உயிர்கள் உதிராமல் உறவாகும் உதிரம்!
- கவிஞர் இரா. இரவி
*****
உதிரம் இல்லாமல் இழந்த உயிர்கள் பல உண்டு
உதிரமின்றி இனிஒரு உயிரும் உதிராமல் காப்போம்!
குருதி கொடுத்தால் உடன் ஊறிடும் குருதி, இது உறுதி
குருதி கொடுக்க தயக்கம் யாருக்கும் வரவேண்டாம்!
கொடைகளில் சிறந்த கொடை குருதிக் கொடையே
குருதி கொடுக்கும் வள்ளல்களுக்கு வாழ்த்துக்கள்!
விடுதலைத் திருநாளில் விவேகமான முடிவெடுத்து
வாலிபர்கள் வரிசையில் நின்று வழங்குகின்றனர் குருதி!
விபத்தில் காயமடைந்தோருக்கு தேவைப்படும் குருதி
வித்தியாசமான நோயுற்றவர்களுக்கு வேண்டும் குருதி!
எப்போது தேவைப்படும் என்பது தெரியாது நமக்கு
எப்போதும் இருக்கும்படி தந்து வைப்போம் குருதி!
நல்ல உள்ளத்துடன் குருதி வழங்கும் நீங்கள் எல்லாம்
நல்ல கர்ணனை நினைவூட்டும் வள்ளல்கள் தான்!
நூற்றுக்கு மேற்பட்டமுறை குருதி வழங்கிய வள்ளல்கள் உண்டு
நானிலம் போற்றும் ஜோஸ், வரதராஜன் என உள்ளனர்!
குருதி கொடுப்பதற்கு சிலர் தயக்கம் காட்டுகின்றனர்
கவலை வேண்டாம் தைரியமாக வழங்கலாம் குருதி!
பறவைகளோ விலங்குகளோ குருதிக் கொடை தர இயலாது
பகுத்தறிவுள்ள மனிதர்களே குருதி கொடுக்க முடியும்!
எண்ணிலடங்கா உயிர்கள் பிழைத்தது குருதிக்கொடையால்
எண்ணிப்பார்த்து வழங்கிட வாருங்கள் குருதி!
உறுதி கொண்ட நெஞ்சுடனே வாருங்கள்
உதிரம் தந்து உயிர் காப்போம் தாருங்கள்!
******
கருத்துகள்
கருத்துரையிடுக