இளமை! இனிமை! புதுமை!
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி !
நூல் மதிப்புரை கவிஞர் மூரா !
வானதி பதிப்பகம் .தீன தயாளு தெரு .தியாகராயர் நகர் .சென்னை .17. தொலைபேசி 044- 24342810- 24310769 மின்னஞ்சல் vanathipathippakam@gmail.com பக்கங்கள் 98 விலை ரூபாய்100
சதா இயங்கிக் கொண்டே இருக்கும் கடிகார மனிதர் தான் இரவி. வியக்க வைக்கும் எளிமையாளர். மனதின் சொல்படி நடக்கும் மகாமனிதர். அருவிக் கவி, நல்ல மனிதர், இனிய நண்பர்.
கவிதை சாரலில் ஆரம்பித்து பெருமழையாய் மாறி உருவானது இந்த 29-ஆவது நூல்.
காதலைப் பாடாத கவிஞன் இல்லை. காதலைப் பாடாதவன் கவிஞனே இல்லை என்பர். எத்தனையோ பேர் தபேலா வாசித்தாலும் ஜாஹீர் உசேன் தபேலா மட்டும் பேசும், பாடும், சிரிக்கும். அதுபோல எத்தனையோ பேர் காதல் பற்றி எழுதியிருந்தாலும் இவரது உத்தி அலாதியான சுவை உடையது. காதலே வராதவருக்கும் இதுதான் காதல் என்ற விடை கிடைக்கும்.
எளிய, அழகிய, பழகிய இனிய சொல்லாடலில் இவர் கவிதை எப்போதும் சிறக்கும்.
“சிறகுகள் இன்றி
வானில் பறக்கலாம்
காதல்”
காதலித்து பாருங்கள் புரியும்.
சாதி கடந்து, மதம் கடந்து, மொழி கடந்து, இனிய இதயம் தேடி அது பறக்கும் பறத்தலுக்கு இணையேது.
“புற அழகால் வருவதல்ல காதல்
அக அழகால் வருவதே காதல்!”
காதல் பூத்துவிட்டால் நிறமென்ன, வடிவென்ன, குறையென்ன எல்லாமே காணாமலே போய்விடும். அறிந்தவர் அறிவாராக.
இரவி ஓர் நிறைவான வாசிப்பாளர்.
“தலை துண்டிக்கப்பட்டாலும்
ஒன்பது நாள் உயிர்வாழும்
கரப்பான் பூச்சி”
நம் உறவு தண்டிக்கப்பட்டால், நிமிடத்தில் என் உயிர் பிரியும். அறிவியல் வாசிப்பின் ஆழம் தெரியும் அற்புத வரிகள்.
‘பேசும் மௌனம்’ வரிகளை வழியாய் கொண்டால், ஒருபோதும் காதல் தோற்காது.
வாங்குங்கள், வாசியுங்கள், மனம் இறகுபோல மெலிதாவதை உணர்வீர்கள்.
காதல் வாழும் வரை, இரவியின் கவி வாழும்.
கருத்துகள்
கருத்துரையிடுக