படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி.
இன்று புரட்சிக்கவிஞர் நினைவு நாள்..(21.04.1964)
புது ரத்தம் பாய்ச்சிய பெருங்கவிஞன் பாரதிதாசன்..!
அவர் எழுதிய கவிதைகள் வேண்டுமானால் புதுக்கவிதை பட்டியலில் வராமல் இருக்கலாம். எழுதியவை அனைத்தும் புத்தம் புது தமிழ் சொற கோவைகள்
தொழிற்சாலையை, `ஆர்த்திடும் எந்திரக் கூட்டங்களே' என்பார்... சிந்தனையை, `மண்டைச் சுரப்பு' என்பார்... இயற்கையை, `அழகின் சிரிப்பு' என்பார்... பெண்களை, `குடும்ப விளக்கு' என்பார்
இனவிடுதலை, மொழிப் பற்று, தமிழ் தேசியம், , பொதுவுடமை, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண் விடுதலை, சாதி மறுப்பு ஆகியவை பாரதிதாசன் கவிதைகளின் அடையாளங்கள். அதே சமயத்தில் இயற்கையை நேசித்தல் அவருடைய பெரும் அவா.
திராவிடக் கலை, இலக்கியத்தின் மையப்புள்ளியே பாவேந்தர் பாரதிதாசன்தான். பொதுவாக, தமிழில் கவிதைகளுக்கும் பாடல்களுக்கும்தான் உரை எழுதுவார்கள். ஆனால், தந்தை பெரியாரின் உரைகளுக்கெல்லாம் கவிதை எழுதியவர் பாவேந்தர் பாரதிதாசன். 1950-களில்தான் அரசாங்கம் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைப் பற்றி பேசியது; பிரசாரம் செய்தது. ஆனால், பெரியார் 1930-களிலேயே குடும்பக் கட்டுப்பாடு திட்டம் பற்றிப் பேசினார். `பிள்ளை பெறுவது என்பது, பெண்களின் கடமை அல்ல; அவர்களது உரிமை. அவர்களுக்கு விருப்பம் இல்லாவிட்டால் அவர்களை பிள்ளை பெற்றுக் கொள்ளச் சொல்லி வற்புறுத்தக் கூடாது’ என்றார் பெரியார். இதை, `காதலுக்கு வழிவிட்டு கருப்பாதை சாத்த / கதவு ஒன்று கண்டறிவோம் / இதில் என்ன குற்றம்...’ என 1937-ம் ஆண்டு கவிதை பாடினார் பாவேந்தர்.
1934-ம் ஆண்டு பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய, `இரணியன் அல்லது இணையற்ற வீரன்’ என்கிற அவரின் முதல் நாடகம், சென்னை விக்டோரியா மகாலில் நடைப்பெற்றது. நடித்தவர்கள் திராவிடக் கலைஞர்கள் நாடக மன்றத்தினர். தலைமை, தந்தை பெரியார். இந்த நாடகத்தை, 1948-ம் ஆண்டு அன்றைய அரசாங்கம் தடைசெய்தது. தடையை மீறி நாடகம் நடந்தது. அதனால் நாடகத்தில் நடித்த அத்தனை கலைஞர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். மூன்று மாதம் மூன்று வாரம் சிறைவாசத்துக்குப் பிறகு, 1948-ம் ஆண்டு டிசம்பர் மாதம் விடுதலையாகி வெளியே வந்தபோது, அவர்களை முதலில் செய்யாற்றில் வரவேற்றவர் தந்தை பெரியார். அங்கிருந்து ஊர்வலமாக வந்த நாடகக் கலைஞர்களை காஞ்சிபுரத்தில் வரவேற்றவர் அறிஞர் அண்ணா. இந்த நிகழ்வில் என்ன ஒரு முரண் என்றால், சுதந்திரம் வாங்கும் வரை ஆங்கிலேயர்கள் அனுமதித்த நாடகத்தை, சுதந்திரம் வாங்கிய ஒரே வருடத்தில் நமது ஆள்கள் தடைசெய்ததுதான்’’
திராவிட இயக்கத்திலிருந்து தமிழ்த் திரைப்படத் துறையின் முதல் நுழைவுகூட பாவேந்தர் பாரதிதாசன்தான். இவருக்குப் பிறகுதான் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் திரையுலகப் பிரவேசம் நடந்தது. 1937-ம் ஆண்டு வெளிவந்த `பாலாமணி அல்லது பக்கா திருடன்’ படத்தின் அத்துணை பாடல்களையும் எழுதினார் பாரதிதாசன். இதற்கு அடுத்ததாக எழுத்தாளர் வ.ரா-வின் கதையில் உருவான `ஸ்ரீராமனுஜர்’ படத்துக்கு அனைத்துப் பாடல்களையும் எழுதினார். அப்போது பாரதிதாசனிடம் `நீங்களோ பகுத்தறிவுக் கவிஞர். ஆனால், ஆன்மிகப் படமான ஸ்ரீராமானுஜர் படத்துக்குப் பாடல்கள் எழுதுகிறீர்களே?' என்று கேட்டபோது, ‘உனக்கு ஒண்ணு தெரியுமா? சினிமாவுல நுழையுறது அவ்வளவு சுலபம் இல்லை. என்னை நிலைநிறுத்திக்கிட்ட பிறகு பாரு, நான் நினைக்கிற படம் எடுக்கிறேன்’ என்றார். அதுபோலவே 1950-ம் ஆண்டு `பொன்முடி’ படத்தை எடுத்தார். முழுக்க முழுக்கப் பகுத்தறிவுச் சிந்தனைகளைக் கொண்ட படம் அது. அவரின் `எதிர்பாராத முத்தம்’ என்ற குறுங்காப்பியத்தின் தழுவல்தான் `பொன்முடி’ திரைப்படம். `எதிர்பாராத முத்தம்’ என்பது புதுவையில் நிலவிவரும் பிரெஞ்சுக் கலாசாரம். ஒருவரை ஒருவர் பார்த்ததும் முத்தமிட்டு முகமன் கூறி வணங்குவார். இதை மையமாக வைத்துதான் `எதிர்பாராத முத்தம்’ குறுங்காப்பியத்தை எழுதியிருப்பார் பாரதிதான். `பாவேந்தரின் `பொன்முடி’ படத்துக்கு முன்பே அண்ணாவின் `வேலைக்காரி’, `நல்லத்தம்பி’ படங்கள் உருவாகின’ என்பார்கள். ஆனால், வெளிவந்ததில் முதலாவது `பொன்முடி’தான். அந்த வகையில் தமிழ்த் திரைத் துறையின் முதலாவது திராவிட நுழைவு பாரதிதாசன்தான்.
இன்றைக்கும் தமிழர்களின் உணர்வுகளோடு கலந்துவிட்ட பல கவிதை வரிகளை எழுதியவர் பாவேந்தர்தான். `எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு,’ `கொலைவாளினை எடடா மிகக்கொடியோர் செயல் அறவே’, `தமிழுக்கும் அமுதென்று பேர்’... என்பன போன்ற வரிகள் இன்றைய இளைய தமிழ்த் தலைமுறையை எழுச்சியோடு வைத்திருக்கின்றன. 1942-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா `திராவிட நாடு' பத்திரிகையைத் தொடங்கியபோது, `தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்ற கவிதை வரிகளைத்தான், அதன் முகப்பு வரியாகப் போட்டார்’
இவை எல்லாம் பாரதிதாசனின் முதல் புத்தகமான `பாவேந்தர் பாரதிதாசன் கவிதை’ நூலில் உள்ள வரிகள்தான். 1937-ல் வெளிவந்த இந்த வெளியிட்டவர் குத்தூசி குருசாமியின் மனைவி குஞ்சிதம் குருசாமி. பெண்ணடிமைத்தனம் வேரோடிக் கிடந்த அந்தக் காலகட்டத்தில் ஒரு பெண்ணை தன் முதல் புத்தகத்தை வெளியிடவைத்துப் பெருமைப்படுத்தியவர் பாவேந்தர்.
கவிஞர், பகுத்தறிவுச் சிந்தனையாளர், சினிமாப் பாடலாசிரியர், தயாரிப்பாளர் என்ற பன்முகம்கொண்ட பாவேந்தர் பாரதிதாசன், புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் என்பது அவ்வளவாகப் பிரபலமாகாத செய்தி. பார்ப்பனர்களைத் திட்டும் பெரியார், ஒருமுறை திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரித் தாளாளரைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். `என்ன நீங்கள் பார்ப்பனரான அவரைப் புகழ்கிறீர்களே?’ என்று கேட்டதுபோது பெரியார் சொன்னாராம், `அவர் பெண்கள் படிக்க அல்லவா கல்லூரி நடத்துகிறார். அவரைப் பாராட்டாமல் வேறு என்ன செய்வது?’ என்றாராம். அதுபோலதான் பாரதிதான், கடைசிவரை பாரதியாரை `ஐயர்' என்றுதான் அழைத்துவந்தார். அதைக் குறித்து கேட்டபோது, `ஐயர் போல இங்கு யார் சிந்திக்கிறார்?’ என்றாராம்.
பாரதியாரைப் பரப்பியவர்களில் முக்கியமானவரான திருலோகச் சீத்தாராமோடு அதிகம் நெருக்கம் காட்டியவர் பாரதிதாசன். இத்தனைக்கும் திருலோகம் ஆத்திகவாதி. அவர் சாப்பிடுவதற்கு முன்பு திருநீறு பூசாமல் சாப்பிட மாட்டார். இது பாரதிதாசனுக்கும் தெரியும். ஒருமுறை பாரதிதாசன் வீட்டுக்கு திருலோகம் வந்திருந்தபோது, பக்கத்து வீட்டில் போய் திருநீறு வாங்கிவந்து கொடுத்திருக்கிறார் பாரதிதாசன்.
பாரதிதாசனின் கோபம் மிகப் பிரசித்தம். பலமுறை திருலோகச் சீதாராமைக் கோபித்திருக்கிறார். `உங்களுக்காக அல்ல உங்கள் தமிழுக்காக உங்களை ஏற்கிறேன்’ என்பாராம் திருலோகச் சீத்தாராம்.
மாற்றுச் சிந்தனை கொண்டோரையும் தன் தமிழால் மயக்கிய கவிக்குயில் பாவேந்தர் பாரதிதாசன் தமிழ்மொழியின் கம்பீர அடையாளங்களில் முக்கியமானவர்!
`அமட்டன் மீன்' என்ற பெயரில் புதுச்சேரி கடற்கரையில் விற்கப்பட்டு வந்த மீனை, சாதி இழிவுக்கு அடையாளம் என உண்ண மறுத்தவர். முட்டை விற்ற சிறுமியிடம், ‘சேரி முட்டை வேகாதே என்ன செய்ய?’ எனக் குறும்பாகக் கேட்டதாகவும் அந்தப் பெண் அதை உண்மை என நம்பி திகைத்ததையும் சொல்லி, பாட்டாகப் பாடியவர். அந்தச் சிறுமி முட்டை விற்கிறாளே தவிர அதை ஒருநாளும் வேகவைத்து உண்டவள் இல்லை. அதனால்தான் அது வேகுமா வேகாதா என்பதைக்கூட சொல்லத் தெரியாமல் திகைத்தாள் என்பார்.
சாதி பேதமற்ற, சுயமரியாதை உள்ள சமுதாயம் பாடின அவருடைய கவிதைகள். சினிமாவில் பாட்டெழுத வந்தபோது, ஓர் இசைமைப்பாளர், ‘‘மானே என்ற வரி உதைக்கிறதே’’ என்றபோது வெகுண்டெழுந்தார். ‘‘மான் உதைக்காதடா மடப் பயலே. கழுதைதான் உதைக்கும்’’ எனக் கிளம்பிப் போனவர்.
நவீன எழுத்தாளர்களின் வேடந்தாங்கலாக இருந்தது மணிக்கொடி இதழ். 1930-களில் அந்த இதழின் அட்டைப் படக் கவிதைகளாகவும் பாரதிதாசனின் கவிதைகள் இடம்பெற்றன. பலரையும் எள்ளி நகையாடி விமர்சிக்கும் எழுத்தாளர் புதுமைப்பித்தன், இவருடைய கவிதைகளைக் கொண்டாடி மகிழ்ந்தார். ‘யாப்பு அறிந்த பலரிடம் கவிதை இருப்பதில்லை. இவர் கவிதைகளில் புதுமையான சொற் பிரயோகங்கள் ஆச்சர்யமூட்டுகின்றன. மனிதர் தமிழ் மீது வைத்திருக்கும் பற்று மகத்தானது...’ என்றெல்லாம் சிலாகித்து மகிழ்கிறார்.
‘தமிழுக்கும் அமுதென்று பேர்’, ‘பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைந்தால் சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு’ எனவும் தமிழ் உணர்வைப் போற்றிப் பாடியவர். பெரியாரை, ‘தொண்டு செய்து பழுத்த பழம்’ என வர்ணித்திருப்பதில்தான் எத்தனைக் கனிவு... தெளிவு!
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ்க் கவிஞர் பாரதிதாசன் நினைவுநாள் இன்று.
பாரதிதாசன் தமிழ்க் கனவை பறைசாற்றும் கவிதை இது:-
எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்.
இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்.
வெளியுலகில், சிந்தனையில் புதிது புதிதாக
விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெலாங் கண்டு
தெளியுறுத்தும் படங்களொடு சுவடியெலாம் செய்து
செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்.
எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை என்றால்
இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்.
-படித்ததில் பகிர்ந்தது- புலவர் ஆ.காளியப்பன்
கருத்துகள்
கருத்துரையிடுக