நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : ‘க்ளிக்’ மதுரை முரளி 2 நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி

நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972 நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி மணிமேகலை பிரசுரம், தணிகாசலம் சாலை, தியாகராயர் நகர், சென்னை-600 001. பக்கங்கள் : 162 ; விலை : ரூ.150. ******* நூல் ஆசிரியர் ‘க்ளிக்’ மதுரை முரளி அவர்கள் தொடரித்துறையில் பொறியாளராகப் பணியாற்றி கொண்டே இலக்கியத்திலும் தொடர்ந்து இயங்கி வருபவர். ‘க்ளிக்’ என்ற கவிதை நூலின் மூலம் பிரபலமானவர். 25 ஆண்டுகளாக வானொலிக்கு எழுதிய, வழங்கிய சிறுகதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார். சமுதாயத்தை உற்றுநோக்குபவர்களால் தான் படைப்புகள் படைக்க முடியும். நூலாசிரியர் முரளியும் சமுதாயத்தை உற்றுநோக்குபவர். சந்தித்த, பார்த்த, பாதித்த நிகழ்வுகளை சிறுகதைகளாக வடித்து உள்ளார். தமிழ்ப்பற்று மிக்கவர். மதுரையில் நடக்கும் இலக்கிய விழாக்களில் ஆர்வமுடன் கலந்து கொள்பவர். முதுமுனைவர் வெ. இறையன்பு அவர்கள் சொல்வது போல, எப்போதும் இயங்கிக் கொண்டே இருப்பவர். மனைவி, மகன், மகள் என குடும்பத்துடன் பிறருக்கு எடுத்துக்காட்டாக வாழ்வாங்கு வாழ்ந்து வருபவர். பழகுவதற்கு இனிமையானவர், எளிமையானவர், பண்பாளர். அவரது படைப்புகளிலும் எளிமை, இனிமை பண்பு உள்ளன. பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துகள். இதுவரை கவிதை, கதை, நாடகம் என 8 நூல்கள் எழுதி விட்டார். இது எட்டாவது நூல். 2018ஆம் ஆண்டிலிருந்து வருடம்தோறும் பல நூல்கள் எழுதி வெளியிட்டு வருகிறார். நூலிலிருந்து பதச்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு இதோ! பிரபல எழுத்தாளர் இராஜேஸ்குமார் அவர்களின் சிறப்பான அணிந்துரையே நூலிற்கு மகுடமாக உள்ளது. தெளிந்த நீரோடை போன்ற நல்ல நடை. முடிந்த அளவிற்கு தமிழ்ச்சொற்களையே பயன்படுத்தி உள்ளார். வலிய ஆங்கிலச் சொற்களை எழுதவில்லை. அதற்காகவே பாராட்டுகள். இன்றைய கதை ஆசிரியர்கள் பலர் தமிங்கிலம் எழுதி தமிழ்க்கொலை புரிந்து வருவது வேதனை. நூலின் தலைப்பிலான ‘நெஞ்சோடு கலந்திடு’ முதல் கதையாக உள்ளது. 25 வயது ஆனவன் என்பதை எப்படி ரசனையோடு எழுதி உள்ளார். பாருங்கள். மிதுன் கால் நூற்றாண்டைக் கடந்த மாதம் தான் கடந்தவன் இப்படி நூல் முழுவதும் கவித்துவமான வரிகள் ஏராளம் உள்ளன. கதைகளுக்கு இடையே ரசனைமிக்க கவிதைகள் உள்ளன. கூடுதல் சிறப்பு சுவையாக உள்ளன. இடையில் திரைப்படப் பாடல் வரிகளும் காட்சிக்குப் பொருத்தமாக எழுதி உள்ளார். திரைப்படம் பார்க்கும் உணர்வையும் நிகழ்வுகளை நாம் நேரில் பார்க்கும் உணர்வையும் தருகின்றன ஒவ்வொரு சிறுகதையும். அதுதான் வெற்றி. காதல் கதையை மிகவும் கண்ணியமாக எழுதி உள்ளார். இன்றைய சில எழுத்தாளர்களைப் போல விரசமான சொற்கள் ஏதுமில்லை. கவிதை என்றால் மேற்கோள் காட்டி எழுதி விடலாம். கதையே மேற்கோள் காட்டினால் நூல் வாங்கிப் படிப்பவர்களுக்கு ஆர்வம் குறைந்து விடும். அதனால் கதைகள் பற்றி எதுவும் எழுதவில்லை. மொத்தத்தில் ஒவ்வொரு கதையிலும் திருப்புமுனைகள் உள்ளன. எதிர்பாராத முடிவுகள் உள்ளன. துப்பறியும் கதைகளும் உள்ளன. பல்சுவை விருந்தாக உள்ளது. ‘ஆசான்’ என்ற கதை தினமலர் வாரமலரில் 04.09.2022 அன்று பிரசுரமாகி உள்ளது. அக்கதையும் நூலில் உள்ளது. சிறப்பு. அந்தக்கதையில் கவிதை நனிநன்று. கரும்பலகை அன்று முதன்முதலாய் / எழுத்துக்களை திறந்த பலகை / பறந்த சுண்ணாம்பு துகள்களுக்கிடையே / குரு சிஷ்யன் உறவை உலகிற்கு / அறிவித்த / அறிவுப்புப் பலகை / மாதா பிதா / குரு தெய்வம் மாண்பை மனதில் நிறுத்திய பலகை! இப்படியே தொடர்கின்றது கவிதை. இந்த வரிகளை படித்த அனைவருக்கும் அவரவர் கரும்பலகை அனுபவத்தை மலர்வித்து விடுகின்றன. பெற்றோரின் அருமை-பெருமையை குழந்தைகளுக்கு உணர்த்துகின்றன காதல்+காதல்=? என்ற கதையின் மூலம். ஒவ்வொரு கதையிலும் நேர்மறை சிந்தனைகளை அறக்கருத்துக்களை விதைத்து உள்ளார். சிறுகதைகளில் எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என அனைத்தும் முத்தாய்ப்பு. சிறுகதை எப்படி எழுத வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறும் விதமாக கதைகள் உள்ளன. பாராட்டுகள். பத்து முத்திரைக் கதைகள் உள்ளன. எழுத்தாளர் முரளியின் எழுத்து நடை சிறப்பு. ஒரு திரைப்படம் பார்த்து முடித்து வீட்டிற்கு வந்த பின்னும் படம் பற்றிய நினைவுகள் மனதில் வந்துபோகும் சிறந்த படம் என்றால். அதுபோல ‘நெஞ்சொடு கலந்திடு’ நூலை படித்து முடித்து வைத்தபின் பத்து கதைகளின் கதாபாத்திரங்களும் நம் நினைவில் வந்து நிழலாடுகின்றன. காரணப் பெயராகி விட்டது. படித்து முடித்த வாசகர்களின் நெஞ்சோடு கதைகள் கலந்துவிடுகின்றன. இலக்கிய உலகில் சளைக்காமல் இயங்கி வரும் இனிய நண்பர் முரளி தொடர்ந்து எழுத வேண்டும். இன்னும் புதிய படைப்புகள் வர வேண்டும் என்று வாழ்த்தி முடிக்கிறேன்.

கருத்துகள்