கட்டுரைக் களஞ்சியம்!
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!
நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர். சென்னை-600 017.
பக்கங்கள் : 206 விலை : ரூ.200
தொலைபேசி 044-24342810, 24310769.
மின்னஞ்சல் Vanathipathippakam@gmail.com
*****
கவிஞர் இரா.இரவி அவர்களின் 31-வது நூலான கட்டுரைக் களஞ்சியம் என்ற நூலைப் பார்த்ததுமே 206 பக்கங்களை படிப்பதற்காக நேரம் ஒதுக்க வேண்டுமென எண்ணியபடியே நூலை ஓரமாய் வைத்து விட்டு பணியை விரைவாய் முடிக்க எழுந்தேன். மின்விசிறியின் காற்று, நூலை தானாக விரித்துவிட, அதில் தெரிந்த கக்கன் ஜீ-யின் முகம் கண்டு ஒரு நொடி புரட்டினேன். பின்பு தான் தெரிந்தது ஒரு மணிநேரம் ஓடிப்போன விபரம். பணி அப்படியே இருந்தது, ஆனால் நூலைப் படித்து முடித்து விட்டேன்.
நூலில் 38 தலைப்புகளில் கட்டுரைகள் அரிய தகவல்களுடன் அமைந்துள்ளது. அதிலும் கவிஞர் அவர்கள், வள்ளுவருக்கே ஏழு தலைப்புகளை ஒதுக்கியிருக்கிறார். ஏழு சீர் கொண்டு சொன்ன வள்ளுவரையும் திருக்குறளையும் ஏழு தலைப்பு கொடுத்து பெருமைப்பட வைத்துள்ளார்.
நான் மேலூரில் வசிப்பதால் கக்கன் ஜீ-யைப் பற்றி வாசிக்கும்போது பெருமை எனக்குள் முகாமிட்டுக் கொண்டது. மு.வ. பற்றிய கட்டுரை மிக மிக அருமை. திரு.வி.க. அவர்கள் மு.வ. இல்லம் வந்தபோது துப்பிய விதையால் முளைத்த மாதுளம் மரத்தை நேசித்து மு.வ. பாதுகாத்து வந்த செய்தி வாசிப்போரை நெகிழ வைக்கிறது.
கு. ஞானசம்பந்தன் ஐயா, இரா.மோகன் ஐயா, மணிமொழியன் ஐயா அவர்களை நானும் நேரில் பார்த்து உரையாடி இருப்பதால் படிக்கும்போது மனம் மகிழ்ச்சியாய் இருந்தது.
பெருமைமிகு கலாம் பற்றியும், இறையன்பு ஐயா பற்றியும், கவிஞர் இரா.இரவி அவர்கள் எல்லா நூலிலும் எழுதி அவர்களுக்கு ‘எழுத்துமாலை’ அணிவிப்பது வழக்கம். அது இந்நூலிலும் தொடர்ந்துள்ளது மிகவும் பெருமை.
குன்றக்குடி அடிகளார், நர்த்தகி நட்ராஜ் போன்றவர்களோடு வானதி பதிப்பக வானதி இராமநாதன் அவர்களுக்கு நன்றி செலுத்தி கவிஞர் இரா. இரவி அவர்கள் தனது பண்பை உறுதிப்படுத்தி விட்டார்.
‘தமிழ்வளர்ச்சியில் குறும்பாக்களின் பங்கு’ என்ற கட்டுரையில் கவிஞர் நவதிலக் எழுதிய
தமிழ் இனிமை
அம்மா
இருப்பதால்!
என்ற கவிதை மிக எளிமையானதாக தோன்றினாலும், ஒவ்வொருவரின் மனதையும் விட்டு அழியாது.
புதுவை தமிழ்நெஞ்சன் அவர்களின் புதல்வி கு.அ. தமிழ்மொழி அவர்களின் கவிதையான
வரவேற்றது / தமிழனின் இல்லம் / வெல்கம்
என்ற வரிகள் ஒவ்வொரு தமிழனின் தவறையும் மிக அழகாக கண்டித்து இருக்கிறது.
இந்நூல் பள்ளி மாணவர்களுக்கு பயன்தரும் நூல் ; இல்லத்தரசிகளுக்கு எண்ணற்ற செய்திகளை சேர்க்கும் நூல் ; கவிஞர்களுக்கு மனதை அலங்கரிக்கும் நூல் ; கவிஞர் இரா. இரவிக்கோ இது முதல் கட்டுரை நூல்.
இந்நூலை
எல்லோரும் படிக்கலாம்!
எல்லா பயன்களையும் பெறலாம்!
வாழ்த்துக்களுடன்
மு.வாசுகி
*****
கருத்துகள்
கருத்துரையிடுக