தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !

தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர். சென்னை-600 017. பக்கங்கள் : 84 விலை : ரூ.70 நூல் விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ***** கோபுர நுழைவாயில் : மகாகவி பாரதியில் மகிழம்பூவாய் மலர்ந்த தமிழ், பாவேந்தனில் பலாச்சுளையாய் கனிந்த தமிழ், மறைமலையடிகளில் மனம் மகிழ்ந்த தமிழ், கண்ணதாசன் நாவில் கற்கண்டாய் தித்தித்த தமிழ், வித்தக கவிஞன் பா.விஜய் அவர்களின் விரல்களில் விளையாடிய தமிழ், இன்று இணையதளம் என்னும் இன்பச்சோலையில் கவிமலராகப் பூத்து குலுங்குகின்றது. ஆம், கவிஞர் இரா. இரவி ‘இயங்கிக்கொண்டே இருக்கிறார்’ என்பதை எதிரொலிக்கும் விதமாக தன் முப்பதாவது படைப்பாக முழுக்க முழுக்க தமிழை மையமாகக் கொண்டு, “தமிழ் எங்கள் உயிருக்கு மேல்” என்னும் நூலை வெளியிட்டுள்ளார். நூல் முழுவதும் தமிழ்ச்சுவை ததும்பி நிற்கின்றது. மாதுளை முத்துக்கள் : தாய்மொழியாம் தமிழ்மொழியை மறுப்போரை, வெறுப்போரை, சுத்தமாக அலட்சியப்படுத்துவோரை, ஜென்ம எதிரிகளாகப் பாவித்து இந்நூலைப் படைத்திருப்பது கவிதைகளை உள்ளுணர்ந்து வாசித்தால் நன்கு புரிபடும். தமிழ்மொழி விடுத்து பிறமொழி தேடுவோரை கண்டித்தலும், தண்டித்தலுமாய், கேலியும் கிண்டலுமாய், முட்டுதலும் மோதலுமாய், ஏய்த்தலும் எதிர்ப்புமாய், எச்சரிக்கையும், எதிர்பார்ப்புமாய் கவிஞர் சாடும் விதம் அருமையிலும் அருமை. கவிதைவழி கேள்விக்கணைகளைத் தொடுக்கும் குருவாகவும், அதே வேளையில் அக்கேள்விக்கு தானே பதிலளிக்கும் சீடனாகவும் இந்நூலில் உலா வருவது, இவரது தாய்மொழிப்பற்றினை உலகிற்கு பறைசாற்றும் விதமாக உள்ளது. எது முதல் எது வரை? கற்கண்டு முதல் கட்டித்தங்கம் வரை, கூழாங்கல் முதல் வைரக்கல் வரை, சுரங்கம் முதல் அரங்கம் வரை, சிந்துவெளி முதல் சிங்கப்பூர் வரை, அக்கால வாசுகி முதல் இக்கால வஞ்சி வரை, ஈரத்தமிழர் முதல் ஈழத்தமிழர் வரை, அவ்வைப்பாட்டி முதல் அன்றாடம் காய்கறி விற்கும் பாட்டி வரை, கனிச்சாறு முதல் கரும்புச்சாறு வரை, கீழடி முதல் கலங்கரை விளக்கம் வரை, பட்டிமன்றம் முதல் ஐ.நா.மன்றம் வரை, ஆதியும் அந்தமுமாய் சொல்லப்பட்ட கவிதை காட்டாற்று வெள்ளமாய் வாசிப்போர் மனதிற்குள் புகுந்து அந்நிய மொழிச் சொற்களை இனி தப்பித்தவறி கூட பயன்படுத்தி விடக்கூடாது என்று எச்சரிக்கை மணி அடித்துச் செல்கின்றது. முத்திரை வரிகள் : “1330 திருக்குறள் மனப்பாடம் செய்வதை விட, 10 திருக்குறள் வழி நடப்பது நன்று” (ப.எண் 21) சாட்டையடி வரிகள் : “தமிழராய்ப் பார்த்து திருந்தாவிட்டால் தமிழை வளர்க்க முடியாது” (ப.எண் 2) சொல் விளையாடல் : “வாசுகியின் கணவர் வாசகர்களின் கண் அவர் திருவள்ளுவர்” (ப.எண் 23) கண்ணீர் வரிகள் : “ஈழத்தமிழர்களின் உச்சரிப்பைப் பார் சோகத்திலும் சுந்தரத்தமிழ் பேசுகின்றனர்” (ப.எண் 33) ஆதங்க வரிகள் : “பத்து சொற்கள் தமிழன் பேசினால் பத்தில் எட்டுச் சொற்கள் ஆங்கிலமானது” (ப.எண் 42) மனதார : கவிஞர் இரா. இரவி எப்பொழுதும் தன் படைப்பபுக்களில் பாயாசத்தில் முந்திரிப்பருப்பு, ஏலக்காய், முந்திரிப்பழம் என அலங்காரத்திற்கு பயன்படுத்துவது போல் தமிழ்மொழி பற்றி இடையிடையே கூறிக்கொண்டு செல்வார். இந்த, “தமிழ் எங்கள் உயிருக்கு மேல்” என்ற நூலில் தமிழ்ப்பாலிட்டு சூடான, சுவையான பால் பாயாசத்தை வாசகர்களுக்கு அழகிய குவளையில் பரிமாறியுள்ள விதம் பாராட்டத்தக்க ஒன்று. பொதிகை மலை சந்தனமாய் கவிமுரசு இரா.இரவியின் படைப்புக்கள் தமிழுலகில் நறுமணம் பரப்ப இணையதள வாசகர் சார்பில் வாழ்த்துகிறோம். *****

கருத்துகள்