பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!
- கவிஞர் இரா. இரவி
*****
உலகில் பிறந்த யாவரும் சமம் என்று
ஓங்கி உரைத்தவர் ஒப்பற்ற திருவள்ளுவர்
உயர்ந்தவர் தாழ்ந்தவர் மனிதரில் இல்லை
உயர்வு தாழ்வு எல்லாம் தவறான கற்பிதங்கள்
நெற்றியில் பிறந்தவன் என்பதெல்லாம் கட்டுக்கதை
நெற்றிப் பொட்டில் அடித்துச் சொன்னவர் வள்ளுவர்
தோளில் பிறந்தவன் என்பதெல்லாம் புரட்டுக்கதை
தரணியில் பிறந்த யாவரும் சமம் என்றார்
ஏற்றத் தாழ்வுகள் எல்லாம் வகுத்திட்ட சதி
ஏற்றத்தாழ்வு இல்லவே இல்லை என்று உரைத்தார்
நம்ப முடியாத புரட்டுக்களை நம்பவே நம்பாதீர்
நமக்குள் சாதியை உருவாக்கியது சதி என்றார்
கற்பிக்கப்பட்ட கற்பனைகளை ஏற்காதீர் என்றார்
கட்டாயம் கேள்விகள் கேட்கச் சொன்னார் வள்ளுவர்
எதையும் ஏன், எதற்கு, எப்படி என ஆராய வைத்தவர்
எதையும் சிந்தித்து சீர் தூக்கி பார்க்கச் சொன்னவர்
யார் சொன்னாலும் சிந்திக்காமல் ஏற்காதே
எதையும் ஆராய்ந்து அறிந்திடு என அறிவுறுத்தியவர்
சாதி என்பதே சதி என்பதை உணர வைத்தவர்
சாதியை மறந்து சாதிக்க நம்மை வலியுறுத்தியவர்
தெய்வத்தால் முடியாதது கூட முயன்றால் முடியும்
தரணியில் முயற்சி திருவினையாக்கும் என்றவர்
உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பதை தவிடுபொடியாக்கியவர்
உலகில் மனிதர் யாவரும் சமம் வேறுபாடு இல்லை என்றவர்.
கருத்துகள்
கருத்துரையிடுக