படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா.இரவி !

கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு அழுகிறார் குமரி முத்து. - by John Durai Asir Chelliah, 2016 ல் இறந்து விட்ட குமரி முத்து, எப்போதோ தொலைக்காட்சிக்கு அளித்த ஒரு பேட்டி அது. அதில் விவேக் பற்றியும் ஒரு சில விஷயங்களை சொல்லியிருக்கிறார். குமரி முத்துவின் கடைசிப் பெண்ணுக்கு கல்யாணமாம். ஆனால் அப்போது அவர் கையில் போதுமான அளவு பணம் இல்லையாம். அந்த நேரத்தில் இலங்கையில் ஒரு கலை நிகழ்ச்சிக்கு அழைத்திருக்கிறார்கள். 50 ஆயிரம் ரூபாய் தருவதாக பேசியிருக்கிறார்கள். சரி எனச் சொல்லி விட்டார் குமரி முத்து. அடுத்ததாக நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கேட்ட கேள்வி: "விவேக்கையும் அழைத்து வர முடியுமா ?" விவேக்கிடம் போயிருக்கிறார் குமரி முத்து. விஷயம் முழுவதையும் சொல்லி இருக்கிறார். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்த விவேக், அதன்பின் கேட்டிருக்கிறார். "உங்களுக்கு ஐம்பதாயிரம் சரி. எனக்கு எவ்வளவு கொடுப்பார்கள்..?" எப்படியாவது விவேக்கை சம்மதிக்க வைத்து விட வேண்டும் என நினைத்து, இரண்டு லட்சம் ரூபாய் வாங்கித் தருவதாகச் சொல்லியிருக்கிறார் குமரிமுத்து. 'அப்படியானால் சரி' என்று சம்மதித்தாராம் விவேக். நிகழ்ச்சி நல்லபடியாக நடந்து முடிந்தது. ஐம்பதாயிரம் ரூபாயை கொண்டு வந்து குமரிமுத்துவிடம் கொடுத்திருக்கிறார்கள் நிகழ்ச்சி அமைப்பாளர்கள். "விவேக் சார் எங்கே" என்று கேட்டிருக்கிறார்கள். விவேக் தங்கியிருந்த அறைக்கு அவர்களை அழைத்துச் சென்றாராம் குமரிமுத்து. பேசியபடியே இரண்டு லட்சம் ரூபாயை விவேக் கையில் கொடுத்து இருக்கிறார்கள். புன்னகையுடன் அதை வாங்கிக் கொண்ட விவேக், சற்று தள்ளி நின்ற குமரிமுத்துவை அருகில் அழைத்தாராம். தன் கையிலிருந்த இரண்டு லட்ச ரூபாயை அப்படியே குமரி முத்துவின் கையில் கொடுத்துவிட்டாராம். எதுவும் புரியாமல் விவேக்கை பார்த்திருக்கிறார் குமரிமுத்து. விவேக் புன்னகை மாறாமல் சொன்னாராம். "உங்க பொண்ணு கல்யாணத்தை நடத்தமுடியாமல் பணக்கஷ்டத்தில் இருப்பதாக சொன்னீர்களே, இதையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். கல்யாணத்தை நல்லபடியாக நடத்துங்கள். இதற்காகத்தான் நீங்கள் கேட்டவுடன் நான் இந்த நிகழ்ச்சிக்கே வர சம்மதித்தேன்." "வாழ்க்கையில் சந்தோஷம் தாங்காமல் நான் அழுதது அதுதான் முதல் முறை" என்று அந்த பேட்டியில் சொல்லியிருக்கிறார் குமரிமுத்து. சினிமாவில் மட்டுமல்ல. நிஜ வாழ்க்கையிலும் தன்னை சுற்றி இருந்த எல்லோரையும் கவலைகளை மறந்து சிரிக்க வைத்து, ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து முடித்து விட்டுப் போயிருக்கிறார் விவேக். (17 ஏப்ரல் 2021) நன்றி John Durai Asir Chelliah, (மீள் பதிவு)

கருத்துகள்