படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா.இரவி !

மதுரையில் மற்றொரு பல்லுயிர் தளம் இடையப்பட்டி. அரிட்டாபட்டியை தொடர்ந்து கடலூர் - சேந்திரக்கிள்ளை கோயில்காடு, கிருஷ்ணகிரி - குரியனப்பள்ளி, திண்டுக்கல் - காசம்பட்டி கோயில்காடு , மதுரை இடையபட்டி கோயில்காடு ஆகிய நான்கு இடங்களை பாரம்பரிய பல்லுயிரிய தளமாக அறிவிக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த இருப்பதாக (11.01.2024) இன்றைய தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது . இடையபட்டி கோயில்காடு பாரம்பரிய பல்லுயிரிய தளமாக அறிவிக்கபட இருப்பதாக அண்மையில் தினமலர் நாளிதழும் செய்தியாக வெளியிட்டு இருந்தது. இடையபட்டி வெள்ளிமலை கோயில்காடு பாதுகாக்கப்பட கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகளை இடையபட்டி, தெற்காமூர் , சொருக்குளிப்பட்டி உள்ளிட்ட கிராம இளைஞர்களும் மக்களும் மேற்கொண்டனர். மதுரை இயற்கை பண்பாட்டு மையம் போன்ற பல்வேறு மக்கள் நல அமைப்புகளும் இந்த முயற்சிக்கு பங்களிப்பை செலுத்தினார்கள். வெள்ளிமலை கோயில்காட்டின் பல்லுயிரிய சூழலை மதுரை இயற்கை பண்பாட்டு மையத்தின் நண்பர்கள் ஏற்கனவே ஆவணம் செய்திருந்தார்கள். இடையபட்டி வெள்ளிமலை கோயில், அதன் வழிபாடு, பிற்கால பாண்டியர் கல்வெட்டு என்று வரலாறு, பண்பாடு சார்ந்த விசயங்களை என் ஆய்வில் மூலம் வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு பண்பாடு மற்றும் பல்லுயிரிய ஆவணங்களை ஆய்வறிக்கையாக மதுரை இயற்கை பண்பாட்டு மையம் சார்பாக அரசுக்கும் சமர்பித்தோம். அதன் பின் ஊர் மக்களும், மக்கள் நல அமைப்புகளும் அமைச்சர்களை, அரசு அதிகாரிகளை சந்தித்து தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். வெள்ளிமலை கோயில்காடு பாரம்பரிய பல்லுயிரிய தளமாக அறிவிக்கப்படலாம் என்கிற செய்திக்கு பின் பல நல்லுள்ளங்களின் உழைப்பு இருக்கிறது. அந்த கூட்டு முயற்சியில் என்னளவிலான சிறிய பங்கும் இருப்பதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது. பாரம்பரிய பசுமை பரப்பையும் பல்லுயிரிய சூழலையும் காக்கும் தமிழ்நாடு அரசின் இந்த முயற்சியை நன்றியோடு பாராட்டுகிறேன். அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருமென்று எல்லோரையும் போல நானும் காத்திருக்கிறேன். இடையபட்டி பல்லுயிரிய தளமாக அறிவிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்த கடம்பமுனி, வெள்ளி மலையாண்டி முருகன், கல்வெட்டு(கல்வெட்டு விவரங்களை வாசித்து அளித்தவர் தொல்லியல் மூத்த அறிஞர் சொ.சாந்தலிங்கம் ஐயா), தேவாங்கு போன்றவைகளின் புகைப்படங்கள் சில. பேரா ப.தேவி அறிவு செல்வம், மதுரை.

கருத்துகள்