தனிமையோடு பேசும்
‘இளமை இனிமை புதுமை’!
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!
நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் !
வெளியீடு : வானதி பதிப்பகம், தி. நகர், சென்னை – 600 017.
பக்கங்கள் : 92 (மே 2023) விலை : ரூ.100
பேச 044 24342810 . 24310769. மின் அஞ்சல் vanthipathippagam@gmail.com
******
இலக்கிய உலகின் இலட்சியக் கவிஞர் இரா.இரவி அவர்களின் 29ஆவது நூல் ‘இளமை இனிமை புதுமை’.
இந்நூலினை வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும்.
‘மலரினும் மெல்லிய காதலை’ கவிஞர் இரவி அவர்கள், இளமைத் துடிப்பான வார்த்தைகளால், வாசிக்க வாசிக்க இனிக்கும் உவமைகளால், புதுமையான சிந்தனைகளால் இந்நூலில் அழகுற வடிவமைத்துள்ளார்.
‘அகத்தில் இருப்பதை முகம் காட்டும்’ என்பதை,
“அகத்தில் தோன்றி
முகத்தில் தோன்றும்
காதல்”
என்ற வரிகளில் வெளிப்படுத்தியுள்ளார்.
ஒரு பெண்ணின் விழிகளுக்கு இருக்கும் சக்தியை,
“இரும்பைக் கவரும் காந்தமென
இருவிழிகள் கவருகின்றன”
ஏன்ற காந்த வார்த்தைகளால் நம்மைக் கவர்ந்திழுக்கிறார்.
கவிஞர் இரவி, ‘மூட நம்பிக்கைகளை நம்பாதாவர், ஆனால் காதலை நம்புபவர்’.
“சொர்க்கம் நரகம் நம்பாத
நாத்திகன் நான்
அவளைச் சந்தித்ததும்
நம்பினேன் சொர்க்கத்தை”
கடவுளையும் காதலையும் உணரவே முடியும் என்று நாத்திகக்காதலை நயம்பட எடுத்துக் கூறியுள்ளார்.
காதல் வயப்பட்டவர்கள், காதல் வெற்றி பெறாவிட்டாலும் தன் வாழ்நாள் முழுவதும் அக்காதலின் நினைவலைகளில் நீந்துவர் என்பதை,
“மாடு என நானும் அடிக்கடி
அசை போடுகிறேன் நினைவுகளை”
என்று அழகுற எடுத்துக்காட்டியுள்ளார்.
உன்னை வழியனுப்பும்
உன் அம்மா பார்த்துப் போமா
என்கிறார்கள்!
சாலையில் கடந்து செல்லும் நீ
என்னைப் பார்த்துவிட்டுத் தான்
செல்கிறாய்!
என்று இருபொருள் தரும் சொற்கள் கலந்த கவிதை வரிகளை ‘நச்’ என இளமை ததும்ப வழங்கியுள்ளார்.
காதலர்கள் மட்டும் வாசிக்க வேண்டிய நூல் அல்ல ; கணவன்-மனைவி ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு இல்லறத்தை நல்லறமாக நடத்தவும், இந்நூல் உதவும். வாழ்த்துகள் … கவிஞருக்கு மட்டுமல்ல ; காதலர்களுக்கும் சேர்த்து!
தனிமையில் வாசியுங்கள்
இளமை ஊஞ்சலாடும்!
இனிமை உற்சாகமிடும்!
புதுமை புலப்படும்!
கருத்துகள்
கருத்துரையிடுக