வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம் நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி

வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம் நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி எழுத்தாளர் சோ. பரமசிவம் அவர்கள் சிவகங்கை மாவட்டம், முனைவென்றி என்ற கிராமத்தில் எளிமையான விவசாய குடும்பத்தில் பிறந்து, படித்து பட்டம் பெற்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பல பணிகளில் பணிபுரிந்து கணக்கு அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றபின் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கி வருகின்றார். ‘செல்ல மகன்’ என்ற சிறுகதை தொகுப்பு, மதுரை வாசகர் வட்டத்தில் கோலாகலமாக மாநாடு போல வெளியிடப்பட்டது. இவரது நண்பர் கவிஞர் ஆ. சுந்தரபாண்டியனின் கவிதை நூலும் அன்று தான் வெளியிடப்பட்டது. அந்த நூலின் வரவேற்பைத் தொடர்ந்து வந்துள்ள இந்த சிறுகதை தொகுப்பு நூல் சிறப்பாக வந்துள்ளது. பத்து முத்திரைக் கதைகள் உள்ளன. இவரது கதைகளைப் படித்தபோது இலக்கிய இமயம் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களின் குருவான மு.வ. என்று அழைக்கப்படும் மு.வரதராசன் அவர்களின் நினைவு தான் வந்தது. அவரது பல கதைகள் படித்துள்ளேன். நூலாசிரியர் சோ. பரமசிவம் அவர்களும் படித்து இருப்பார்கள். அவரது பாதிப்பு இவரது எழுத்துக்களில் உள்ளன. ஒவ்வொரு கதையிலும் அறநெறி கற்பிக்கும் வண்ணம் மு.வ. பாணியிலேயே எழுதி உள்ளார். எல்லோருக்கும் புரியும் வண்ணம் மிக எளிய நடையில் எழுதி உள்ளார். மதுரை நகரத்தையும் கோவை நகரத்தையும் எழுத்தின் மூலம் படம்பிடித்துக் காட்டி உள்ளார். சில எழுத்தாளர்கள் வலிய பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களை இவர் பயன்படுத்தவில்லை. பெரும்பாலும் நல்ல தமிழ்ச் சொற்களையே பயன்படுத்தி உள்ளார். தெளிந்த நீரோடை போன்ற நல்ல நடை, எளிதில் விளங்கும் வண்ணம் உள்ளன. ஒவ்வொரு கதை படிக்கும் போதும் நம் மனக்கண்ணில் காட்சியாக விரிகின்றன. நிகழ்வை நேரில் பார்க்கும் உணர்வை தருகின்றன. திரைப்படம் பார்ப்பது போல உள்ளது. படித்து முடித்ததும் மறந்து விடாமல் மனதில் காட்சியாக வந்து நினைவில் வருகின்றன. இதுதான் எழுத்தாளரின் வெற்றி. சிறுகதை எழுதுவதில் வெற்றி பெற்றுள்ளார். அடுத்து நாவல் எழுத வேண்டும் என்ற என் வேண்டுகோளையும் வைக்கின்றேன். பெரும்பாலான அரசு ஊழியர்கள் பணி நிறைவு பெற்றவுடன் மனதளவில் சோர்ந்து தன் வீடு, தன் குடும்பம் என்று சோர்ந்து விடுவார்கள். ஆனால் இந்நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோ.பரமசிவம் அவர்கள் ஓய்வுக்குப் பின், ஓய்வுக்கு ஓய்வு தந்து விட்டு இளைஞனைப் போல இயங்கி வருகின்றார். முதுமுனைவர் வெ. இறையன்பு அவர்கள் சொல்வார்கள். ‘இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்’ என்று. அதுபோல நூலாசிரியர் இயங்கிக் கொண்டே இருக்கிறார். அதிக நூல்கள் படிக்கிறார். மதுரை வாசகர் வட்ட நிகழ்வுகளில் உலகத் தமிழ்ச்சங்கம்-மதுரை நிகழ்வுகளில் தவறாமல் கலந்து கொள்கிறார். சமுதாயத்தை உற்றுநோக்கி சமுதாயத்தை சீர்படுத்தும் விதமாக பண்பை ஒழுக்கத்தை போதிக்கும் விதமாக சிறுகதைகளை எழுதி உள்ளார். கவிதைகள் போல சிறுகதைகளை மேற்கோள் காட்ட முடியாது. பதச்சோறாக இரண்டு சிறுகதைகள் பற்றி மட்டும் எழுதுகிறேன். மற்றவை வெள்ளித்திரையில் காண்க என்பதைப் போல உள்ளே சென்று படித்து பாருங்கள். படிப்பதற்கு விறுவிறுப்பாகவும் சுவையாகவும் சில திருப்பங்களுடனும் கதைகளை எழுதி உள்ளார். கதையில் வரும் பாத்திரங்களுக்கு நல்ல தமிழ்ப்பெயர் சூட்டி உள்ளார். தமிழமுது, அறிவுக்களஞ்சியம், தமிழ்குழலி, தமிழினியா - இப்படி தமிழ்ப்பற்றுடன் பெயர் சூட்டி உள்ளார். இன்றைக்கு சமுதாயத்தில் குழந்தைகளுக்கு வாய்க்குள் நுழையாத வடமொழிப் பெயரை பொருள் புரியாமல் வைத்து வருகின்றனர். தமிழ்ப்பெயர் சூட்டிட அறிவுறுத்தும் விதமாக கதைப் பாத்திரங்களுக்கு நல்ல தமிழ்ப்பெயர் சூட்டி உள்ளமைக்கு பாராட்டுகள். இன்றைக்கு வீடுகளில் குழந்தை அழுதால் அலைபேசியை விளையாட வழங்கி அழுகை நிறுத்துவது, சாப்பிட மறுத்தால் அலைபேசி தந்து சோறு ஊட்டுவது என நடந்து வருகின்றது. குழந்தைகளிடம் அலைபேசியைத் தந்து விளையாட வைப்பது அவர்களது கண்களைப் பாதிக்கும் என்ற விழிப்புணர்வை ஒரு கதையில் விதைத்துள்ளார். மற்றொரு கதையில் பணக்கார மாப்பிள்ளை பார்ப்பதை விட, ஏழையானாலும் எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ஒழுக்காமன மாப்பிள்ளையை மகளுக்குப் பாருங்கள் என்று வலியுறுத்தி உள்ளார். ‘உழைத்தால் உயரலாம்’ என்று வலியுறுத்தி உள்ளார். பி.காம். படித்துவிட்டு வேலை கிடைக்காமல் புட்டு விற்பவன் பின்னாளில் எழுத்தாளனாக உயர்ந்து விருதும் பத்து இலட்சம் பரிசும் பெறுவதாக முடித்துள்ளார். இப்படி ஒவ்வொரு கதையிலும் சமுதாயத்திற்கு மிகவும் தேவையான நற்கருத்துக்களை விதைத்து உள்ளார். பாராட்டுகள். வாழ்த்துகள்.

கருத்துகள்