கவிதைச் சுடர்-ஹைக்கூ கவிதை அணிவகுப்பு -
பேராசிரியர் இரா. மோகன்-
ஒரு பார்வை-பொன்.குமார் !
மொழியின் உச்சம் கவிதை என்பர். கவிதையின் செல்லம் ஹைக்கூ ஆகும். புதுக்
கவிதையின் காலம் ஒரு நூற்றாண்டு எனில் ஹைக்கூவின் காலமும் ஒரு நுாற்றாண்டே
ஆகும். புதுக் கவிதைக்கு வித்திட்ட பாரதியே ஹைக்கூவிற்கும் வழி அமைத்துக்
கொடுத்தார். புதுக் கவிதையை வளர்த்தவர்கள் பட்டியல் பெரிது. ஹைக்கூவை வளர்த்து
எடுத்தவர்கள் குறைவே. அவர்களில் பேராசிரியர் இரா. மோகன் குறிப்பிடத் தக்கவர்.
அவரால் ஹைக்கூ ஒரு நிலை உயர்ந்துள்ளது என்பது உண்மை. அவரால் ஹைக்கூவாளர்கள்
சிலர் உயர்வு பெற்றுள்ளதும் உண்மை .
ஹைக்கூக்களைப் பற்றிய தொகுப்பு உண்டு. ஹைக்கூத் தொகுப்புகள் தொடர்பான விமரிசனத் தொகுப்புகளும் வந்துள்ளன. ஹைக்கூவாளர்களில் ஆளுமைக் குறித்தான தொகுப்புகள் வந்ததில்லை. முனைவர் இரா. மோகனின் முயற்சியால் ஹைக்கூ வாளர்களின் ஆளுமையைப்
பற்றிய ஒரு தொகுப்பாக வந்துள்ளது' கவிதைச் சுடர் '. மூத்த ஹக்கூவாளரான கவிஞர்
ஈரோடு தமிழன்பன் முதல் பூத்த கவிஞரான கு. அ. தமிழ் மொழி வரையிலான
ஹைக்கூவாளர்களின் ஹைக்கூ ஆளுமையை அறியச் செய்துள்ளார். மூன்று தலைமுறை
வைக்கூவாளர்களை முதன்மைப் படுத்தியுள்ளார். படைப்பாளுமையைப் போற்றியுள்ளார்.
ஆளுமை என்பது இலக்கியத்தில் மிகப் பெரிய சொல். பெருந்தன்மையுடன்
அனைவரையும் படைப்பாளுமையாளர்கள் என்பது போற்றத் தக்கது.
இருபத்து மூன்று ஹைக்கூவாளர்களைப் பற்றி விரிவாக அலசி ஆராய்ந்திருப்பினும்
முடிவாக முதலிலேயே அதாவது முன்னுரையிலேயே " தமிழ் ஹைக்கூ உலகில் இன்னும்
வந்து சேர வேண்டிய ஹைக்கூவுக்கான நுட்பங்கள் ஏராளமாக இருக்கின்றன " என்பது
ஹைக்கூவாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும். ஹைக்கூ என்பது மூன்று
வரியிலானது என்னும் பொது விதியையே பெரும் பாலோனோர் பின் பற்றி வருகின்றனர்.
ஹைக்கூவாளர்கள் இந்த எல்லலையைத் தாண்டி ஹைக்கூ படைக்க முன் வர வேண்டும்.
ஒவ்வொரு ஹைக்கூவாளர்கள் குறித்து படைப்பாளுமையை விவரிக்கும் முன் ஹைக்கூவாளர் பற்றிய ஓர் அறிமுகத்தைத் தந்துள்ளார். ஒவ்வொருவரும் எத்தனை தொகுப்புகளை வெளியிட்டுள்ளனர், என்னென்ன தொகுப்புகளை வெளியிட்டுள்ளனர், அவர்களின்
சிறப்பசங்கள் என்ன என்பதை எல்லாம் அறிந்து அறியச் செய்துள்ளார்.
ஈரோடு தமிழன்பன் ' சூரியப் பிறைகள்' என்னும் ஹைக்கூத் தொகுப்பு வெளியிட்டதுடன்
ஹைக்கூ மற்றும் ஹைக்கூச் சார்ந்தும் பல தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். ஹைக்கூவைத்
தாண்டி சென்ரியு, லிமரைக்கூ என்றெல்லாம் சோதனை முயற்சிகள் செய்து வெற்றியும்
பெற்றுள்ளார், பேராசிரியர் இரா மோகன் 'சூரியப் பிறைகள்' தொகுப்பை மட்டும் வைத்து அவரின் ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளார். அரசியலையும் சமூக அவலங்களையும்
அன்றாட வாழ்க்கையையும் தமிழன்பனின் கவிதைகளில் பதிவாகியுள்ளன என்கிறார்.
மேலும் அவரிடம் காணப் படும் தனித் தன்மை அவரது உடன் பாட்டுச் சிந்தனை என்கிறார்.
' கவிஞர் மித்ராவின் எழுத்தில் 'ஹைகூ ' தமிழ்ச் சூழலுக்குத், தகுந்தபடி ஒரு புதிய
பரிமாணத்தை அடைகிறது' என்னும் கவிஞர் இந்திரனின் கூற்றுடன் கவிஞர் மித்ரா
பற்றிய ஆளுமையைத் தொடர்ந்துள்ளார். இந்திரனின் கூற்றை முன்மொழிந்து தன் கருத்தையும்
வழிமொழிந்துள்ளார். ஒவ்வொரு ஹைக்கூவாளர்களின ஆளுமைக்குள் செல்லும் முன் ஒரு
படைப்பாளியின், அறிஞரின் மேற் கோளைக் காட்டி சிறப்பு சேர்த்துள்ளார். கட்டுரையின்
முடிவிலும் ஒரு மேற் கோளைத் தந்து ஹைக்கூவாளர்களின் ஆளுமையை உறுதிப்
படுத்தியுள்ளார். மேற்கோள்கள் ஹைக்கூத் தொடர்பாகவே இருப்பது கூடுதல் பலம். ஒரு
ஹைக்கூ என்றால் எப்படி இருக்க வேண்டும், எப்படி எழுத வேண்டும் என்பதை ஹைக்கூ
உலகத்திற்கு உணர்த்தியவர் கவிஞர் மித்ரா.
ஹைக்கூத் தொகுப்புகளில் முதல் தொகுப்பு எது என்பதில் கவிஞர் அறிவு மதிக்கும் கவிஞர்
அமுத பாரதிக்கும் ஓர் அறிக்கைப் போர் நடைப் பெற்று வருகிறது. -ஆனால் கால வரிசைப் படி அமுத பாரதியே முதல் இடத்தைப் பிடித்துள்ளார். பேராசிரியர் இந்த
போராட்டத்திற்குள் செல்லாமல் அறிவு மதியின் ஆளுமையைக் குறித்து பேசியுள்ளார்.
இரண்டு தொகுப்பிற்கும் இடைவெளி பனிரெண்டு ஆண்டுகள் ஆயினும் பாடு பொருளின்
தேர்வில் விரிவையும் ஆழத்தையும் கூட்டியுள்ளதையும் பாடும் பொருளில் நுட்பத்தையும்
மெருகையும் சேர்த்தள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.
ஹைக்கூ உலகில் அதிகம் பேசப் படாதவர் , அதிகம் ஹைக்கூ எழுதியவர் எஸ். ஷங்கர
நாராயணன். கவிதைகளில் மின்சாரம் எடுத்தவர் என்கிறார் பா. உதய கண்ணன்.
ஹைக்கூக்களிலும் மின்சாரம் எடுத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார் பேராசிரியர். கவிதைக்கு
பொய்யழகு என்றால் ஹைக்கூவிற்கு மெய்யழகு என்று ஹைக்கூவில் கூறியதைச் சுட்டிக்
காட்டியுள்ளார்.
முதலில் பூத்த ரோஜா மூலம் ஹைக்கூ உலகில் நுழைந்தவர் தங்கம் மூர்த்தி. முதலில் பூத்த
ரோஜாவையே மீண்டும் பூக்கக் செய்துள்ளார். ஹைக்கூ தொகுப்புகளில் மறுபதிப்பு கண்டது என்னும் பெருமைக்குரியது. அசலான வாழ்வைக் காட்டும் ஹைக்கூக்களாலும்
வாசிக்கத் துாண்டும் புது மொழியாலும் எளிமை, எள்ளல், தோழமை ஆகிய பண்புகளால்
புறக்கணிக்க முடியாதவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார் இரா. மோகன்.
எத்தனை பேர் கூடி இழுத்துமென்ன
இன்னும் வரவில்லை
சேரிக்குள் தேர்
அதிகம் பேசப் பட்ட ஹைக்கூவிற்கு சொந்தக் காரர் செ. ஆடலரசன். இவரின் தொகுப்பான
'சேரிக்குள் தேரினை ' முன் வைத்து எழுதியதில் புனைவு இலக்கியமாக படைக்காமல்
நுண்ணிய உணர்வு இலக்கியமாக படைத்துள்ளதைக் கண்டறிந்து தெரிவித்துள்ளார்.
செ. ஆடலரசுவின் ஹைக்கூவையும் தாண்டி அதிகம் எடுத்தாளப் பட்ட ஹைக்கூ
ரேசன் கடைத் காரருக்கு
குழந்தை பிறந்தது
எடை குறைவாய்
என்பதாகும். எழுதியவர் ந.
முத்து. ஒரு தொகுப்பிற்கு பிறகு மறு பிரவேசம் ஹைக்கூவில் செய்ய வில்லை. பேராசிரியர் ஒரு தொகுப்புதானே என்று விட்டு விடாமல் முத்துவின்
திறனையும் வெளிப் படுத்தியுள்ளார். தரத்தாலும் திறத்தாலும் நிறைந்தது என்கிறார்.
பா. உதய கண்ணன் ஒரு படைப்பாளர். ஆனாலும் ஒரு நல்ல பதிப்பாளர். பதிப்பகம் மூலம்
பல ஹைக்கூத் தொகுப்புகளை வெளியிட்டவர். ஹைக்கூவை நவீனப் படுத்தி இருக்கிறார்
என்று எஸ். ஷங்கர நாராயணன் குறிப்பிட்டதையே மேற் கோள் காட்டி உதய கண்ணனின்
ஹைக்கூ ஆற்றலை உறுதிப் படுத்தியுள்ளார்.
ஹைக்கூ என்னும் வடிவத்தைச் சரியாகக் கையாண்டவர், கைப் பற்றிக் கொண்டவர் இரா.
ரவி. ஒரு பொருளையே பலவாறாக ஹைக்கூவாக்கும் ஆற்றல் பெற்றவர். அதிகம் ஹைக்கூ
எழுதியவர் இவரே. அதிகம் தொகுப்பாக்கித் தந்தவரும் இவரே. ' ஆயிரம் ஹைக்கூ 'க்கள்
அடங்கிய தொகுப்பைத் தந்தவரும் இவரே. முனைவர் மோகனுக்கு நெருக்கமானவரும்
இவரே. ஆழ்ந்த தமிழுணர்வு, ஈழத் தமிழர் மீது பரிவு, முற்போக்குச் சிந்தனை, மனித
நேயம், உறவுகளைப் போற்றுதல், இயற்கை மீதான ஈடுபாடு, தன்னம்பிக்கை, நகைச் சுவை
ஆகிய பண்புகள் கொண்டவராக இரா. ரவியை அடையாளப் படுத்தி யுள்ளார்.
முனைவர் மித்ரா என்னும் பெண் ஹைக்கூவாளரைத் தொடர்ந்து இ. பரிமளம் என்னும் ஹைக்கூவாளர் குறித்து எழுதியுள்ளார். ஹைக்கூக் குறித்த ஓர் ஒப்பாய்வை
நிகழ்த்தியுள்ளார். ஹைக்கூவின் பரிமாணங்களை அறியச் செய்துள்ளார். ஹைக்கூவின்
மொழி பெயர்ப்பையும் கசிய விட்டவர் நாட்டு முன்னேற்றத்தில் அக்கறையும் ஆர்வமும்
கொண்டவராகவும் சங்க மரபின் தொடர்ச்சி பெற்றவராகவும் இயற்கை அழகை
ஆராதிப்பவராகவும் கவிஞர் விளங்குவதைக் குறிப்பிட்டுள்ளார்.
இத் தொகுப்பில் மூன்றாவதாக இடம் பெற்றுள்ள ஓர் இளம் ஹைக்கூவாளர் கு. அ. தமிழ்
மொழி. புதுவை தமிழ் நெஞ்சன் என்னும் ஹைக்கூவாளரின் மகள் ஆவார். பதினொராம்
வயதிலேயே ' சிறகின் கீழ் வானம் ' தொகுப்பை வெளியிட்டவர். சிறியவர் என்றும் பாராமல் சிரத்தையுடன் தமிழ் மொழியின் ஆளுமையைத் தெரிவித்துள்ளார். ஒரு முதிர்ந்த , கை தேர்ந்த கவிஞருக்கு உரிய பக்குவமும் பரிமாணமும் கொண்டவர் தமிழ் மொழி என்கிறார்.
தமிழ் மணி, செந்தமிழினியன், வசீகரன், நவ திலக், க. இராமச் சந்திரன், ஆர்.வி. பதி, ரமா ராம நாதன், இளவல் ஹரிஹரன், கம்பம் மாயவன், கவிவாணன் ஆகிய ஹைக்கூவாளர்களின் ஹைக்கூக்களையும் உள் வாங்கி ஹைக்கூவில் அவர்களின் ஆளுமை எந்தளவிற்கு உள்ளது என்றும் அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஹைக்கூவாளரின் ஹைக்கூத் தொகுப்புகளை முன் வைத்து எழுதியதுடன்
ஹைக்கூக்கள் எதை எழுதியுள்ளன, எப்படி எழுதியுள்ளன என்று ஆய்வும் செய்துள்ளார்.
ஜீவ யாத்திரையில்
ஆன்மாவின் கைவிளக்கு
மரணம்
மரணத்தைப் பற்றிய இந்த ஹைக்கூவை ' உயிருள்ள ஹைக்கூ' என்று உயிர்
ஊட்டியுள்ளார். ஹைக்கூவிற்கு உயிர் ஊட்டும் முனைவரின் பண்பு பாராட்டுக்குரியது.
இயற்கை மீதான அக்கறை கொண்டுள்ளன ஹைக்கூக்கள் என்று பல சான்றுகளைக்
காட்டியுள்ளார். ஹைக்கூக்களில் சமூக விமரிசளம் ஆழ்ந்துள்ளதையும் பெண்ணியப்
பதிவுகள் மிகுந்துள்ளதையும் நம்பிக்கை விதைகள் புதைக்கப் பட்டுள்ளதையும் தமிழியச்
சிந்தனைகள் பொதிந்துள்ளதையும் நகைச் சுவை இழையோடியுள்ளதையும் இனம் அடையாளம் காட்டியிருப்பதையும் மொழி பேசப் பட்டிருப்பதையும் சுற்றுச் சூழலை
மையப் படுத்தி இருப்பதையும் இயற்கை படம் பிடிக்கப் பட்டிருப்பதையும் அரசியலைச்
சாடியிருப்பதையும் பொருளாதாரத்திற்கு வழி வகுத்திருப்பதையும் பழ பொழிகள் கையாளப்பட்டிருப்பதையும் முனைவர் இரா. மோகனின் கட்டுரைகள் மூலம் காண முடிகிறது.
ஹைக்கூக்கள் குறித்த அவரின் தெளிவான, தீர்க்கமான பார்வையையும் அறிய முடிகிறது.
எத்தனை முறை பார்த்தாலும்
அழகாகவே இருக்கிறது
கண்ணாடியில் என் முகம்
என்னும் பொன்.குமாரின் ஹைக்கூ மெல்ல வாசிப்பதற்கும் மனத்துள் யோசிப்பதற்கும்
முழுமையாய விமரிசப்பதற்கும் நிறையவே இடம் தருகின்றன என்பது போல பல
ஹைக்கூக்கள் குறித்து விவரித்துள்ளார்.
முனைவர் இரா. மோகன் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது போல் ஹைக்கூவாளர்களின்
படைப்பாளுமையைக் கண்டறியும் நோக்கத்துடனே ஹைக்கூக்களின் சிறப்புக்களையும்
ஹைக்கூவாளர்களின் ஆற்றலையும் மட்டுமே கட்டுரை வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.
பேராசிரியர் பெருந்தனமையுடன் பெரும் மனத்துடன் ஹைக்கூவாளர்களைப் போற்றியுள்ளார்.
ஹைக்கூக்களைப் பாராட்டியுள்ளார். எவரையும் விமரிசிக்காததும் எந்த ஹைக்கூவையும்
குறை கூறாததும் குறிப்பிடத்தக்கது. மாறாக ஹைக்கூக்களைக் கொண்டாடடியுள்ளார்.
கொஞ்சியுள்ளார். சிலாகித்துள்ளார். ஹைக்கூக்கள் மீது அன்பு செலுத்தியுள்ளார்.
ஹைக்கூக்களைப் பற்றிய அவரின் பேச்சு மூலம் அவரின் கவி உள்ளமும் ஹைக்கூ மனமும்
வெளிப் பட்டுள்ளது. ஹைக்கூத் தொகுப்புகளை முழுமையாக வாசித்துள்ளார் என்பதை
முன்னுரையிலிருந்தும் அணிந்துரையிலிருந்தும் சில வாசகங்களை எடுத்துக் காட்டியதன்
வாயிலாக உறுதிப் படுகிறது.
பேராசிரியரின் தொடர் முயற்சி வரவேற்பிற்குரியது. இலக்கியம் தொடர்பான நுாற்றுக்கும்
மேற்பட்ட தொகுப்புக்களை இலக்கிய உலகிற்கு அர்ப்பணித்து வரும் அவர் சமீபத்தில் கவிதை அலை வரிசை, கவிதைக் களஞ்சியம், கவிதைச் சாரல் ஆகிய கவிதை கலை குறித்து தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். அவ் வரிசையில் ' கவிதைச் சுடர் ' சுடர் விட்டுள்ளது. ஹைக்கூவை மையப் படுத்தி இருப்பதால் ' ஹைக்கூச் சுடர் ' என்று தலைப்பு வைத்திருக்க வேண்டும் ' கவிதைச் சுடர் ' தொகுப்பு மூலம் பேராசிரியர் இரா. மோகன் ஹைக்கூவாளர்களின் படைப்பாளுமையைத் தெரிவித்துத் தன் ஆளுமையை ஹைக்கூ உலகில் பதிவு செய்துள்ளார்.
வெளியீடு
வானதி பதிப்பகம் சென்னை 600017
பொன். குமார்
9003344742
கருத்துகள்
கருத்துரையிடுக