மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த தனது குழந்தையை அரசு பள்ளியில் சேர்த்த தேனி ஆசிரியர்!
கம்பம்:
அரசு பள்ளிகள் குறித்து பொதுமக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்த அரசு பள்ளியில் தனது மற்றும் உறவினர்கள் குழந்தைகளையும் சேர்த்த ஆசிரியரை பொதுமக்கள் பாராட்டினர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது அணைப்பட்டி கிராமம். இங்கு கடந்த 1924ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி ஆரம்பப் பள்ளி தொடங்கப்பட்டது. இன்னும் ஓரிரு மாதங்களில் இப்பள்ளி நூற்றாண்டை நிறைவு செய்ய உள்ளது. ஆங்கில வழி மற்றும் தனியார் பள்ளி மோகத்தினால் இப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியது. இந்த கல்வியாண்டில் மாணவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் மாற்று ஆசிரியர் பணிக்கு வந்த ஆசிரியர் சுந்தர் என்பவர் மாணவர்களை சேர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.
இதற்காக ஆட்டோ பிரச்சாரம் துண்டு பிரசுர விநியோகம் மாணவர்களுக்கு தமிழக அரசு செய்து வரும் நலத்திட்ட உதவிகள் குறித்து விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள் சந்தித்தும், கிராம சபைக் கூட்டத்தில் இது குறித்து வலியுறுத்தியும் வந்தார். இருப்பினும் நிரந்தர ஆசிரியர் இன்மை, ஓராசிரியர் பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் நிலை மாறவில்லை.
இந்த நிலையில் கிராம மக்களுக்கு அரசுப் பள்ளி குறித்த நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆசிரியர் சுந்தர் தனது குழந்தையையும், தனது உறவினர்கள் குழந்தைகளையும் இப்பள்ளியில் சேர்த்தார். இதன்படி சுந்தரின் குழந்தை புகழ் மதி, அவரது தங்கையின் குழந்தை கீர்த்தி சரண் ஆகியோர் 3ம் வகுப்பிலும், தம்பியின் குழந்தைகள் கவின் பாரதி 5ம் வகுப்பிலும், சர்வின் 1ம் வகுப்பிலும் சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதுகுறித்த ஆசிரியர் சுந்தர் கூறுகையில், "அரசு பள்ளியில் தரமான கல்வி அளிக்கப்படுகிறது. பல்வேறு சலுகைகளும், நலத் திட்டங்களும் உள்ளன. இவற்றை பொதுமக்களுக்கு உணர்த்தவும், நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் முன் மாதிரியாக தங்கள் குழந்தைகளை இங்கு சேர்த்துள்ளோம். ஏராளமான குழந்தைகள் இங்கு சேர இது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன்" என்று சுந்தர் கூறினார்.
கருத்துகள்
கருத்துரையிடுக