படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா.இரவி !

எழுத்தாளர் வெ. இன்சுவை அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நம் மண் போற்றும் மாதரசிகள்- கட்டுரைகள் - வெ. இன் சுவை- ஒரு பார்வை-பொன்.குமார் சமூகம் என்பது ஆண்கள், பெண்களால் நிறைந்தது. ஆனாலும் சமூகம் ஆண் வயப் பட்டதாகவே உள்ளது. அதனால் ஆண்களைத் தூக்கிப் பிடித்தது. உயர்த்திக் காட்டியது. பெண்களைப் பற்றிய பேச்சுக்களும் எழுத்துக்களும் குறைவாகவே இருந்ததுடன் குறைத்தும் மதிப்பிட்டுள்ளன. பெண்கள் ஆண்களை விடவும் பேராற்றல் படைத்தவர்களாகவும் போற்றும் படியாகவும் பின் பற்றக் கூடியவர்களாகவும் வழி நடத்தக் கூடியவர்களாகவும் இருந்துள்ளனர். இருந்தும் வருகின்றனர். பெண்களை முன்னிறுத்தி ' நம் மண் போற்றும் மாதரசிகள் ' என்னும் தொகுப்பாக்கித் தந்துள்ளார் ஒரு பெண் படைப்பாளியான வெ.இன் சுவை " எந்த நாடு பெண்களுக்கு மரியாதை கொடுக்க வில்லையோ எந்த சமுதாயம் பெண்களை மேன்மைப் படுத்த வில்லையோ அந்த நாடும், சமுதாயமும் எப்போதும் உயர்வடைந்ததில்லை" என்று சுவாமி விவேகானந்தர் கூறியதை எடுத்துக் காட்டி தொகுப்பிற்குள் அழைத்துச் செல்கிறார். பெண்களுக்கு மரியாதைக் கொடுக்கச் சொல்கிறார். மேன்மைப் படுத்தச் சொல்கிறார். சமூகத்தில் பெண்களின் நிலையை உயர்த்திக் காட்டியுள்ளார். மதிக்கச் செய்கிறார். இராமாயணம் ஓர் இதிகாசம். ஒரு புராணம். கற்பனைக் கதை. இராமாயணம் பல நீதிகளைக் கூறுகிறது. கட்டுரையாளர் ' சீதா தேவி' யின் பண்புகளைப் பேசியுள்ளார். காட்டியுள்ளார். சீதாவின் கதையைக் கூறி கற்பே சீதைக்குக் காவல் என்கிறார். இதனால் "பெண்ணினத்திற்குச் சீதை வழி காட்டி" என்று அறிவுரைத்துள்ளார். இராமனின் மனைவி சீதை மீது ஆசைப் பட்டு இராவணன் கடத்தியதே இராமாயணம் ஆனது. பெண்ணாசையால் விளைந்த காப்பியம் ஆகும். இராவணன் மாற்றான் மனைவி மீது மயல் கொண்ட போது மாற்ற முய்ற்சித்தும் பலனில்லை. கணவனால் பாதிக்கப் படும் பெண்களின் பிரதிநிதியாக மண்டோதரியைக் கூறுகிறார். கணவனைத் தட்டிக் கேட்க இயலாமல் இருந்துள்ளாள் என்பதன் மூலம் மண்டோதரி போல் இன்றைய் பெண்கள் இருக்க வேண்டாம் என்கிறார். கற்பில் சிறந்தவள் கண்ணகியா சீதையா என்று பட்டி மன்றங்கள் நடத்தப் பட்டுள்ளன. இருவருமே கற்பில் சிறந்தவர்கள் என்று வெ. இன் சுவையின் தீர்ப்பு தெரிவிக்கிறது. 'கற்புக் கனல் கண்ணகி' என்று தலைப்பிட்டே எழுதியுள்ளார். கண்ணகியாக கற்புக்கரசியாக வாழ்வதுடன் ஒரு 'போராளியாக அநீதியை எதிர்த்துப் போராடவும் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார். கற்பினை பெண்கள் காத்தால் கற்பு பெண்களைக் காக்கும் என்பது கட்டுரையாளரின் கருத்து. கண்ணகியைப் பற்றி பேசியவர் கோவலனின் இரண்டாம் மனைவியான மாதவி குறித்து எதுவும் பேச வில்லை. சேற்றில் பூத்த செந்தாமரைப் போல் மாதவியும் ஒரு கற்புக்கரசியே. கோவலனுக்கும் கண்ணகிக்கும் வாரிசில்லை. கோவலனுக்கும் மாதவிக்கும் வாரிசாக பிறந்தவள் மணி மேகலை. தாய் கணிகை எனினும் தந்தை வியாபாரி எனினும் மணி மேகலை துறவு வாழ்க்கைய் மேற் கொண்டிருந்தாள். மணி மேகலைக்குக் கிடைத்த அரும் பாத்திரமாம் அமுத சுரபியை வைத்து பசிப் பிணியைப் போக்கும் பெரும் பணியைச் செய்தவள். மக்கள் வறுமையற்று இருக்கும் போதே மனித நேயம் நிலைக்கும் என்கிறார். பாரதப் பெண்மணிகளுக்கு ஓர் இலக்கணம், ஓர் அதிசயம் என்று மணி மேகலையை அடையாளப் படுத்துகிறார். "ஒரு பெண் தான் கொண்டுள்ள கருத்தில் உறுதியாக நின்றால் அவளால் எதையும் சாதிக்க முடியும்" என்பதை சத்தியவான் 'சாவித்திரி' கதையை வைத்து வலியுறுத்தியுள்ளார். எமனிடம் இருந்து கணவனைச் சாமார்த்தியமாக காப்பாற்றியதைத் தெரிவித்துள்ளார். சாவித்திரியைப் போல் மதி நுட்பமும் விடா முயற்சியும் கலங்காத தைரியமும் இன்றைய பெண்களுக்குத் தேவை என்கிறார் பெண்களின் கதையில் வித்தியாசமானது ' நளாயினி' கதை. ஒரு குடும்பப் பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதற்குச் சான்றாக நளாயினி உள்ளாள் என்பதைக் காட்டுகிறது. கணவன் மௌத்கல்யர் நளாயினியைப் பல சோதனைக்கு உள்ளாக்கியும் அவள் அன்பிலும் அரவணைப்பிலும் அனுசரணையிலும் மாறவே இல்லை. பெரு வியாதியை வரவழைத்துக் கொண்டார். கூடையில் வைத்து புண்ணிய தீர்த்தங்களுக்கு கொண்டு போகச் செய்தார். தாசியின் மேல் மோகம் கொண்டவராக நடித்தார். எந்நிலையிலும் அவள் உறுதியாகவே இருந்தாள். இல்லறம் இனிக்கவும் நல்லறமாக சிறக்கவும் நளாயினி போல் இருக்க வேண்டும் என்கிறார். இன்றைய' நிலையில் பெண்கள் இவ்வாறு இருப்பார்களா என்பது சந்தேகமே. உதாரணமே பயமுறுத்துவதாக இருக்கிறது. இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்தும் இறைவன் மேலே மிகுந்த பற்றுடையவராக இருந்தவர் காரைக் கால் அம்மையார். மற்ற பெண்களில் இருந்து மாறு பட்டது இவரின் வாழ்வு. இறையருள் பெற்றவர் என்பதால் கணவனும் கை விட்டு வேறு பெண்ணை மணந்து கொள்கிறான். அம்மையாரரோ இறைவனிடம் வேண்டி பேய் உரு பெறுகிறார். அழியாத பரம் பொருள் மீது பற்றுக் கொண்டவராகிறார். காரைக் கால் அம்மையாரை விட கடவுள் பெருமையே அதிகம் பேசப் பட்டுள்ளது. இறையருள் பெற்றவராக இருந்தாலும் இல்லறத்தில் இருந்து விலகாமல் சமணத்திற்கு மாறிய கணவனை மீண்டும் சைவத்திற்கு மாற்றிய பெருமைக்குரியவள் மங்கையர்க்கரசி. கணவனின் உள்ளக் கூனையும் உடற் கூனையும் நிமிரச் செய்தும் மக்கள் நெஞ்சில் இடம் பிடித்துள்ளார். கணவன் தடம் மாறினாலும் மங்கையர்க்கரசி போல் மனைவியர்கள் செயல் பட வேண்டும் என்கிறார். தம்பியை சமணத்தில் இருந்து மீட்டவர் திலக வதியார். இவர் குறித்தும் எழுதப் பட்டுள்ளது. தம்பிக்காக வாழ்ந்த தமக்கையாகவும் அறியப் படுகிறார். அறுபத்து நான்கு நாயன் மார்களில் திலக வதியார் இடம் பெறாதது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். தமயந்தி- நளன் கதையில் நளன் சந்தித்த துன்ப, துயரங்களுக்கு உடனிருந்த ஒரு பெண்ணாக தமயந்தி காட்டப் படுகிறாள். தவறுகளுக்கு தன்னையும் பொறுப்பாக்கிக் கொள்கிறாள். நளன் சூதாடி ராஜ வாழ்க்கை இழந்த போதும் குற்றம் சுமத்தாத பெருந் தன்மையாள். காரிருளில் காணாமல் போன கணவன் வேறுருவில் இருந்தும் கண்டறிந்தவள். பழி வாங்கா பண்புடையவள். தமயந்தியின் நற் குணங்கள் பெண்களுக்கு அவசியம் என்கிறார். காப்பியங்கள், புராணங்கள் ஆகியவற்றிலிருந்து பெண்களை எடுத்துக் காட்டியவர் வரலாற்றிலிருந்தும் சில உதாரண பெண்களைச் சான்றுகளாக்கிக் தந்துள்ளார். ராணி மங்கம்மாள் டில்லியில் அவுரங்க சீப் படை எடுத்த போதும் எதிர்த்து போராடியவள். அரசியல் பின் புலம் இல்லாத ஒரு பெண் மணி வரலாற்றில் இடம் பெற்றவராக திகழ்ந்தார் என்கிறார். ' மங்கம்மாள் சபதம் ' என்னும் செலவடையும் இதனாலே வந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். 'வெள்ளையரை எதிர்த்த வீரத் திருமகள் ' ஆக ஜான்சி ராணி லட்சுமி பாய் இந்திய வரலாற்றில் இடம் பெற்றுள்ளதைச் சுட்டிக் காட்டியுள்ளார். தன் நாடான ஜான்சியைச் சுதந்திர நாடு என்று துணிவுடன் பிரகடனப் படுத்தியவள். "புரட்சியாளர்களில் ஒரே ஆண் மகள்" என்றும் போற்றப் பட்டுள்ளாள். லட்சுமிபாயின் வீர வரலாற்றை பள்ளிகளில் பாடமாக வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளார். ஒரு மாற்றம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார். இந்திய சுதந்திர வரலாற்றில் குறிப்பாக தமிழக வரலாற்றில் தனித்த புகழுடன் விளங்குபவர் வீர மங்கை வேலு நாச்சியார். ஜான்சி ராணிக்கு முன்பே ஆங்கிலேயர்களை எதிர்த்த முதல் பெண். திக்கற்ற நிலையில் கணவனை இழந்த நிலையில் அரச போகத்தை இழந்த நிலையில் வேலு நாச்சியார் போராடி உள்ளார் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. இறுதியாக வேலு நாச்சியாரைப் போற்ற அழைப்பு விடுத்துள்ளார். ஆண்களின் ' தேசப் பற்று 'க்கு நிகரானது ராணி சென்னம்மாவின் தேசப் பற்று. சென்னம்மாவும் வெள்ளையரை எதிர்த்து போரிட்டுள்ளாள். ஒரு கட்டத்தில் சிறை பிடிக்கப் பட்டு இறை வழியில் ஈடு பட்டு உயிர் நீத்து வரலாறு படைத்துள்ளார். சென்னம்மாவைப் பற்றி சரித்திரப் பதிவாளர்கள் மற்ற வீராங்கனைகளைப் போல் எழுத வில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். பொதுவாகவே சரித்திரம் நேர்மையாக எழுதப்பட வில்லை என்னும் குற்றச்சாட்டும் பரவலாக உள்ளது. அன்னை ஸ்ரீ சாரதா தேவி பெயருக்கு தாய்மை உணர்வுக் கொண்டவள் என்றவர் அன்னை கஸ்துாரி பாயை பிடிவாதத்தையும் கொள்கையையும் விடாத ஒரு துறவியின் மனைவியான பெண் துறவி என்கிறார். காந்தியை விட கஸ்துாரியே சிறந்த அகிம்சா வாதி என்று உணரச் செய்துள்ளார். டாக்டர் முத்து லட்சுமியைப் பற்றி அறிந்திருந்தாலும் கட்டுரையாளர் முத்துவை வியக்கும் வண்ணம் அறியச் செய்துள்ளார். முத்து லட்சுமி முன் உதாரணம் என்றால் மிகை இல்லை. ஆண்களிடமிருந்து அதிகாரம் மாற்றம் பெற வேண்டும் எனில் பெண்கள் முத்து லட்சுமிகளாக மாற வேண்டும் என்பது வெ. இன்சுவையின் எண்ணம். கட்டுரையாளர் வெ. இன் சுவையின் முயற்சி பெண்களை முன்னேற்றச் செய்யும். புராணங்கள், இதிகாசங்கள் கற்பனை எனினும் பெண் பாத்திரங்கள் குறித்து ஆய்வுச் செய்து பெண்களுக்கு அவர்களின் சிறப்புக்களை எடுத்துக் கூறி அப் பண்புகளைப் பின் பற்ற வேண்டும் என்று வேண்டியுள்ளார். பத்தாம் பசலித் தனமாக சில பண்புகள் இருப்பினும் இன்றும் தேவையாகவே உள்ளன. பெண் அடிமைத் தனம் என்று புறக்கணிக்க வேண்டாம் என்கிறார். புராணம் என்றும் புறந் தள்ள வேண்டாம் என்கிறார். தொடரக் கூடாதததையும் தொட்டுக் காட்டியுள்ளார். கட்டுரையின் இறுதியில் கூறப் படும் செய்திக்காக, கருத்துக்காக எடுத்துக் காட்டுப் பெண்களின் கதையைச் சுருக்கமாக சொல்லியுள்ளார். அதற்காக இன்சுவை முழுக்கதையையும் தேடிப்படித்திருப்பது பாராட்டுக்குரியது. பெண்கள் முன்னேற வேண்டும் என்னும் எண்ணமே முன்னிற்கிறது. சைவ மதத்தைச் சார்ந்தவர் என்பதால் அதன் மீதான பிரியமும் வெளிப் பட்டுள்ளது. இன்சுவை ஒரு கட்டுரையாளர் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார். கட்டுரைக்கான மொழியிலும் ஓர் இன் சுவைக் காண முடிகிறது. பெண்களை எடுத்துக் காட்டுக்களாக காட்டிய கட்டுரையாளரும் ஓர் எடுத்துக் காட்டுக்குரியவரே. 'நம் மண் போற்றும் மாதரிசிகள்' தொகுப்பு மூலம் நம் மண் போற்றும் மாதரசியாக விளங்குகிறார் வெ. இன்சுவை. " இந்நூல் ஒரு சிறு விழிப்புணர்வை பெண்களிடம் ஏற்படுத்தினால் நான் அகமகிழ்வேன்" என்கிறார்.நிச்சயம் அக மகிழ்வார். இன்சுவை இறையன்புவின் சகோதரி ஆவார். வெளியீடு கவிதாபப்ளிகேசன்ஸ் சென்னை 600 017 பொன். குமார் 90033 44742

கருத்துகள்