தகவல் உதவி இனியநண்பர் ஹிதாயத் துபாய்.
*சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய ஆற்றல் வளர்க்க விரும்பு! நிகழ்ச்சி*
தமிழ்மொழி விழா 2024இன் ஓர் அங்கமாக, வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை)யின் ஏற்பாட்டில் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய உள்ளரங்கில், 20 ஏப்ரல் 2024 அன்று “ஆற்றல் வளர்க்க விரும்பு!” எனும் நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது.
சிறந்த எழுத்தாளரும் தன்முனைப்பு பேச்சாளருமான முனைவர் வெ. இறையன்பு அவர்கள் ஆற்றல் வளர்க்கும் வழிகளை கருப்பொருளாகக் கொண்டு சிறப்புரையாற்றினார். ஜூரோங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டான் வு மெங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
சிங்கப்பூரின் தந்தை திரு லீ குவான் யூ அவர்களின் நூற்றாண்டினை முன்னிட்டு சென்ற ஆண்டு மாணவர்களின் எழுத்தாற்றலை வளர்க்க “நவீன சிங்கப்பூரை நிர்மாணித்ததில் திரு லீ குவான் யூ அவர்களின் தொலைநோக்குப் பார்வை” என்ற தலைப்பில் தேசிய அளவிலான கட்டுரைப் போட்டியை இச்சங்கம் நடத்தியது.
கட்டுரைப் போட்டியில் கலந்துகொண்ட தெமாசெக் தொடக்கக் கல்லூரி மாணவி சித்வியா சிதம்பரம் முதல் பரிசு பெற்றார். செயின்ட் ஜோசப் கல்வி நிலைய மாணவர் ராகுல் சிங்காரம் செந்தில்குமார் இரண்டாம் பரிசும், நீ ஆன் பலதுறை கல்லூரி மாணவி முஹம்மது காமில்தீன் சமிஸ்ஜஸ்ரா மூன்றாம் பரிசும் பெற்றார். தேசிய தொடக்கக் கல்லூரி மாணவர் லோகேஷ் பிரணாவ் கார்த்திக், தேசிய தொடக்கக் கல்லூரி மாணவி வசுந்தரா, செயின்ட் கேப்ரியல் உயர்நிலைப் பள்ளி மாணவர் அப்துல் கபூர் முஹம்மது அஸ்லம், குவோ சுவான் பிரெஸ்பிடேரியன் உயர்நிலைப் பள்ளி மாணவர் வல்லாளன் சரண், தமிழ் வாழ்த்துப் பாடிய யூனோய தொடக்கக் கல்லூரி மாணவி அனுமிதா முரளி, பொதுக்கல்வி உயர்நிலைத் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற விக்டோரியா தொடக்கக் கல்லூரி மாணவி ராஜகுமார் நிரஞ்ஜனா ஆகியோருக்கு சிறப்பு விருந்தினர் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி ஊக்குவித்தார்.
சிங்கப்பூர் ஜாமியா அறநிறுவனத்தில் சமய நல்லிணக்கப் பணிகளுக்கான முதன்மை இயக்குநராக பணியாற்றிவரும் எழுத்தாளர் முனைவர் எச் . முஹம்மது சலீம் அவர்களுக்கு, அன்னாரின் சமூக சேவைகளையும் இலக்கியப் பணிகளையும் பாராட்டி உயரிய “ஜமாலியன் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது.
சங்கத்தின் தலைவர் முனைவர் மு. அ. காதர் ஆற்றிய வரவேற்புரையில் “தமிழ் மொழியை நமது விழி போல காப்போம்; சிங்கப்பூரை விழிப்புணர்வோடு காப்போம்” என்று குறிப்பிட்டார். சங்கத்தின் செயலவை உறுப்பினர் திரு. நூ. அப்துல் மாலிக் நிகழ்ச்சி நெறியாளராக தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில் சமூகத் தலைவர்கள், பெற்றோர், மாணவர்கள், பொதுமக்கள், சங்கத்தின் உறுப்பினர்கள் உட்பட சுமார் 300 பேர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 2010ஆம் ஆண்டு சிங்கப்பூரில் துவங்கப்பட்ட ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம், கடந்த 14 ஆண்டுகளாக கல்வி சார்ந்த சமூக நலப்பணிகளை ஆற்றிவருவதை பிரதான நோக்கமாக கொண்டு, இதுவரை 135 நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
கருத்துரையிடுக