இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.

இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை. வெளியீடு : வானதி பதிப்பகம், தி. நகர், சென்னை – 600 017. பக்கங்கள் : 92 (மே 2023) விலை : ரூ.100 பேச 044 24342810 . 24310769. மின் அஞ்சல் vanthipathippagam@gmail.com ***** கவிஞர் இரா.இரவி அவர்கள் சிறந்த ஹைக்கூ கவிஞர். இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றாற்போல் அவருடைய கவிதைகள் மிகவும் எளிமையாகவும் அர்த்தமுள்ளதாகவும் உள்ளது. இணையத்தின் மூலமாக தமிழின் பெருமையை எடுத்துரைத்தவர். வாழ்க்கையை இனிமையாக மாற்றுவது காதல். காதல் என்ற அழகான உணர்வு இல்லையெனில் இவ்வையகம் போர்க்களமாக மாறியிருக்கும். இப்படிப்பட்ட இனிமையான உணர்வை நமக்கு கவிதை வடிவில் அர்ப்பணித்துள்ளார் கவிஞர் இரா.இரவி அவர்கள். “நெடிலில் தொடங்கி மெய்யில் முடியும் மெய் காதல்” இந்த இரு வரிகளிலேயே காதலின் முழு அர்த்தத்தையும் நமக்கு கவிதை வடிவில் எளிமையாகக் கொடுத்துள்ளார். காதலியின் அருமை பெருமையை அழகாக எடுத்துரைத்து உள்ளார். “மனம் செம்மையாகும் குணம் சீராகும் தீய பழக்கங்கள் தூர விலகும்”. காதலினால் ஏற்படும் நன்மையை இவ்வாறு கூறியுள்ளார். “முடியாதவை முடித்திட உதவும் தெரியாதவை தெரிந்திட உதவும்” விழியின் வழியே தான் காதலர்கள் அதிகம் பேசிக்கொள்வதை இவர்கள் மூலம் உணரலாம். “அவளை நான் பார்த்த நேரமும் என்னை அவள் பார்த்த நேரமும் தான் அதிகம்!” காதல் உணர்வு ‘நினைத்தாலே இனிக்கும்’ என்பதற்கு இணங்க இக்கவிதை அமைந்துள்ளது. “சுவைத்தால் தான் இனிக்கும் செய்த இனிப்பு நினைத்துப் பார்த்தாலே இனிக்கும் இனிய காதல்!” காதலுக்கு நிறம், அழகு முக்கியம் இல்லை என்பதை கவிஞர் இரா.இரவியின் இக்கவிதைகளால் அறியலாம். “அவளுக்கு உவமை அவனியில் இல்லை” காதலியை பற்றி இவ்வளவு அழகாகவும் எளிமையாகவும் கவிதை கூறியுள்ளார் கவிஞர் இரா.இரவி அவர்கள். காதலியை பற்றி கவிதை வடிவில் இக்காலத்திற்கு ஏற்றாற்போல் கவிதை அளிப்பதில் கவிஞர்க்கு இணை கவிஞர் மட்டுமே. “என்னவள்! கால் முளைத்த தாஜ்மகால் என்னவள் நடமாடும் நயாகரா என்னவள் கூந்தல் உள்ள குற்றாலம்” சொல்லிக் கொண்டே போகலாம் கவிஞர் இரா.இரவி அவர்களின் கற்பனை வளத்தை. இன்றைய காலத்திற்கு ஏற்றாற்போல அழகாகவும் அதே சமயத்தில் மிக எளிமையாகவும் கவிஞர் இரா.இரவி அவர்கள் கவிதைகளை நமக்கு தந்துள்ளார். கவிதை என்றாலே சுகமானது. அதிலும் காதல் கவிதைகள் என்றால் சொர்க்கமானது. காதல் இல்லையென்றால் இவ்வுலகில் எதுவும் இல்லை. அன்பின் உச்சம் காதல். இன்னும் பல கவிதைப் புத்தகங்கள் நமக்கு கவிஞர் இரா.இரவி அவர்கள் அளிக்க வேண்டும் என்றும், இவருடைய படைப்புகள் இவ்வுலகிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கவும் வாழ்த்தி வணங்குகிறேன். மிக்க நன்றி.

கருத்துகள்