சித்த மருத்துவர் சிவராமன் பதிவு
ஆம்ஸ்டர்டாம்...
நெதர்லாந்து நாட்டின் அழகிய தலைநகரம்.
டச்சுக்காரர்கள் என்று வரலாற்றுப் புத்தகங்களில் நாம் படித்த டச்சு மக்கள் நாடுதான் நெதர்லாந்து.
பிரித்தானியர்கள் வருகைக்கு முன்பே நம் கிழக்குக் கடற்கரை நகரங்களை ஆண்டவர்கள் இந்த டச்சுக்காரர்தாம்.
நாகப்பட்டினம், பரங்கிப்பேட்டை, பழவேற்காடு என அவர்களின் டச்சுக்கோட்டையும் டச்சு ஆலயங்களும் நம் ஊரில் இன்றும் பார்க்க முடியும்.
துணி மிளகு பட்டு வணிகம்னு புறப்பட்டு வந்தவங்க
கோரமண்டல கடற்கரையில கோட்டையைக் கட்டி 300 ஆண்டுகள் நம்ம நெய்தல் நிலத்துல சுருட்டுனது ஏராளம்.
டச்சுக்காரர்களின் கலை அறிவியல் கண்டு பிடுப்புகள் ஏராளம்.
மைக்ரோஸ்கோப் முதல் டெலஸ்கோப் வரை கண்டறிந்தது "டச்சூஸ்" தாம்.
கலை உலகில் வான்கோவின் ஓவியங்களை இப்போதும் வாய்பிளந்து பார்ப்போர் உலகெங்கும் உண்டு.
அப்படியாப்பட்டவர்களை படைத்த ஆம்ஸ்டர்டாம் நிலம் ஒரு சொர்க்கபுரி. கடவுளின் படைத்தலோ அல்லது கரும்புள்ளியின் வெடிப்போ,
இந்த நிலத்தை எறியும் போது கவிதை படித்துக்கொண்டு இருந்திருக்க வேண்டும்!
"கடல்பரப்பிற்கு கீழான நிலப்பரப்பு இது" என்பதை ஏழாம் கிளாசில் இருந்து இன்றுவரை எனக்கு புரியவில்லை.
'அப்ப ஏன் தண்ணீ ஊருக்குள்ள வரலை?' என்பதுதான் அந்த கேள்வி.
ஆனால் ஆம்ஸ்டர்டாமின் கடலோடைக்குள் தண்ணீர் வருவதும் போவதும் என ஊரெல்லாம் நீர் சூழந்த நிலம் அது.
சிகை அலங்காரம் போல,
நிலத்தில் வகிடு எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக ஆம்ஸ்டெல் நதியின் முகத்துவாரத்தில் மனிதன் அழகுபடுத்தியதும் உண்டு.
ஆம்ஸ்டர்டாம் ஒரு சைக்கிள் நகரம். இங்கே வசிக்கும் மனிதர்களைவிட சைக்கிள்கள் அதிகம். ஏர்போர்ட்டிலும் இரயில் நிலையத்திலும் உள்ள மிதிவண்டி நிறுத்தங்களில் மலை போல நிறுத்தப்பட்டிருக்கும் சைக்கிள்கள் நம்மை மலைக்க வைக்கின்றன. வெயில் காலத்தில் அனேகமாக எல்லோரும் சைக்கிள்தாம்.
ஆம்ஸ்டர்டாம் ஒரு மியூசிய நகரம்.
2004 இல் நான் முதல்முறை இந்த நகரத்துக்கு வந்தபோது முதலில் போய் பார்த்தது
'வான்கோ மியூசியம்'தான். வான்கோவின் உலகப்புகழ் பெற்ற உருளைக்கிழங்கு படத்தை, இன்றைக்கும் மோனாலிசாவை பாரீசில் லூவர் மியூசியத்தில் பார்ப்பது போல பெருங்கூட்டமாய் வந்து பார்ப்போர் ஏராளம்.
நாங்கள் இந்தப்பயணத்தை அவசரகதியில் திட்டமிட்டு கிளம்பியதால், மியூசியத்துக்கு உள்ளே போக முன் பதிவு செய்ய முடியவில்லை.
கிட்டத்தட்ட ஒருமாத காலத்திற்கு வான்கோ மியூசியத்துக்குள் நுழைய இடம் இல்லை.
வாசலிலேயே , வண்டியில் விற்றுக்கொண்டிருந்த வேகன் சாலட்டை வாங்கித் தின்று கொண்டே "2004 இல் நானும் நண்பர் டிரிவரும் போனோம்
எப்டி இருந்துச்சு தெரியுமா?" என என்னவளிடம் கதை விட்டேன்.
வான்கோ அருகிலேயே ரிஜீஸ் மியூசியமும் பிரம்மாண்டமாய் இருந்தது.
அதற்கும் டிக்கட் கிடைகவில்லை. குளிரில் அவசரமாய் உச்சா வந்தது. அங்கு போக டிக்கட் கிடைத்தது.
ஆமாம்! இங்கே நெதர்லாந்து ஜெர்மனியில், 'உங்க உச்சா' போக ஒரு ஈரோ( 80 ரூவா சொச்சம்) கொடுக்கணும்.
வீட்ல இருந்து கிளம்பும் போதே மறக்காம 'உச்சா' போய்ட்டு வரணும்ங்கிறது நெதர்லாந்து நியதி. சில பெட்ரோல் பங்குல உச்சா போய்விட்டு வந்து அந்த டிக்கட் காப்பியைக் கொடுத்தா காபி காசில் கழித்துக்கொள்கிறார்கள்.
உவ்வேல்லாம் சொல்லக்கூடாது.
ஒரு ஈரோ.!
அந்த கடலோடையில் படகுச்சவாரி ஆம்ஸ்டர்டாம் சுற்றுலாவின் முதலிடம்.
துலிப் மலர் கொடுத்து காதலைச் சொல்ல,
சிகப்பு ஒயின் உடன் காமத்தைச் சொல்ல என சிறப்பு சவாரிகள் நிறைய உண்டு.
இந்த சவாரியில் ஒரு மணி நேரத்தில் நெதர்லாந்தின் வரலாறை ஆங்கிலம் பிரஞ்சு ஈஸ்பானிய டச்சு என பல மொழியில்
விளக்குகிறார் படகோட்டி.
இரண்டு பக்கமும் இப்ப குடியிருப்போர், கோல்டன் ஏஜில்(1700 பக்கம்) குடியிருந்தோர் என எல்லா விவரமும் இந்த பயணத்தில் கிடைக்கும்.
டச்சு வீதிகளில் நடப்பதே பெரும் மகிழ்ச்சிதரும்.
ஒடுங்கிய தெருக்களில் உயரமாக இருக்கும் அந்த டச்சு வீட்டுக் கதவுகள் கீ ராஜநாராயணின் "கதவு' கதையை, ஏனோ ஞாபகப்படுத்தியது.
அப்படியான கிராமத்து கதவில் நாமெல்லாம் ஏறி நின்று, வீட்டில் வளர்ந்த அண்ணன் கதவைத் தள்ளிவிட, வானத்தில் பறந்து பயணிக்கும் அனுபவம் நம்மில் பலருக்கும் இருந்திருக்கும்.
டச்சுவீட்டுக் கதவுகள் அப்படியான அடிதண்டால் வைத்து அழகாய் அமைந்திருந்தது.
"அடிதண்டாலா? அப்டீன்னா ?"- என்பவர்கள் ஒரு எட்டு நெல்லை சென்று பேசி வரவும்.
நான் இதை சிலாகித்துச் சொல்ல, பொண்ணு வீட்டுக்குப் போன் செய்து பையனிடம்,
" டேய் அப்பா பூமர் அங்கிளாத்தாண்டா ஆயிட்டாரு". என்றாள்.
நடந்து நடந்து கால் வலிக்க,
நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க நான் ஒரு cofee shop போய் வாரேன் என நுழைய ,
பொண்ணு பதறி கையை பிடிச்சு இழுத்தாள்.
"யப்பா! இது காபி ஷாப்னா வேற weed விக்குற கடை " என்றாள் ;
weed ஆ அப்படின்னா களைச்செடியா? என்றேன். "களை இல்ல. கஞ்சா செடி" என்றாள்.
ஆமாம் . நெதரர்லாந்தில் கஞ்சா அனுமதிக்கப்பட்ட வஸ்து. கஞ்சாவில் இருந்து எடுக்கப்படும் CBD எண்ணெயில் கேக் சாக்லேட் என சகலமும் விற்கிறார்கள்.
நான் ஓடிப்போய் வெளியறி, சரியான டீக்க்டையில் வழக்கமா நமக்குத்தெரிந்த ஒரே காபசீனோ வை காபியை மனதில் நினைத்து குடித்து தேற்றிக்கொண்டேன்.
நெதர்லாந்து மிக முற்போக்கான நாடு.
எல்லா கலாச்சாரத்தினரும் மகிழ்வாய் வசிக்கும் நாடு.
ஊரில் கால்வாசிப்பேர் வேற்று நாட்டவர்.
உடம்பின் ஒவ்வொரு செல்லையும் கண்டுபிடுத்தவர், மனதின் மகிழ்விற்கான கலையின் நுணுக்கங்களை கண்டறிந்தவர், உணவின் பல்வேறு நுட்பங்களை ஆராய்வோர்,
இன்றும் அடிப்படை அறிவியலின் பல உச்சங்களை கண்டறிந்தவர்கள், இப்போதும் கண்டறிந்து கொண்டிருக்கும் நிலம் இது.
கடந்த பத்து நாட்களாக இங்கு மகிழ்வாக 2500 கிமீட்டருக்கு மேல் வாகனத்திலும் 70கிமீட்டருக்கு மேல் நடந்தும் திரிந்து மகிழ்ந்த அனுபவம் அலாதி அனுபவம்.
எண்டார்பின்ஸ் காது வழியே பொங்கி வழிய வழிய,
நாளைக் காலை ஆம்ஸ்டர்டாமில் இருந்து சென்னைக்கு விமானம்..
இன்னொரு பயணத்தில் சந்திக்கவும் சிந்திக்கவும் செய்யலாம்!
(நிறைவு)
கருத்துகள்
கருத்துரையிடுக