ஞாயிற்றுக் கிழமை. ஞாயிறு போற்றதும். வைரமுத்து.

ஞாயிற்றுக்கிழமை *********************** ஞாயிற்றுக்கிழமையென்பது சக்தி. ஞாயிற்றுக் கிழமையென்பது மனசைத் தூசு தட்டி வைக்கும் துப்புரவு நாள் இங்கே பலருக்கு ஞாயிற்றுக் கிழமையென்பதே இல்லை. பலருக்கு வாழ்க்கையே விடுமுறையாய் இருப்பதனால் ஞாயிற்றுக் கிழமையின் பெருமையே தெரிவதில்லை. சனிக்கிழமை சாயங்காலத்தில் உயிரோடிருக்கிற ஞாயிற்றுக் கிழமை, பிறக்கும்போது இறந்தே பிறக்கிறது. ஞாயிற்றுக் கிழமையென்பது ஒய்வுகளின் உன்னத மண்டபம், ஆனால் சோ்த்துச் சோ்த்து வைக்கிற சில்லரை வேலைகளெல்லாம் ஞாயிற்றுக் கிழமை நோக்கி நகா்த்தப் படுவதால் பொறுப்புகளின் சுமை தாங்காமல் ஞாயிற்றுக் கிழமையே நடுங்குகிறது. மிகை ஊதியம் கிடைத்தால் ஞாயிற்றுக் கிழமையை விற்பதற்கு நாம் தயாா். அதற்கு வாய்ப்பில்லாதவா்கள் மட்டுமே ஞாயிற்றுக் கிழமையை கட்டாயக் கல்யாணம் செய்து கொள்கிறாா்கள். தனக்கு சோக கீதம் வாசித்துக் கொண்டே ஞாயிற்றுக் கிழமை விடிகிறது ஞாயிற்றுக் கிழமையென்பது உறக்கமல்ல: விழிப்பு. பூமி விழிக்கு முன்பே புலன்கள் விழித்துவிட வேண்டும். பித்தளை பாத்திரங்களை மாதம் ஒருமுறை புளி போட்டத் துலக்குவது மாதிரி, புலன்களை வாரம் ஒருமுறை புடம் போட்டுத் துலக்க வேண்டும், ஆனால் ஞாயிற்றுக் கிழமையென்றால் பதினொரு மணிக்குப் பல் துலக்குவது என்றுதான் இங்கு பல இல்லற அகராதிகளில் எழுதப் பட்டிருக்கிறது. ஞாயிற்றுக் கிழமை சாலைகளை வாசிக்கிறேன். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் இந்தியாவுக்கு 'பாரத் பந்த்' தாகவே இருக்கிறது. ஜன்னல்களையும் புலன்களையும் சாத்திக் கொள்வதா ஞாயிற்றுக் கிழமை? புலன்களை வலிக்க வைக்கும் பொழுதுபோக்குச் சாதனங்களுக்குள் புதைந்து போவதா ஞாயிற்றுக் கிழமை? இந்தியாவுக்கு கிடைத்த சுதந்திரத்தைப் போலவே இந்தியனுக்குக் கிடைத்த ஞாயிற்றுக் கிழமையும் தப்பாகப் பயன்படுத்தப் படுகிறது. வாரத்தில் ஆறு நாட்கள் வயிற்றுக்காக வாழ்ந்து விட்டோமே ஒரு நாளாவது இதயத்திற்காக வாழ வேண்டாமா? வாரெமெல்லாம் மனிதா்களோடு மன்றாடிக் கொண்டிருக்கிற மனிதா்களே! ஞாயிறகறுக் கிழமையாவது தாவரஙககளோடு பேசுங்கள். ஒரு செடிக்குப் பக்கத்தில் நாற்காலி போட்டு பூ மலரும் வரை பொறுத்திருங்கள். வானத்தில் வசிப்பதற்குப் பழகுங்கள். நாற்பது வயதுக்குப் பிறகு கால்சியத்தை கிரகித்துக் கொள்ள முடியாத மனித எலும்புகள் மாதிரி -மனிதா்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் படிப்பதை நிறுத்தி விடுகிறாா்கள். ஒரு வீட்டில் சமையலறையைவிட நூலகம் முக்கியம் என்று சட்டம் போட வேண்டும். ஞாயிற்றுக் கிழமை நல்ல புத்தகங்களுக்கும் நமக்குமுள்ள சிநேகநாள் என்று செய்து கொள்ள வேண்டும். திருமணத்திற்குப் பிறகு இந்தியப் பெண்களுக்கு, தாலிக்குப் போட்ட முடிச்சு மாதிரியே இல்லற வாழ்க்கையும் இறுகிக் கிடப்பதனால் அவா்களில் பலா் மனநோயாளியாகவே மாறிவிட்டாா்கள். நம் ரசனையும் கலாசார அகலங்களையும் மனசின் பரப்பையும் விரிவுபடுத்தும் வேலையைத்தான் ஞாயிற்றுக் கிழமை செய்ய வேண்டும். இரைப்பையை நிரப்பிக் கொள்ளத்தான் எல்லா நாட்களும். இதயத்தை நிரப்பிக் கொள்ள ஒரே நாள்தான். அதன் பெயா் ஞாயிற்றுக் கிழமை. ஞாயிறு போற்றதும். வைரமுத்து.

கருத்துகள்