ுன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழாத் தொடர்- 99*

குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழாத் தொடர்- 99* *அடிகளாரும் ஒருமைப் பாடும்.* அடிகளாரின் அமைதிப் பயணத்தால் மண்டைக்காட்டில் அமைதிப் நிலவியது. என்றாலும் இருமதத்தினர்க்கு இடையில் பகைமைத்தீ நீறு பூத்த நெருப்பாகக் கனன்று கொண்டுதான் இருந்தது. ஆனாலும் அடிகளார் ஓய வில்லை. அமைதிக்கான முயற்சிகளை இடையறாது செய்துகொண்டுதான் இருந்தார். இந்து முஸ்லிம் கிருத்தவ மதத்திடையே நல்லிணக்கப் போக்கை நடைமுறைப் படுத்தத் தன்னாலான முயற்சிகள் அனைத்தும் செய்தார். திருக்குறள் பைபிள் குரான் நூல்களை கசடறக் கற்றவர் அடிகளார். அந்நூல்களில் மதங்களைக் கடந்து வள்ளுவர் ஏசு நபிகள் நாயகம் போதித்த மனிதத்தை எடுத்துரைத்து ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற தத்துவத்தின் அடிப்படையில் ஒருமைப் பாட்டை உருவாக்க ஏற்படுத்தப் பட்ட அமைப்பே திருவருட் பேரவை. அமைதி காக்க அடிகளார் விடுத்த அறிக்கையில் " இந்திய சந்நியாசிகளுக்கு இன்றுள்ள அறைகூவல் மதங்கள் அல்ல. இராமர் கோவிலும் அல்ல. பாபர் மசூதியும் அல்ல. இன்று நமது நாட்டில் எழுதப் படிக்கத். தெரியாதவர்கள் 70 விழுக்காடு மக்கள் இருக்கிறார்கள். இவர்கள் அறியாமையில் மூழ்கிக் கிடக்கிறார்கள். 58.9 விழுக்காடு மக்கள் வறுமையில் விடுகிறார்கள். சராசரி அறிவே சரிவரப் பெறாதவனிடம் சமயத்தைப் பற்றிப் பேசி என்ன பயன்? முக்தி சொர்க்கம் பற்றிப் போதிப்பதுதான் துறவின் நோக்கமா? முக்தியின் இன்பம் நம் மக்களுக்கு விளங்குமா? கிழிந்த இலையில் உணவு படைத்துவிட்டு அறுசுவை உணவு படைத்து அழிபசி தீர்த்தேன் என்று ஆர்ப்பரிப்பது நியாயமா? துறவு என்றால் உடனே காவியும் கமண்டலமும் மட்டும் ஏன் நினைவுக்கு வருகிறது? தன்னலத்தைத் துறத்தல் சமூகத்தை நேசித்தல் நாட்டை மொழியை உயிர்குலத்தை நேசித்தல் உண்பித்து உண்ணுதல் உடுக்கக் கொடுத்து உடுத்தல் இதுதான் உண்மையான துறவு. துறவு புனிதமானது. தூய்மையானது. அந்தப் புனிதமும் தூய்மையும் மக்களின் தொண்டிற்கானது. மதப்போதர்கள் இதனை மனத்தில் கொள்ள வேண்டும். ( தொகுப்பு 15 பக்கம் 215) *அடிகளாரின் அறைகூவல்.* இந்திய நாடே எழுந்து நில்! அரசியல் சட்டம் உனக்கு வழங்கிய கடமைகளைப் போற்று! இந்தியாவில் வாழும் அனைவரும் ஒன்றே குலம். இவர்களுக்கு ஒருவனே தேவன். மதங்கள் வீட்டிற்குள்ளேயும் கோவில்க் குள்ளேயும் இருக்க வேண்டுமே தவிர வீதிக்கு வரக்கூடாது என்று உரத்த குரலில் ஒருமைப் பாட்டைக் கூறினார். நாளை தொடரும். காவியப் புலவர் புதுகை வெற்றிவேலன் தலைவர் உலகத் திருக்குறள் பேரவை செங்கல்பட்டு மாவட்டம்.

கருத்துகள்