படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா.இரவி !

முதல் மரியாதை: படம் ஓடாது என கைவிட்ட படம்.. ஆனால் தன்னம்பிக்கையுடன் ஜெயித்த பாரதிராஜா..! சிவாஜி கணேசன் நடிப்பில் பாரதிராஜா இயக்கத்தில் உருவான ஒரே திரைப்படமான முதல் மரியாதை திரைப்படம் ரிலீசுக்கு தயாரான போது இந்த படத்தை பார்த்த பிரபலங்கள் படம் நிச்சயம் ஓடாது என்று கணித்தனர். இந்த படத்திற்கு இசையமைத்த இளையராஜா கூட இந்த படம் பிடிக்கவில்லை என்று கூறினாராம். ஆனால் இந்த படத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த ஒரே நபர் பாரதிராஜா. அவரது நம்பிக்கை வீண் போகாமல் இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. முதல் மரியாதை திரைப்படம் கடந்த 1985ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியானது. இந்த படம் முதல் இரண்டு நாட்களில் கூட்டமே இல்லை. அதன் பிறகு விமர்சனங்களை பார்த்து திரையரங்குகளில் குவிந்தனர். 100 நாட்களுக்கு மேல் பல நகரங்களில் இந்த படம் ஓடியது. இந்த படத்தின் கதை நடுத்தர வயதை தாண்டிய ஒருவருக்கு வரும் மெல்லிய காதல் அந்த காதலால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனை, அந்த காதலுக்கு பின் உள்ள ஒரு பயங்கரமான கொலை என அழகிய காதல் மட்டுமின்றி சில திடுக்கிடும் திருப்பங்களுடன் கதை அமைந்திருக்கும். இந்த படத்தின் கதையை ஜெயகாந்தனின் ‘சமூகம் என்பது நாலுபேர்’ என்ற நாவல் அடிப்படையில் ஆர். செல்வராஜ் எழுதி இருந்தார். முதலில் சிவாஜி கணேசன் நடித்த கேரக்டரில் ராஜேஷை நடிக்க வைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் ராஜேஷ் படத்திற்கு பெரிய அளவில் வியாபாரம் ஆகாது என்பதால் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நடித்தால் நன்றாக இருக்கும் என பரிசீலிக்கப்பட்டது. ஆனால் எஸ்பிபி அப்போது பாடகராக பிசியாக இருந்ததால் அவரால் அதிக நாட்கள் கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை. இதனை அடுத்து தான் சிவாஜி கணேசன் அவர்களிடம் கதையை கூறி இந்த படத்திற்கு நடிக்க அவரிடம் ஒப்புதல் வாங்கினார் பாரதிராஜா. இதற்கு முன்னர் எந்த நடிகரிடமும் பாரதிராஜா முழுக்கதையையும் கூற மாட்டார். ஆனால் சிவாஜி கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவரிடம் மட்டும் முழுக்கதையையும் கூறியதாகவும் கூறப்படுவதுண்டு. அதேபோல் இந்த படத்தின் குயில் என்ற கேரக்டரில் நடிக்க ராதிகா முதலில் பரிசீலனை செய்யப்பட்டதாகவும் அதன் பின்னர்தான் ராதா இந்த படத்தில் வந்ததாகவும் கூறப்பட்டது. சத்யராஜ் அந்த காலத்தில் பிஸியாக இருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஒரே ஒரு நாள் மட்டும் நடித்துக் கொடுத்திருந்தார். அவருடைய காட்சி ஒரே நாளில் படமாக்கப்பட்டது. இந்த படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடிக்கப் போகிறேன் என்று ஆசை ஆசையாக வந்த வடிவுக்கரசிக்கு சிவாஜியை படம் முழுவதும் திட்டும் ஒரு கேரக்டர் என்றவுடன் அதிர்ச்சி அடைந்தார். முதலில் இந்த கேரக்டரில் நடிக்க மாட்டேன் என்று வடிவுக்கரசி சொன்னதாகவும் ஆனால் கேரக்டரின் முக்கியத்துவத்தை அவரிடம் உணர்த்தி இந்த படம் வெளி வந்தால் உங்களுக்கு மிகப்பெரிய புகழ் கிடைக்கும் என்று கூறிய பின்னரே சமாதானமாகி நடித்ததாகவும் கூறப்பட்டது. அதேபோல் வடிவுக்கரசி கேரக்டருக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தன. இந்த படத்தில் எம்ஜிஆரின் உறவினர் திலீபன்தான் முக்கிய கேரக்டரில் நடித்தார். அதேபோல் அவருக்கு ஜோடியாக நடித்த ரஞ்சனி நடித்தார். இருவருமே இந்த படத்தின் மூலமாகதான் அறிமுகமானார்கள். இந்த படத்தை எடுத்து முடித்தவுடன் பின்னணி இசை அமைப்பதற்காக இளையராஜாவிடம் போட்டுக் காட்டியபோது அவர் கடும் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்பட்டது. ஒரு வயதானவரின் காதலை திரைப்படத்தில் கூறினால் யார் பார்ப்பார்கள் என்றும் இந்த படம் நிச்சயமாக தோல்வி அடையும் என்றும் பாரதிராஜா கண்டிப்பாக நஷ்டம் அடைவார் என்றும் கூறினார். அதேபோல் பஞ்ச அருணாச்சலம் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் இந்த படத்தை பார்த்து இந்த படம் தேறாது என்ற கணித்தனர். ஆனால் பாரதிராஜா இந்த படத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். இளையராஜா இந்த படத்தின் கதை பிடிக்காவிட்டாலும் சூப்பராக இசையமைத்து இருப்பார். இந்த படத்தின் மிகப்பெரிய பலமே பின்னணி இசைதான். பின்னணி இசை போட்டு பார்த்தவுடன் இளையராஜா இப்போது ஓரளவுக்கு பரவாயில்லை படம் ஓடுவதற்கு வாய்ப்பு இருக்கு என்று கூறியதாகவும் தகவல் வெளியாகின. இந்த படத்தை எந்த விநியோகிஸ்தர்களும் வாங்க முன்வராததை அடுத்து பாரதிராஜாவே தமிழக முழுவதும் சொந்தமாக ரிலீஸ் செய்ததாக கூறப்படுகிறது. முதல் இரண்டு நாட்கள் படத்திற்கு கூட்டம் இல்லை என்றாலும் அதன் பிறகு மிகப்பெரிய அளவில் இந்த படம் வெற்றி பெற்றது. சிவாஜி கணேசனை முதல் முதலாக இயல்பாக நடிக்க வைத்தது பாரதிராஜா தான் என்ற பெயரும் கிடைத்தது. அதற்கு முன்னர் அவர் நாடகத்தில் நடித்தவர் என்பதால் ஓவர் ஆக்டிங் செய்வார் என்று கூறப்பட்ட நிலையில் முதல் முதலாக மிகவும் இயல்பாக ஒரு கேரக்டர் உண்மையாகவே இருந்தால் எப்படி இருக்குமோ, அப்படி நடித்திருப்பார். இந்த படத்தை பார்த்த சிவாஜி கணேசன் இந்த படத்தில் பாரதிராஜா என்ன கூறினாரோ அதை அப்படியே செய்தேன். எல்லா புகழும் பாரதிராஜாவுக்கே என்று கூறியதாகவும் கூறப்பட்டது. மொத்தத்தில் தோல்வியடையும் என அனைத்து பிரபலங்களும் கணித்த ஒரு படம், அனைத்து கணிப்புகளையும் தவிடுபொடியாக்கி மிகப்பெரிய வெற்றி பெற்றது. R Ravi Ravi 2ம.நே ·

கருத்துகள்