படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா.இரவி !

சங்கர் இலண்டன் 1947ல் ஜவஹர்லால் நேரு அவர்கள் பதவியேற்ற பொழுது இருந்த இந்தியாவுக்கும், 2023 ல் இருக்கிற இந்தியாவிற்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்குமானது. உணவு பஞ்சத்தால், வறுமையின் பிடியில் சின்னாபின்னமாக, கசக்கி சக்கையாக பிழியப்பட்ட நிலையில் தலைமைப் பொறுப்பை ஏற்று, நாட்டு மக்களின் ஆரம்ப கால நிலையை மாற்ற அவர் எடுத்த முயற்சிகள் மிக மெச்சக்கூடியவை. பல தேசங்களுக்கு பயணித்து, அவர் எடுத்த முயற்சிகளால் உணவு பொருட்களை நம் நாட்டிற்கு வரவழைத்தார். பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த சோசியலிசத்தின் சிறந்த அம்சங்களை கொண்டு ஒரு பொருளாதார கொள்கையை வகுத்தார். அந்த கொள்கையின் படி நாட்டில் தொழிற்சாலைகள் மெல்ல மெல்ல வளர ஆரம்பித்தன. நிலங்களை உழவு செய்பவர்களின் கையில் கொடுத்தமை, பசுமை புரட்சி, விவசாயிகளுக்கு கடன் உதவி போன்ற திட்டங்கள் கொண்டு வந்ததால், நாட்டில் உணவு உற்பத்தி தன்னிறைவை பெற்றது. பல அணைகளை கட்டியதால் பாசன திட்டங்கள் விருத்தி பெற்றன. கல்வி, மருத்துவம், குடும்பக் கட்டுப்பாடு, பொருளாதாரம் , உள்கட்டமைப்பு இப்படி பலவற்றில், இன்று நாம் அறுவடை செய்துக் கொண்டு இருப்பது நேரு வைத்த விதையால் தான். நவீன இந்தியாவை கட்டமைக்க முயன்றவர் நேரு. அதிலும் பெண்களுக்காக அவர் செய்தது ஏராளம். பெண்களுக்கு சொத்துரிமை, விவாகரத்து செய்யும் உரிமை, தனியாக தத்தெடுக்கும் உரிமை, வேலைக்கு போவது, தன் சம்பாதியத்தை தானே வைத்துக் கொள்ளும் உரிமை எதுவும் இல்லாத சூழல் நிலவிய காலம். பெண்களுக்கு இவற்றை பெறும் உரிமை இருந்ததில்லை. இந்த விதிகளை இந்தியாவை ஆண்ட முகலாய அரசர்கள் மட்டுமல்ல இந்து, சமண, பௌத்த அரசர்கள் கூட மாற்றத் துணியவில்லை.

கருத்துகள்