வாழை - திரை விமர்சனம்..,*
நேற்றிரவு நாங்கள் நான்கு நண்பர்கள் திரையரங்கு சென்று பார்த்தோம். நால்வருக்கும் இந்த திரைப்படம் குறித்து நாலு விதமான கருத்துக்கள். ஒரு தேர்ந்த படைப்பின் மீதான பார்வை, பல கோணங்கள் கொண்ட
கலவையாக தான் இருக்கும். என் பார்வையில் சில கருத்துகள் இங்கே. இதே பார்வை அனைவருக்கும் இருக்க வேண்டியதில்லை.
வாழை - தற்கால சினிமாவிலிருந்து வெகு தொலைவில் இருக்கும் ஒரு உலகத்தைச் சேர்ந்த மென்மையான இதயம் கொண்ட சிறுவன், தன் வயதுக்கு அப்பாற்பட்ட சுமையை தாங்கும் ஆழமான கதையை மையமாக வைத்து படைக்கப்பட்டிருக்கிறது. பள்ளி தோழமைகளான இரண்டு சிறுவர்களில் ஒருவன் ரஜினி ரசிகனாகவும், இன்னொருவன் கமல் ரசிகனாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கிடையேயான நட்புப் போட்டிகள், சில வேடிக்கையான கேலி கிண்டல்கள், விளையாட்டுத்தனமான கருத்து வேறுபாடுகள் என ரசிக்கும் படியான காட்சிகளுடன் படத்தின் முதல் பாதி நகர்கிறது.
பள்ளியில் தன் ஆசிரியர் மீது அபிமானம் கொள்ளும் சிறுவன் சிவணைந்தன், அவரது சகோதரி வேம்பு மற்றும் சோசலிச சிந்தனையாளரான கனி இருவருக்குமிடையான காதல்
மிக நயமாக சொல்லப்பட்டிருக்கிறது. சிறுவர்கள் தாமாக வலிந்து கிழித்த சட்டையை, ஆசிரியை தைத்து தருவதற்கு ஊதியமாக மருதாணி இலைகளை கேட்பதும், மருதாணி இலைகளை தன் தம்பி மூலம், கனிக்கு கரிசனமாக கொடுத்து அனுப்புவதும், மறுநாள் காலையில் வாழைத்தார் ஏற்றும் லாரியில் பயணிக்கும் போது இருவரும் மருதாணி இட்டு, சிவந்த கைகளை காட்டி புளங்காகிதம் கொள்வதும் அழகோ அழகு. அன்பை பகிர்தலில் மருதாணி, அச்சாணியாக வலம் வருகிறது..1990 களின் பிற்பகுதியில் நிகழ்ந்ததை 'வாழை' என்கிற படைப்பாக, அந்த காலகட்டத்தை தெளிவாக உயிர்ப்பித்து கொடுத்திருக்கிறார் மாரி செல்வராஜ். மிக நுணுக்கமாக சிந்தித்து, ரசனையுடன் படைத்ததற்கு பாராட்டுக்குரியவர். ஆரம்பக் காட்சிகள் பார்வையாளர்களை உடனடியாக தென் தமிழகத்திற்கு அழைத்துச் செல்கின்றன, பசுமையான வயல்களின் அழகிய நிலப்பரப்பு மட்டும் அல்ல, வறண்ட குளங்கள், படர்ந்த மரங்கள், பாறைகள் மற்றும் தூசி நிறைந்த கிராம சாலைகள், சுற்றி திரியும் பிராணிகள்
என இந்த படம் நம்மை கிராமப்புற
சூழலில் மூழ்கடித்து, நாம் அந்த
பாதைகளில் நடப்பது போன்ற
உணர்வை ஏற்படுத்துகிறது.
வாழை என்பது தமிழர்களின்
வாழ்வியலில் முக்கிய பங்கு வகிக்கும் பாரம்பரியமிக்க தாவரம்.
பெட்டிக்கடைகள், பழவியாபாரிகளிடம் இருந்து நம் கைக்கு எளிதாக கிடைத்து விடும் வாழைப்பழங்களுக்கு பின்னால் இப்படி ஒரு துயர்மிகு வலிகள் நம்
கண்களுக்கு அகப்படாமல் தொலை தூரத்தில் இருப்பதை, செல்லுலாய்ட் வாயிலாக நம் கண்முன் காட்டும் போது நாம் கலங்கி தான் போகிறோம்.
சிவணைந்தன் பள்ளி நடன நிகழ்ச்சிக்கு ஒத்திகை பார்த்து
திரும்புகையில், எதிர்பாராத
திருப்பத்தில் சிக்கி ஒட்டுமொத்த
கிராமத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் துயர் சம்பவம், பார்வையாளர்களை கண்ணீரில் ஆழ்த்துகிறது. படத்தின் இரண்டாம் பாதியின் பெரும்பகுதி , குறிப்பாக கிளைமாக்ஸ்,
உண்மையிலேயே நம்மை கனத்த இதயத்துடன் இருக்கையில் அமர செய்கிறது. பொதுவாக திரைப்படம் முடிந்தவுடன், வாசிக்க முடியாத அளவிற்கு சிறிய எழுத்துக்களில் திரை முழுவதும் ஓடும் அனைத்து தொழிற் நுட்ப கலைஞர்களின் பெயர்களை போடும் போதே, திரையரங்கில் இருந்து பாதி பேர் ஓடி விடுவார்கள். ஆனால்
இந்த படத்தின் இறுதி காட்சிகள்,
ஒருவரை கூட வெளியே செல்லாமல் இருக்க வைத்தது. அவ்வளவு கனமான காட்சிகள்.படத்தின் பெரும்பகுதி வசீகரமாக நகர்த்தப்பட்டாலும், வாழையின் இறுதி பகுதி, கற்பனை செய்ய முடியாத அதிர்ச்சியை தருகிறது. படம் முழுவதும், இதயத்தை வருடும் அனைத்து தருணங்களுக்கு அடியில், ஒரு நிலையான பயம் நம்மை சுற்றி பதுங்கி இருக்கிறது, அது ஒரு டைம் பாம் போல ஒரு கட்டத்தில் வெடிக்கும் போது நாமும் நொறுங்கி போகிறோம்.
அம்பேத்கரின் போதனைகளை, பொதுடைமை தத்துவத்தை
புரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், கிளைமாக்ஸ் யூகிக்க முடியாத அளவுக்கு நுட்பமாக சொல்லப்பட்டது, ஆழமாக நம் நெஞ்சை தொடுகிறது. உழைக்கும் கிராமத்து மக்களின் இயல்பான வாழ்க்கை பிரதிநிதித்துவத்தை, அனைத்து கலவையான உணர்ச்சிகளையும், ஒரு ஈர்க்கும் திரைக்கதையுடன், யதார்த்தமான உரையாடல்களுடன் படைக்கப்பட்ட கதாபாத்திரங்களுடன் நாமும் பயணிக்கிறோம். அவர்களின் மகிழ்ச்சியான மற்றும் துக்கமான சூழ்நிலைகளை உணர்கிறோம்.
"வாழை" படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும், கச்சிதமாக
நடித்திருப்பது படத்தின் வலிமைக்கு பங்களிக்கிறது. சிவணைந்தனாக நடித்த சிறுவன் பொன்வேலின் நடிப்பு அபாரம். இயக்குனர் அந்த சிறுவனுக்குள் இருந்த நடிப்பு திறமையை முற்றிலும் பிழிந்தெடுத்து விட்டார். கலையரசன், திரை நேரத்தில் ஆதிக்கம் செலுத்தாவிட்டாலும்,
உரிமைகளுக்காக வாதிடும்
இளைஞனாக குறிப்பிடத்தக்க
தாக்கத்தை ஏற்படுத்துகிறார். திவ்யா துரைசாமி, வேம்புவாக ஜொலிக்கிறார், கதைக்கு உணர்ச்சிகரமான ஆழத்தை சேர்க்கிறார். தேனி ஈஸ்வர் தனது ஒளிப்பதிவில் பசுமையையும், சுமையையும் கொண்டு வந்திருக்கிறார். டாப் கிளாஸ் ஒளிப்பதிவு மூலம் தனது திறமையை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார். சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் அபாரம். பல காட்சிகள் இசை அமைப்பின் மூலமாகவும்
சிறப்பாக இயக்கப்படுகின்றன.
வாழை படத்தை பார்த்து முடித்து, நண்பர்களுடன் திரைப்படம் குறித்து உதட்டளவில் உரையாடினாலும்,
பால்ய பருவத்தில் நாம் எவ்வளவு
ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்பதை என் உள்ளம் உணர்ந்ததை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
*இங்கிலாந்திலிருந்து*
*சங்கர் 🎋*
கருத்துகள்
கருத்துரையிடுக