கண்ணிலே அன்பிருந்தால்.......
படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி
ரவீந்திரநாத் தாகூர் தன்னுடைய கீதாஞ்சலியில் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார் .
நான் வீதியில் நின்று
கொண்டிருந்தபோது, தேவாதி தேவன் வலம் வந்தான். அவன் எல்லோரிடமும் கைகளை ஏந்திக் கொண்டே வலம் வந்தான்.
நான் என் பைக்குள் கையை விட்டேன். அதில் கொஞ்சம் தானியங்கள் இருந்தன. அவற்றில் ஒன்றிரண்டு மணிகளை மட்டும் அவன் கைகளில் போட்டுவிட்டு, மீதமிருந்த தானியங்களை என் பைகளில் போட்டேன்.
அப்படிப் போடுகிறபோதுகூட, அந்தத் தானிய மணிகளைக் கொடுக்க வேண்டி இருக்கிறதே என்று மனமில்லாமல் போட்டேன். அவன் சிரித்துக் கொண்டே போய்விட்டான். அவன் போன பிறகு, நான் என் பைக்குள் கையை விட்டு மணிகளை
எடுத்தேன்.
அதில் இரண்டு மணிகள் மட்டும் தங்க மணிகளாக மாறி இருந்தன. அப்போது நான் நினைத்துக் கொண்டேன், கையிலிருந்த அனைத்துத் தானியங்களையும் அவனிடம் போட்டிருக்கக் கூடாதா என்று.
எத்தனை மணிகளைத் தந்தாரோ அத்தனை மணிகள் மட்டுமே தங்கமாக மாறியிருந்தன. நாம் எதைத் தருகிறோமோ, அது பன்மடங்காகத் திரும்பி வருகிறது. எதைப் பதுக்கி வைக்கிறோமோ, அது மக்கி, புழுத்து போகிறது. நாம் கொடுக்கக் கொடுக்க நீரூற்றுப் போல் நம்மிடம் அன்பு ஊறுவதைப்
போல ஆஸ்தி ஊறுகிறது.
ஒரு சிறுவன் தங்க நகை செய்பவரை உற்றுக் கவனித்துக் கொண்டி ருந்தான். அவர் தங்கத்தை உருக்கிக்
கொண்டிருக்கும்போது அவரிடம் அந்தச்சிறுவன் கேட்டான்.
“நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?“ என்று.
“நான் தங்கத்தைத் துாய்மைப் படுத்திக்கொண்டிருக்கிறேன்“ என்று அவர் சொன்னார்.
“எப்படி துாய்மை செய்கிறீர்கள்?” என்று அவன் கேட்டான்.
“தங்கத்தில் இருக்கிற அழுக்குகளை எல்லாம் நீக்குகிற போது அது துாய்மையாகிறது“ என்றார் அவர்.
“அதை நீங்கள் எப்படிக் கண்டு கொள்வீர்கள்?“ என்று கேட்டான் அவன்.
“எப்போது இந்த தங்கத்தில் என் முகம் தெரிகிறதோ அப்போதுதான்
அது துாய்மையானது என்று கண்டு கொள்வேன்“ என்று அவர் பதில் சொன்னார்.
நம் உள்ளம் தங்கமாக மாறினால் அதில் அடுத்தவர்கள் பிரதி பலிப்பார்கள். நம் கண்களில் அன்பு தோன்றினால், அதில் மற்றவர்கள் பிரதிபலிப்பார்கள். இது தான் உண்மை.
முதுமுனைவர்
வெ.இறையன்பு இ.ஆ.ப., படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி
கருத்துகள்
கருத்துரையிடுக