தமிழ்மொழியின் தொன்மையும் சிறப்பும் - பகுதி 1
மொழி மக்களது உள்ளுணர்விலிருந்து தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுகளாக வளர்ச்சி பெற்று வரும் ஒரு கலையாகும். போலச் செய்தல் (Imitation )ஒப்புமையாக்கம் (Analogy) என்பன மொழியின் வளர்ச்சியில் சிறப்பிடத்தைப் பெறுகின்றன.
இவ்வுலகில் ஆறாயிரத்தைந்நூறுக்கும் மேற்பட் மொழிகள் இருப்பதாக மொழியியலார் கருதுகின்றனர். இவற்றுள் எழுத்துக்கள் உள்ள மொழிகள் 700க்கு உட்பட்டவை. தொடர்பு, அமைப்பு, பிறப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மொழிகளைப் பல மொழிக் குடும்பங்களாகப் பிரித்துள்ளனர். அவற்றுள் திராவிட மொழிக் குடும்பமும் ஒன்று.
இந்திய நில அமைப்பில் விந்திய மலைக்குத் தெற்கே உள் பகுதிகளில் பேசப்பெற்ற மொழிகள் திராவிட மொழிகளாகும். 'தமிழ்' என்னும் சொல்லிலிருந்து தான் 'திராவிடர்' என்ற சொல் பிறந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
தமிழ் => தமிழா => தமிலா => ட்ரமிலா => ட்ரமிடா => த்ராவிடா => திராவிட
இலக்கண, இலக்கியம் கொண்ட மொழிகளைத் திருந்தியமொழிகள் என்றும் இவை இல்லாத மொழிகளைத் திருந்தா மொழிகள் என்றும் கால்டுவெல் பாகுபடுத்தியுள்ளார். திருந்திய மொழிகளுள் தமிழ் வளமான இலக்கியமும் செம்மையான இலக்கணமும் கொண்ட தொன்மையான சிறப்புமிக்க மொழியாகும்.
1922இல் சிந்து ஆற்றங்கரையில் நிகழ்த்தப்பெற்ற அகழ்வாராய்ச்சியின் மூலம் சிந்துசமவெளி நாகரிகம் கி.மு. 3500லிருந்து கி.மு. 2750 வரை நீடித்திருந்ததாக அறியமுடிகிறது. அக்காலத்தில் இந்தியா முழுமையிலும் பழந்திராவிட மொழியை மட்டுமே பேசி வந்தனர். இம்மொழியைப் பேசிய ஒரே இன மக்களாகிய திராவிடரே அங்கு வாழ்ந்து வந்தனர். பழந்திராவிட மொழியிலிருந்து தான் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் முதலியன தோன்றின.
கி.மு.1200இல் கைபர் கணவாய் வழியாக ஆரியர் இந்தியாவுக்குள் நுழைந்தபோது ஆரிய மொழியாகிய சமஸ்கிருதமும் நுழைந்தது. இம்மொழியிலிருந்து தான் இன்று வட இந்தியாவில் பேசப்படுகிற இந்தி, பஞ்சாபி, வங்காளி, இராஜஸ்தானி, மராட்டி, குஜராத்தி, ஒரியா போன்ற பிற மொழிகள் தோன்றின. எனினும் ஆரிய மொழி வருவதற்கு முன்பே தமிழ் இங்கு அரியணையில் வீற்றிருந்தது. இத்தகைய தமிழின் தொன்மையைப் பல்வேறு சான்றுகள் மெய்ப்பிக்கின்றன.
---------
உங்கள் கட்டுரைகள், கவிதை தொகுப்புகள் , ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆகியவற்றை இந்த பக்கத்தில் நீங்கள் வெளியிடலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக