார்கள். கட்டுரையும் கேட்டார்கள். விசுவசாந்தி ஆசிரமத்தில் பேசிவிட்டு வரும்போது. அருகில் இருந்த முதுமுனைவர் வெ. இறையன்பு அவர்களின் ஒழுங்கு நடவடிக்கை ஆணையர் அலுவலகம் வீடு இங்கு தான் உள்ளது என்றேன். அப்ப, வாங்க போவோம் என்றார். சென்று விட்டோம். அன்று ஞாயிறு என்பதால் அலுவலகம் விடுமுறை. அவரை அலைபேசியில் அழைத்தேன். இறையன்பு ஐயா அங்கு இல்லை. வெளியூர் சென்று இருந்தார். எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களும் நானும் வந்துள்ளோம் என்றேன். உடன் இறையன்பு ஐயா என்னைக் கடிந்து கொண்டார். அவர் எவ்வளவு பெரிய எழுத்தாளர். ஒரு வார்த்தை சொல்லிவிட்டு வந்திருக்க வேண்டாமா? என்றார். அன்றுதான் இருவரும் அலைபேசியில் பேசிக் கொண்டனர்.எழுத்து, பேச்சு இரண்டு துறையின் இமயங்கள் இணைய நான் காரணமாக இருந்ததில் மகிழ்ச்சி. இருவரும் பிறந்த ஊர் சேலம். சிறந்த ஊர் மதுரை. புகழ்பெற்ற ஊர் சென்னை என்பதால் இருவரும் நல்ல நண்பர்கள் ஆகி விட்டனர். இறையன்பு ஐயா மதுரைக்கு வந்தால் வந்து சந்தித்து விடுவார். இந்திரா சௌந்தரராஜன் அவர்களின் நூலுக்கு இறையன்பு ஐயா அணிந்துரை வழங்கி உள்ளார். இறையன்பு ஐயா அவரது ‘மூளைக்குள் சுற்றுலா’ நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழை தட்டு பழங்களுடன் எழுத்துவேந்தருக்கு கொடுக்க வேண்டும் என்றார். நான் இல்லம் அழைத்து சென்றேன். நேரடியாக சந்தித்து அழைப்பிதழ் வழங்கினார்.
எழுத்துவேந்தர் பாஸ்போர்ட் விண்ணப்பித்த போது, காவல் நிலையத்தில் இவர் யார்? என்று தெரியாமல் அலையவிட்டு உள்ளனர். உடன் என்னை அலைபேசியில் அழைத்தார். விபரம் சொன்னார். உயர் அதிகாரிகளிடம் பேசிவிட்டு, காவல் நிலையம் போகச் சொன்னேன். உடன் தந்து விட்டனர்.
மாநகராட்சியில் குறை இருந்தால் அறச்சீற்றம் கொள்வார். உடன் மாநகராட்சி ஆணையாளரின் நேர்முக உதவியாளர் நண்பர் ராஜ்குமாரை அறிமுகம் செய்து வைத்தேன். குறைகள் தீர்ந்தது, நன்றி சொன்னார். விமான நிலையத்தில் உதவி பொதுமேலாளர் நண்பர் பாஸ்கரனை அறிமுகம் செய்து வைத்தேன். அப்போதே சொன்னார், இறையன்பு ஐயா அவர்கள் உங்களுக்கு ‘புலிப்பால் இரவி’ என்ற பட்டம் பொருத்தமாகத் தான் கொடுத்துள்ளார் என்று பாராட்டினார்.மதுரை அருகில் திருமங்கலத்தில் உள்ள நா. பார்த்தசாரதி அவர்கள் நடத்தி வரும் ஐயா இறையன்பு நூலகத்திற்கு நான் என்னுடயை நூல்கள் நன்கொடையாக வழங்கியதை முகநூலில் பார்த்து விட்டு, ஐயா இந்திரா சௌந்தரராஜன் அவர்களும். நானும் இந்நூலகத்திற்கு நூல்கள் நன்கொடையாக வழங்க வேண்டும் என்றார். உடனே இறையன்பு நூலக நிறுவனர் திரு. பார்த்தசாரதி அவர்கள், ஐயா அவர்களின் இல்லம் சென்று நூல்களை பெற்று வந்து நூலகத்திற்கு மக்கள் பயன்பாட்டிற்கு வைத்து மகிழ்ந்தார். அதே போல் தமிழக முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள் நூல்களை அன்பளிப்பாக வழங்கிய மதுரை புதூர் அல்அமீன் மேல்நிலைப்பள்ளிக்கு நான் நூல்களை வழங்கினேன். அதையும் முகநூலில் பார்த்த ஐயா அவர்கள் தானும் நூல்களை வழங்க வேண்டும் என்றார். உடன் பள்ளியின் தலைமையாசிரியர் சேக் நபி அவர்களிடம் விவரம் கூறினேன். உடன் அவர் இந்திரா சௌந்தரராஜன் அவர்களின் இல்லம் சென்று நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை நன்கொடையாக பெற்று கல்வி பயன்பாட்டுக்கு நூலகத்தில் வைத்து மகிழ்ந்தார். இவ்வாறான நல்ல மனதுக்கு சொந்தக்காரர் தான் ஐயா இந்திரா சௌந்தரராஜன் அவர்கள். மிகச்சிறந்த பண்பாளரை இழந்து மதுரையே தவிக்கிறது.வாழ்வாங்கு வாழ்ந்தவர். அவருடைய எழுத்துக்களால் என்றும் வாழ்வார்
கருத்துகள்
கருத்துரையிடுக