ின்னக்கலைவாணரே சீக்கிரம் சென்றது ஏனோ? கவிஞர் இரா.இரவி !

சின்னக்கலைவாணரே சீக்கிரம் சென்றது ஏனோ? கவிஞர் இரா.இரவி ! நகைச்சுவையால் இதயங்கள் வென்ற நகைச்சுவை மன்னனே நல்லவனே! அப்துல் கலாம் அவர்களின் மரக்கன்று ஆசையை அரங்கேற்றி மகிழ்ந்த செயல் வீரரே! இலட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு இலட்சக்கணக்கான மரங்களை வளர்த்தவரே! அமெரிக்கன் கல்லூரியில் பயின்று அமெரிக்கன் கல்லூரிக்கு புகழ் சேர்த்தவரே! சின்னக்கலைவாணர் பட்டம் பெற்றவரே சிந்திக்க வைக்கும் கருத்துக்கள் சொன்னவரே! பகுத்தறிவுக் கருத்துக்களை திரைப்படத்தில் விதைத்தவரே! பெரியாரின் கருத்தை நாசுக்காகச் சொன்னவரே! கலைஞர் பற்றி கவிதை வாசித்து அசத்தியவரே! கவிதையால் சிரிப்பலைகள் விளைவித்தவரே! நூல்கள் வாசிப்பை வழக்கமாகக் கொண்டவரே! நுண்ணிய கருத்துகளை பேச்சில் விதைத்தவரே விழிப்புணர்வை விதைப்பதில் முன்நின்றவரே! விவேகானந்தர் இயற்பெயரை ‘விவேக்’ ஆக மாற்றியவரே! திரைஉலகில் தனிமுத்திரை பதித்தவரே தன்னிகரில்லாப் பெருமைகளைப் பெற்றவரே! பொதுநலத்தில் என்றும் பற்று கொண்டவரே பலர் நலம் பெற உதவிகள் புரிந்தவரே! நகைச்சுவைப் பகுதி வசனத்தை தானே எழுதியவரே நகைச்சுவை நடிப்பில் கொடிகட்டிப் பறந்தவரே! உதவி இயக்குநர்களுக்கு உதவிக்கரம் நீட்டியவரே உதவிகள் செய்து உயர்ந்த இடம் பெற்றவரே! மனிதநேயம் மிக்க மாமனிதராக வாழ்ந்தவரே மண்ணில் வாழ்வாங்கு வாழ்ந்து சிறந்தவரே! பத்மஸ்ரீ விருது பெற்ற நகைச்சுவை நடிகரே! பசுமைப்புரட்சியை அமைதியாக நிகழ்த்தியவரே ! சிரிப்பில் ஆழ்த்தி மகிழ்வித்த கலைஞர் சோகத்தில் ஆழ்த்தி சீக்கிரம் சென்றது ஏனோ? உடலால் உலகை விட்டு மறைந்தாலும் உன்னத நகைச்சுவைகளால் வாழ்வாய் என்றும்!

கருத்துகள்