அழகிய அந்தமான்!
நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிஞர் சி. சக்திவேல் அவர்கள் எழுதியுள்ள ‘அழகிய அந்தமான்’ நூல் படித்தேன், வியந்தேன், மகிழ்ந்தேன். இவ்வளவு நாளாக அந்தமான் என்றால், அந்த சிறைச்சாலை மட்டுமே நினைவிற்கு வரும். இந்த நூல் படித்து முடித்தவுடன் அந்தமான் சென்று அவசியம் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. அந்தமான் பற்றி தமிழில் வந்துள்ள முழுமையான நூல் மட்டுமல்ல, ஆகச் சிறந்த நூல் இது.
பல புள்ளி விபரங்களுடன் அந்தமான் மாவட்டம், நிக்கோபார் மாவட்டம் உள்ள தீவுகளில் பரப்பளவு எவ்வளவு என துல்லியமாக பட்டியலிட்டு உள்ளார். பல வண்ணப்புகைப்படங்கள் அற்புதமாக அச்சாகி உள்ளன. நேரில் சென்று பார்த்த உணர்வைத் தரும் வணணப்படங்கள் நனிநன்று.
நூலாசிரியர் சில ஆண்டுகள் அங்கு வாழ்ந்து பணியாற்றிய காரணத்தால் அந்தமானை சுற்றிப்பார்த்து அங்குலம் அங்குலமாக ரசித்து நூலாக்கி உள்ளார். பயணக்கட்டுரை போல இல்லாமல் வித்தியாசமான, விளக்கமான, தெளிவான நடையில் நூலை அமைத்துள்ளார். ‘அந்தமானைப் பாருங்கள் அழகு’ என்ற திரைப்படப்பாடலும் என் நினைவிற்கு வந்தது. கவிதை நூல் என்றால் உடன் படித்து விடுவேன். கட்டுரை நூல் என்பதால் தாமதம் ஆகி விட்டது. இவ்வளவு நாள் படிக்காமல் வைத்து விட்டோமே என மனம் வருந்தினேன்.
அந்தமான் சென்றவர்கள் படித்து, மலரும் நினைவுகளை மலர்விக்கலாம். இனி அந்தமான் பார்க்க இருப்பவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் நூல். சுற்றுலாத் துறையின் சார்பில் அந்தமான் அரசாங்கமே வெளியிட்ட நூல் போல உள்ளது. அவ்வளவு தகவல்கள் நூலில் உள்ளன. தகவல் களஞ்சியமாக உள்ளது.
அந்தமானில் பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்கள் பற்றிய விரிவான விளக்கமான தகவல்கள் அடங்கி உள்ள நூல். நூலாசிரியரின் கடின உழைப்பை உணர முடிந்தது. புகைப்படங்கள் எடுத்தல், பார்த்த இடங்களை நினைவில் வைத்து எழுதுதல் என அற்புதமான உழைப்பை உணர்ந்தேன்.
வெளிநாட்டு சொகுசுக் கப்பல், பல தீவுகளின் படங்கள், செல்லுலர் சிறைச்சாலைக்குள் உள்ள தியாகிகளின் நினைவுச் சின்னம், கடலடியில் உள்ள பவளங்கள், கார்பன் முனை கடற்கரை, காந்தி பூங்கா, நிக்கோபார் கிராமம் வண்ணப்படங்கள் பிரமிக்க வைத்தன. உணவு உற்பத்தி, மக்கள் வாழ்க்கை, ஆதிவாசிகள் தகவல்கள் உள்ளன.
அந்தமானுக்கு வந்து சென்ற தமிழறிஞர்கள் பட்டியல் கண்டு வியந்தேன். பதச்சோறாக அவை மட்டும் உங்கள் பார்வைக்கு :
பாவலரேறு பெருஞ்சித்திரனார், க.ப. அறவாணர், எழுத்தாளர் ஜெயகாந்தன், தமிழ்க்குடிமகன் தவத்திரு குன்றக்குடி அடிகளார், குமரி அனந்தன், இந்துமதி, புலமைப்பித்தன், கவிஞர் சுரதா, ஈரோடு தமிழன்பன், தமிழ்மொழிக் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், பேராசிரியர் சாலமன் பாப்பையா, பேராசிரியர்
கு. ஞானசம்பந்தன், கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் அந்தமான் சென்று வந்துள்ளனர். உரையாற்றியும் மகிழ்ந்துள்ளனர்.
நூலாசிரியர் கவிஞர் சி. சக்திவேல் அவர்கள் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 34 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியராகப் பணியாற்றி உள்ளார். அங்கு கற்பித்த அனுபவம், வாழ்ந்த அனுபவம், நேரில் கண்டு ரசித்த அனுபவம் என அனைத்தையும் எழுத்தாக்கி வெற்றி பெற்றுள்ளார்.
அந்தமான், நிக்கோபார் தீவுகளில் வளரும் தாவரம், வாழும் கடலடி உயிரினங்கள், பறவை, கடற்கரை, சுற்றுலாக் காலம், எப்படி வருவது, போக்குவரத்து விபரம் அங்குள்ள விதிமுறைகள் - எல்லாம் விபரமாக எழுதி உள்ளார். அந்தமான் சுற்றிப்பார்க்க உதவிடும் கையேடு என்றே சொல்லலாம்.
இலக்கியம் பற்றியும் எழுதி உள்ளார். முதல் தமிழ் நூல், தமிழர் சங்கம் வெளியிட்ட நூல்கள் பட்டியல், அந்தமானில் வெளிவந்த தமிழ் நூல்களின் பட்டியல், ஆய்வுக்கட்டுரைகளின் பட்டியல், அந்தமான் எழுத்தாளர்கள், கவிஞர்கள் பட்டியல், மலையாளம், ஆங்கிலம் இந்தி எழுத்தாளர்கள் பட்டியல், தமிழர் வார இதழ்கள், பிறமொழி இதழ்கள், கலை மற்றும் நாடகங்கள் குறித்து, விளையாட்டு பற்றியும் இப்படி பல தகவல்கள் நூலில் உள்ளன.
அந்தமானில் பல்லாண்டுகள் வசித்த காரணத்தால், உற்றுநோக்கி ஆராய்ந்து தேடி அறிந்து நூலை வடித்துள்ளார். ‘அழகிய அந்தமான்’ என்பது முற்றிலும் பொருத்தமே. உண்மையிலேயே அழகிய அந்தமான் தான் என்பதை உணர வைத்த நூல் இது. அந்தமான் பற்றி இவ்வளவு விரிவாக, இதுவரை வேறு எந்த நூலும் தமிழில் வரவில்லை என்று அறுதியிட்டு கூறலாம். இந்த நூலை எழுதியதற்காக அந்தமான் அரசாங்கம் இவருக்கு உயரிய விருதை வழங்கலாம். சுற்றுலா வளர்ச்சிக்கு உதவிடும் உன்னத நூல். நூலாசிரியர் கவிஞர்
சி. சக்திவேல் அவர்களுக்கு பாராட்டுகள், வாழ்த்துகள்.
கருத்துகள்
கருத்துரையிடுக