அறம்
- கவிஞர் இரா. இரவி
*****
வணக்கம் வள்ளுவரே வாயார உன்னை
பாராட்ட வந்துள்ளோம் பாராட்டை ஏற்பீரே!
அறவழியில் பொருள் ஈட்டி வாழ்ந்தால்
இன்பம் பெறலாம் என நன்கு உணர்த்தியவரே!
அறன் வலியுறுத்தல் என அதிகாரம் வகுத்தவரே
அறவாழ்வே நலவாழ்வு என அதிகாரமாக உரைத்தவரே!
அறத்தை மறந்தால் கேடு வருமென்று அன்றே
ஆணித்தரமாக திருக்குறளில் வடித்திட்ட வல்லவரே!
அறச்செயல்களை முடிந்தளவிற்கு செய்திடல் வேண்டுமென
அறத்தின் சிறப்பை மேன்மையை விளக்கியவரே!
மனத்தில் குற்றமில்லாமல் வாழ்தலே அறமென
மனமதை செம்மையாக்கிட சிறப்பாகச் செப்பியவரே!
பொறாமை ஆசை கோபம் வன்சொல் நான்கையும் தவிர்த்து
பொறாமையின்றி வாழ்வதே வாழ்வென வழிமொழிந்தவரே!
அறம் செய்ய சற்றும் யோசிக்காமல் உடன் செய்
அறத்தை தினந்தோறும் செய்யென முரசு கொட்டியவரே!
அறச்செயலால் கிடைப்பதே உண்மையான இன்பம்
மற்ற செயலால் கிடைப்பவை இன்பமன்று என இயம்பியவரே!
முப்பத்தெட்டு அதிகாரங்களில் அறத்துப்பால் பாடி
முக்காலமும் நிலைத்திட்ட எங்கள் திருவள்ளுவரே!
அறத்துப்பால் படித்ததோடு நிற்காமல் வாழ்வில்
அனுதினமும் தவறாமல் கடைபிடித்தவர் அப்துல்கலாம்!
குடியரசுத்தலைவர் பதவிஏற்பு விழாவிற்கு
நூல்கள் தந்த நூலகரை வரவழைத்த பண்பாளர்!
காலுறை மாட்டிவிட பணியாளர் முயன்றபோது
கண்டனம் செய்து தானே அணிந்திட்ட மனிதநேயர்!
பரிசளித்த மாவரைக்கும் இயந்திரத்துக்கு காசோலை தந்தவர்
பயன்படுத்தி பணத்தை எடுக்கச் சொன்னவர்!
எடை குறைவான செயற்கைக்கால்கள் செய்ததே
இன்பமான நேரம் என்று அறிவிப்பு செய்தவர்!
சாதாரண குடிமகனுக்கும் மதித்து மடல் எழுதியவர்
சாதாரண வாழ்வையே விரும்பி வாழ்ந்தவர்!
குளிரில் வாடிய காவலர்களுக்கு கனிவுடன்
குளிராடை வழங்கிட ஆணையிட்ட அன்பாளர்!
ஆடம்பர இருக்கையை வேண்டாமென்று தவிர்த்து
அனைவருக்குமான இருக்கையில் அமர்ந்த நல்லவர்!
தூக்குத்தண்டனையில் உடன்பாடு இல்லாத காரணத்தால்
கருணை மனுக்களை நிராகரிக்காத வல்லவர்!
பிறந்த ஊராம் இராமேஸ்வரத்திற்கு புகழ் சேர்த்தவர்
பிறந்ததன் பயனை உணர்ந்து வாழ்வாங்கு வாழ்ந்தவர்!
அறவாழ்வு வாழ்வதற்கு இலக்கணம் வகுத்தவர்
அனைவரின் உள்ளத்திலும் அறத்தால் இடம்பிடித்தவர்!
--
கருத்துகள்
கருத்துரையிடுக