வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி

வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி ***** இயக்குனர் மாரி செல்வராஜ், தன் வாழ்க்கையில் நடந்த உண்மை நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து படத்தை இயக்கி. தயாரித்தும் இருக்கிறார். பாராட்டுகள். படம் பார்க்கிறோம் என்பதையே மறந்து. நேரடியாக நிகழ்வுகளை பார்ப்பது போன்ற உணர்வை படம் பார்க்கும் அனைவருக்கும் ஏற்படுத்தி வெற்றி பெற்றுள்ளார். ‘வாழை’ பெயருக்கு ஏற்றபடி வாழைத்தாரை, காட்டில்இருந்து அதிக தூரம் சுமந்து வந்து லாரியில் ஏற்றிவிடும் மக்களின் துயரத்தை கண்முன் கொண்டு வந்துள்ளார். சிறுவன் சிவணைந்தன் பள்ளியில் படிக்கிறான். சனி, ஞாயிறு பள்ளி விடுமுறை, மற்ற விடுமுறை நாட்களிலும் வாழைத்தார் சுமக்க வேண்டும். வயதுக்கு மீறிய சுமை. இரண்டு தார்களை தலையில் சுமந்து நடந்து நடந்து வெறுப்பாகிறான். அப்பா பொதுவுடைமைக் கட்சிக்காரர். இளம்வயதில் சதியால் இறந்து விடுகிறார். அம்மாவும், அக்காவும் என குடும்பமே வாழைத்தார் சுமந்து வாழ்க்கையை நடத்துகின்றனர். பள்ளியில் படிக்கும்போது ஆசிரியையிடம் சில சேட்டைகள் செய்கிறான். எல்லோருடைய வாழ்க்கையிலும் அது உண்டு. ‘நீங்கள் அழகாக இருக்கீங்க’ என்று ஆசிரியையிடம் சொல்கிறான். படம் பார்க்கும் நமக்கும் சொல்லத் தோன்றுகிறது. இயல்பான மாணவ உணர்வை நன்கு பதிவு செய்துள்ளார். உடன் நண்பனாக வரும் சிறுவனும் நன்றாக நடித்துள்ளான், அனைவரும் கதாபாத்திரமாகவே வாழ்ந்து உள்ளனர்.எள்ளல் சுவை நகைச்சுவை வசனங்கள் நன்று . கனி, வாழைத்தார் தூக்க 1 ரூபாய் பத்தாது, அதிக பாரம், அதிக தூரம் 2 ரூபாய் கொடுங்கள் என்று கேட்க, தரகர் தர மறுக்க, ஏற்ற மறுக்க, வியாபாரி ரூ.1.50 தருகிறேன் என்கிறான். முடியாது இரண்டு ரூபாய் தந்தால் தான் லாரியில் ஏற்றுவோம் என்று சொல்ல, வேறு வழியின்றி வியாபாரியும் சம்மதிக்கிறான். இதை மனதில் வைத்து புரோக்கர், கனியை நீ இனி வாழைத்தார் அறுக்க வேண்டாம். வாழைத்தார் சுமந்து வேலை பார் எனச் சொல்கிறான். அதையும் ஏற்று வேலை பார்க்கிறான் கனி. சிவணைந்தன் அக்கா மீது சின்ன காதல். மருதாணி தந்து அனுப்புவது ரசனையான காதல் காட்சிகள். மொத்தத்தில் உழைக்கும் மக்கள் சுரண்டப்படுவதையும் படம் தோலுரித்துக் காட்டி உள்ளது. சிவணைந்தனாக நடித்துள்ள சிறுவன் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளான். அவனுக்கு தேசிய விருது வழங்கலாம். வாழைத்தார் லோடு உள்ள லாரி மீதே மக்களையும் ஏற்றி விடுகிறான் வியாபாரி. இரவில் விபத்து ஏற்பட்டு லாரி கவிழ்ந்து பலர் இறக்கின்றனர். இதில் கனி, சிவணைந்தனின் அக்கா உள்பட பலர் இறந்து விடுகின்றனர். சிவணைந்தன் பள்ளி ஆண்டுவிழாவில் ஆட பெயர் கொடுத்ததால். ஒத்திகை பார்க்க பள்ளிக்குச் சென்றதால் விபத்திலிருந்து உயிர் தப்பி விடுகின்றான். மொத்தத்தில் கூலித் தொழிலாளிகள், கூலித் தொழிலாளியாகவே இருக்கிறார்கள். பணக்காரன் மேலும் மேலும் பணக்காரன் ஆகிறான் என்பதை, அன்று நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு திரைப்படமாக்கி வெற்றி பெற்றுள்ளார். மாரி செல்வராஜ்-க்கு வேண்டுகோள் : இதுமாதிரியான படங்களை எடுங்கள். மசாலாப் படங்கள் இனி உங்களுக்கு வேண்டாம். அவ்வாறு எடுக்க கோடம்பாக்கத்தில் பலர் உள்ளனர். குடும்பத்துடன் சென்று பார்க்கக்கூடிய நல்ல படம். மனிதநேயம் விதைக்கும் மிக நல்ல படம். பாராட்டுகள். சில நாட்களாக மோசமான படங்கள் பார்த்து விமர்சனம் எழுதுவதையை நிறுத்தி விட்ட என்னை. எழுத வைத்த நல்ல படம். பாடல் ,இசை ,ஒளிப்பதிவு ,நடிப்பு அனைத்தும் சிறப்பு . . படத்தில் சிறுவன்தான் கதாநாயகன் .பெரிய கதாநாயகன் இல்லை பெரிய கதாநாயகி இல்லை அரங்குகள் அமைக்கவில்லை வெளிநாட்டுக்கு செல்லவில்லை ,கார்களை நொறுக்கவில்லை .சிறிய பட்ஜெட் படமதான் .பெரிய வெற்றி பெற்றுள்ளது .கோடிகள் செலவழித்து நட்டப்படும் தயாரிப்பாளர்களும் ,இயக்குனர்களும் கவனத்தில் கொள்ள வேண்டிய நல்ல படம் இது .பாராட்டுக்கள்

கருத்துகள்