ஆயிரம் ஹைக்கூ ! கவிஞர் இரா. இரவி .! நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்)

ஆயிரம் ஹைக்கூ ! கவிஞர் இரா. இரவி .! நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்) மூன்றடிகளில் உலகை அளக்கும் வாமன கவி படைக்கும் வித்தகர் உள்ளத்தனையது உயர்வு என்பதை ஓங்கி சொல்லிவருபவர் அதுபோலவே தன்வாழ்க்கையை பாங்குடன் அமைத்துக்கொண்ட செயல் வீரர். அதனால்தான் கல்லூரியில் கால்பதிக்காத இவர் எழுதிய நூல்களை இன்று பல்கலைக்கழகங்கள் தன் மாணவர்களுக்கு பாட நூலாக அறிவித்துள்ளது. முற்போக்கு சிந்தனைகள் வளர்க்கும் இவர் கவிதைகள் காலத்தால் அழியா தரம் வாய்ந்தவை. ஹைக்கூ திலகம் என்ற அடைமொழியுடன் மதுரை மண்ணிற்கு அடையாளமாகி போன நம் கவிஞர் தனது ஆயிரம் ஹைக்கூவில் தமிழ் தொடங்கி எழுச்சி மலர்ச்சி புதுமை புரட்சி என பல்வேறு தலைப்புகளில் தன் கருத்து காவியத்தை விதைத்துள்ளார். சொல்லவரும் விஷயத்தை சுற்றிவளைக்காது மஹாகவி சொல்வாரே மோதி மிதித்துவிடு பாப்பா என்று அதுபோலவே தன் வார்த்தை சட்டைகளை வளைத்து சொடுக்கியுள்ளார். *" *தடுக்கி விழுந்ததும்* *தமிழ் பேசினான்** *அம்மா* என தமிழ் மொழியை மறுதலிப்பவர்களை சாடி ,*பல்லாயிரம் வயதாகியும்* *இன்னும் இளமையாய்* *தமிழ்* என தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளார் முற்போக்கு சிந்தனைகளை மெதுவாய் அடிமனதிலிருந்து கிளறி எடுத்து தூசு தட்டுவதில் கெட்டிக்காரர் இந்த வித்தக கவிஞர்... *"தூணிலும் இருப்பார் துரும்பிலும்* *இருப்பார் சரி* *பின் ஆலயங்கள் எதற்கு* என்று சாடுவதோடு *ஆறுகால பூஜை* *ஆலயத்தில் கடவுளுக்கு* *பட்டினியில் மனிதன்* என எடுத்துரைக்கும்போது நமக்கும் என்னடா சாமி என உள்ளபடியே கோபம் தான் வருகிறது. *திருந்தாத மக்கள்* *அமோக வசூல்* *சாமியார் தரிசனம்* என போலி சாமியார்களை தோலுரிக்கும் வேகமாகட்டும் *அங்கீகரிக்கப்பட்ட* *சூதாட்டம்* *பங்குசந்தை* என பங்குச்சந்தைக்கு தன் எதிர்ப்பை சொல்லி அங்கலாய்க்கும் பாணியாகட்டும் கவிஞரின் வரிகளில் கனல் தெறிப்பது நிதர்சனம். தனது மனித நேய கவிதைகளில் முதியோர் இல்லங்கள் வயதானவர்களின் அவலநிலையை கூற புகுகையில் *குஞ்சுகள் மிதித்து* *கோழிகள் காயம்* *முதியோர் இல்லம்* என முதியோர் நிலையை நம் கண்முன்னே கொண்டு வருகிறார். *செடிவளர்த்தோம் கொடிவளர்த்தோம்* *மனிதநேயம் ?* என்ற கேள்விக்குறியுடன் முடித்த கவிதை கவிதையல்ல பிரம்பு கொண்டு சுளீர் என அடித்த உணர்வு.. *ஊதிய உயர்வு* *வறுமையில்வாடியதால்* *சட்ட மன்ற* *உறுப்பினர்களுக்கு* என தவறுகள் எங்கு கண்டாலும் தவறாமல் வார்த்தை சாட்டைகள் கொண்டு கசையடி கொடுக்கும் பணி இவரது தனி பாணி..... இவர் இயற்கையை நேசிக்கும் இதயத்துக்கு சொந்தக்காரர் என்பதை *நட்சத்திர கவிஞர்கள்* *நிலவின் தலைமையில்* *வானில் கவியரங்கம்* என 3வரிகளில் விண்ணில் தோன்றும் நிலவை முழுவதுமாய் காட்சிப்படுத்தி கவிதை படைத்த அழகு, *ஒவ்வொரு நாளும்* *ஒவ்வொரு மாதிரி* *நிலவும் அவளும்* என்று நிலவை ரசிக்கும் நளினம் நம்மை வியக்க வைக்கிறது. **பட்டுப்பூச்சிகளின்* *அழுகுரல்கள்* *பட்டுப்புடவையில்** என்ற கவிதை பார்த்துவிட்டு பட்டுசேலை கட்டவே கூசுகிறது.... இது அவர் எழுத்துக்களுக்கு கிடைத்த வெற்றி *வயலுக்கு உரமிட்டது* *புற்களை மேய்ந்த ஆடு* என்று பிரதி உபகாரம் செய்யும் பக்குவத்தை சிறப்பாக சித்தரித்துள்ளார் கவிஞர். *காணிக்கை கேட்காத* *கடவுள் அம்மா* என அம்மாவை போற்றும் கவிஞர் * *மாதா பிதா குரு* *ஒரேவடிவில்** *மனைவி* என தன் 3வரிகளையும் சேர்த்து முழு மனதையும் மனைவிக்கே எழுதி வைத்துள்ளார். *வியர்வை எழுதிய உன்னத* *கவிதை* *நெல் மணிகள்* என விவசாயிகளின் பெருமை பேசும் பாங்கு **சிரித்தான்* *பிச்சைக்காரன்* *சாலையோர* *வியாபாரியிடம்* *கையேந்தும்** *காவல்துறை* என காவலரை கேலிசெய்யும் போங்கு..... *மூடநம்பிக்கைகளை* *முற்றுப்புள்ளியாக்கியது* *ஈரோட்டு மை* என்று பெரியாரை நம் கண் முன்னே கொண்டுவரும் கவிஞரை *மூடநம்பிக்கையை* *முற்றுப்புள்ளி ஆக்கியது* *இந்த மதுரை காரரின்* *மை..* *ஏனெனில் இது* *ஈரோட்டு முற்போக்கு* *சிந்தனைகளுடன்* *இணைந்து வளர்ந்த மை* என கவிஞரை பாராட்டவே தோன்றுகிறது பொதுவாகவே கவிஞரின் நூற்களை வாசிக்கும் நான் அந்த தாக்கத்தில் ஹைக்கூ எழுத தொடங்கிவிடுவது வழக்கம். அந்த அளவு எழுத்துக்களில் புதுமை புரட்சி என புதுப்புது யுத்திகள் காட்டி மிரட்டிவிடுவார். ஐயா அவர்கள் வெற்றிப்பயணம் மேலும் வளரும்... நன்றி

கருத்துகள்