மதுரை மல்லிகைக்கு வணக்கம். 🙏🏻
மகாத்மா நினைவால் இன்று நுாற்றாண்டு விழாக்காணும்
"261 - ஏ, மேலமாசி வீதி, மதுரை - 1".
ராம்ஜி கல்யாண்ஜி இல்லம்.!
💐💐
1921 செப்டம்பர் 22ஆம் தேதி இதே நாளில்தான் வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த அந்த நடவடிக்கையை காந்திஜி மேற்கொண்டார். சட்டை யில்லாமல் அரையாடை புனைந்து அவர் பொது நடவடிக்கைகளுக்கு வந்தது இன்றுதான். சட்டையில்லாது இடுப்பில் ஒரு துணி மட்டும் அணிந்து கொண்டுதான் பின்னாட் களில் அவர், வைசிராய்களையும் பேரரரசர்களையும் சர்வாதிகாரி களையும் சந்தித்துப் பேசினார்.
செப்டம்பர் 22ஆம் தேதி காலையில் எழுந்து புறப்படும்போது, தன் அருகில் இருந்த விருதுநகர் பழனிக்குமாரு பிள்ளை என்ற தேசியத் தொண்டரை வேட்டியைப் பிடிக்கச் சொல்லி மடித்துக் கட்டினார். சட்டை அணியாமல் அந்த வேட்டி யுடன் மட்டுமே மதுரையில் நடைபெற்ற கூட்டத்திற்குச் சென்றார். அந்த இடம் இன்று காந்தி பொட்டல் என அழைக்கப்படுகிறது.
காந்தி தனது ஆடையைக் குறைத்துக் கொண்டவுடன் பொதுமக்கள் யாவரும் வியப்புடன் மகாத்மாவை உற்று நோக்கினார்கள்.
ராஜாஜி, டாக்டர் ராஜன் போன்ற காந்தியுடன் சென்ற தலைவர்கள், பொதுமக்கள் இது குறித்து என்ன நினைக்கிறார்கள் என்று உன்னிப்பாக கவனித்தார்கள்.
முதல் நாள் காந்தியை தலைப்பாகை, அங்கவஸ்திரத்துடன் பார்த்தவர்கள், மறுநாள் வெறும் இடுப்பு வேட்டியுடன் பார்த்தபோது மிகவும் வியப்படைந்
தனர். இந்தக் கூட்டங்களுக்கு டி.ஆர். பத்மநாப ஐயர், கிருஷ்ண குந்து ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
அங்கு கூடியிருந்த நெசவுத் தொழில் செய்யும் மக்களிடம் (சௌராஷ்டிர மக்கள்) குடிப்பழக்கம் இருப்பதை அறிந்த காந்தி, அவற்றை விட்டுவிட வேண்டுமென அறிவுரை கூறினார். இந்தக் கூட்டத்திற்குப் பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டு மேலூர், திருப்பத்தூருக்குப் சென்றார்.
இது குறித்து "என்னுடைய முழத் துண்டு" என்ற தலைப்பில் காந்தியே நவஜீவன் இதழில் விரிவாக எழுதினார்.
முதலில் இவ்வாறு சட்டையில்லாமல் வேட்டி மட்டும் கட்டிக்கொள்வதை ஒரு தற்காலிக நடவடிக்கையாகத்தான் அவர் மேற்கொண்டிருந்தார். ஆனால், பின்னர் அதுவே நிலைத்துவிட்டது. அவர் அதனைத் திட்டமிட்டுச் செய்யவில்லை.
மதுரை மண் காந்திஜியின் மனிதத்தை ஆடைக்குறைப்பின் வழியே அவரைத் திடப்படுத்திவிட்டது என்பது மட்டும் உண்மை.
கவிஞர் செ.திராவிடமணி கூடலூர்
கருத்துகள்
கருத்துரையிடுக