கவிஞர் இரா. இரவியின்
கவிச்சுவை!
- வித்தகக் கவிஞர் பா. விஜய்
என்னுடைய மனம் நிறைந்த மதுரைக் கவிஞர், மண்ணின் மனம் கமழும் மறுமலர்ச்சி ஹைக்கூக்களை தன் பேனா விரல்களிலிருந்து பேரன்போடு படைத்து சமூக மாற்றத்திற்கு சத்தான கருத்துக்களை வழங்கிக்கொண்டே இருக்கும் இணையதள சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் அன்புக் கவிஞர் இரவி அவர்களுடைய 18ஆவது நூல் ‘கவிச்சுவை’ என்ற புத்தகப்பேழையை வாசித்தேன். முதல் நூலில் அரம்பித்து, இன்று 18ஆவது நூல் என்பது, ஒரு குறுகிய காலத்தில் நிகழ்த்தப்பட்ட பெருகிய சாதனை.
கவிஞர் இரவி அவர்களுடைய அன்பும் நட்பும் என்றும் எல்லோருடைய இதயத்திலும் நின்று, நிலைத்து, நீடித்து, நல்லுறவையும். நல்லுணர்வையும் நாற்றங்காலாய் பதிய விட்டுக் கொண்டிருக்கும் கிடைத்தற்கரிய வரம்.
மதுரை மண் என்ற வரலாற்று பூமியில், சங்கத்திலிருந்து சபை நெடுக சந்தன மணம் கமழும் முத்தமிழ்க் கவிதைகளை யாத்து, எத்தனையோ தமிழ்ப் புதையல்களைக் காத்து, வரலாறு நெடுக வாழ்வியல் படைப்புக்களை வார்த்துக் கொண்டிருக்கும் கவிஞர்களின் வரிசையிலே, இந்த அன்புக் கவிஞர் மதுரை இரவி அவர்களின் கவிதை பயணமும் தொடர்ந்து வெற்றிநடை போட்டுக் கொண்டிக்கிறது.
ஒரு அரசாங்க ஊழியராக, சுற்றுலாத்துறையின் உதவி அதிகாரியாக, அவருடைய செம்மார்ந்த பொறுப்பு மிகுந்த பணி அனைவராலும் மெச்சிப் பாராட்டப்படக் கூடியது. அப்படிப்பட்ட பணிச்சுமைகளுக்கு இடையிலும் இலக்கியப் பேரார்வத்தோடு, கவிதைத் தன்னார்வத்தோடு கவிஞர் இரவி அவர்கள் எல்லோரும் பிரமிக்கும் வகையில் எழுந்து நின்று இணையதள உலகில் ராஜநடை போட்டு கொண்டிருக்கிற ரகசியம், அவருடைய விடாப்பிடியான உழைப்பு, விழிஉறங்க நேரமின்றி நேசிக்கும் வாசிப்பு, ஹைக்கூ கவிதைகளின் மீது அவருக்கிருக்கும் தன்னிகரற்ற பிடிப்பு. இவைகள் தான் கவிதைப் பாதையில் ஒரு காற்றுக் குதிரையாய் அவரை பயணப்பட செய்து கொண்டிருக்கிற ரகசியங்கள்.
‘கவிச்சுவை’ வாசித்தேன். அவருடைய மற்ற படைப்புகளைப் போலவே ஏராளமான தளங்களிலே தன்னுடைய கவிதை நடவுகளை மிக செம்மையாக செய்திருக்கிறார்.
வானதி பதிப்பகம் புதிய படைப்பாளிகளை வளர்த்தெடுக்கும் படைப்புலகமாய் நின்று திகழ்கிறது. அந்த வரிசையிலே ஹைக்கூ கவிதைகளில் பல இளைய தலைமுறையினருக்கு முன்னோடியாய்த் திகழ்ந்து கொண்டிருக்கின்ற ஒரு அற்புத படைப்பாளி கவிஞர் இரவி அவர்களின் 18ஆவது நூலை வெளியிட்டு பெருமை சேர்த்திருக்கும் வானதி பதிப்பகத்திற்கும் என்னுடைய வாழ்த்துகளும் நன்றிகளும்.
கவிஞர் இரவி அவர்களுடைய இந்த கவிதைப் பயணம், ‘ஈரச்சாரலிலே நனைந்து வரும் இளங்காற்றின் சுகந்தம் போல்’ அவரைச் சுற்றி இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இலக்கிய அன்பர்களுக்கும் நிச்சயம் கவிதா திருப்தியை இலக்கிய மனங்களில் ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். என்றும் இருக்கட்டும் இந்த கவிதை தாகம், என்றும் வெல்லட்டும் கவிஞர் இரவியின் வேகம்.
இதயம் நிரம்பிய நட்புடன் வாழ்த்துகளுடன்,
பா.விஜய்
கருத்துகள்
கருத்துரையிடுக