தன்மானத் தமிழ் போற்றி! நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி

தன்மானத் தமிழ் போற்றி! நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி ஜோஷிகா பதிப்பகம், 2/677 ஏ, நல்லசிவன் குறுக்குச்சாலை, வைகை சதுக்கம், வி.பி. சிந்தன் நகர், வேடர் புளியங்குளம், மதுரை. பக்கங்கள் : 74, விலை : ரூ.100 ***** கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் அவர்கள் மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி. வீரபாண்டியத்தென்னவன் தலைமையில் நடந்த கவியரங்குகளில் தவறாமல் கலந்துகொண்டு கவிதை வாசிப்பவர். அவ்வாறு வாசித்த கவிதைகளையும் பல்வேறு கவியரங்குகளில் கலந்து கொண்டு பாடிய கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார். 51 தலைப்புகளில் கவிதைகள் உள்ளன. தலைப்புகளைப் படித்தால் தமிழ்ப்பற்று வரும் அளவிற்கு மிகச்சிறப்பான தலைப்புகள். உலகின் முதல் மொழியான தமிழ்மொழியை போற்றிப் பாராட்டி கவிதைகள் வடித்துள்ளார். தமிழ்மொழிக்கு வந்துள்ள தடைகளையும் எடுத்து இயம்பி உள்ளார். நூலாசிரியர் பல்வேறு பட்டங்கள் பெற்ற கல்விப்புலமை மிக்கவர். கவியாற்றல் மூலம் தமிழ் விருந்து, கவி விருந்து வைத்துள்ளார். நூலை வடிவமைத்த கவிமாமணி சாந்தி திருநாவுக்கரசு அகவுரை வழங்கி உள்ளார். சந்தக்கவிஞர் சக்கந்தி நா. வேலுச்சாமி அவர்கள் வாழ்த்துரை வழங்கி உள்ளார். கவிபாரதி கு.கி. கங்காதரன் நட்புரை வழங்கி உள்ளார். பதச்சோறாக நூலிலிருந்து சில வரிகள் உங்கள் பார்வைக்கு: தமிழ்மொழியில் மாற்றுமொழி கலப்பதேன்? தனித்தமிழ் போற்றுகிற தருணமெலாம் இன்றிருக்க தயவின்றிப் பிறமொழிமேல் தாகமும் பிறப்பதேனோ? கனித்தமிழ், கன்னித்தமிழ், காலமதைக் கடந்ததென கருத்தோடு சொல்லிவிட்டு கைக்குள்ளே பிறமொழியா? முதல் கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது. தமிழா தமிழை தமிழாகப் பேசு, பிறமொழிச் சொற்களை கலக்காமல் பேசு என எழுதி அறிவுறுத்திய விதம் சிறப்பு. பாராட்டுகள். தமிழ் காக்கும் தகுந்த வழி! தருக்கம் வேண்டாம் தமிழ்மணம் குறைக்கவும் வேண்டாம் நெருக்கம் கூட்டி நேர்மையுடன் தமிழ் காக்கச் சூளுரைப்பீர்! தமிழர்கள் யாவரும் தமிழைக் காத்திட வேண்டும், போற்றிட வேண்டும், பாராட்டிட வேண்டும் என தமிழுணர்வு கவிதைகள் மூலம் விதைத்து உள்ளார். செழுமைமிகு தமிழுக்கேன் சமஸ்கிருத எழுத்துக்கள்? சங்கம் வளர்த்த தமிழ் அந்நாள்! சங்கமதில் வளர்த்த தமிழ் ஏற்றம்பல கண்ட தமிழ் அங்கம் எல்லாம் துடிக்குதய்யா தமிழின் இன்றைய நிலை எண்ணி! தமிழில் வடமொழி எழுத்துகளை, சொற்களை சிலர் வலிந்து எழுதி வருகின்றனர். தமிழ்க்கொலையை நாளும் செய்து வருகின்றனர். தமிழில் பிறமொழி எழுத்துக்களை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழிலேயே ஏராளமான எழுத்துக்கள் உள்ளன. எழுத்துக்கோ, சொற்களுக்கோ தமிழில் பஞ்சம் இல்லை. என்ன இல்லை நம் தமிழ்மொழியில், ஏன் கையை ஏந்த வேண்டும் பிறமொழியில் என உரக்கப் பாடி உள்ளார். பாராட்டுகள். எண்ணும் எழுத்தும் இணைந்ததே தமிழ்மொழி! கண்கள் இரண்டில் ஒன்றை இழந்தால் பார்வை சற்று மாறிடுமே எண்கள் படைக்கும் நூலான தமிழில் சோதிடக் கணிதம் ஒன்றாகும். தொல்காப்பியர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழுக்கான இலக்கணத்தை எழுதி வைத்துள்ளார். இலக்கணமுள்ள உயர்ந்த மொழி நம் செம்மொழி, தமிழ்மொழி. வளமிக்க தமிழ்மொழியில் வறட்சி என்பது இல்லவே இல்லை. உணவில் கலப்படம் உடலுக்குக் கேடு, மொழியில் கலப்படம் மொழிக் கேடு என கவிதைகள் முழுவதும் தமிழ்மொழியில் கலப்பு வேண்டாம் என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக கவிதைகள் வடித்துள்ளார், பாராட்டுகள். சொல் விளையாட்டுப் போல வளமான சொற்கள் கொண்டு சந்தக் கவியென ஓசை நயத்துடன் பல்வேறு கவிதைகள் வடித்துள்ளார். ஆழ்ந்து யோசித்து அற்புதக் கவிதைகள் பாடி உள்ளார். தமிழராய்ப் பார்த்து திருந்தாவிட்டால்? தெருமுனை பேச்சில் நீ பிறமொழி பேசி உன் தமிழை நஞ்சாக்க ஏன் முனைந்தாய்? அருமைமிகு தமிழ்ச்சொல் ஆயிரம் இருக்க அயல்மொழி சொல்லேன் ஒப்பிடுவாய்? தமிழன் வாயில் தமிழ் இல்லை குறிப்பாக தமிழ்நாட்டுத் தமிழன் வாயில் தமிழ் இல்லை. தமிங்கிலமே பேசி வருகிறான். ஆங்கிலச் சொற்களையும் வடமொழிகளையும் கலந்து பேசி மொழிக்கலப்பு செய்து செம்மொழி தமிழ்மொழியை சீரழித்து வருவதற்கு கண்டனத்தை நன்கு பதிவு செய்துள்ளார். தமிழ் சிதைந்தால் தமிழினமே சிதைந்து போகும் தமிழை வணங்கிட நாளும் உந்தன் தரமே உயர்ந்திடும் மேலும் – இன்பத் தமிழொன்றைத் தனதாக்கி தடம்மாறி திரியும் நிலை தகுமா நலம் மிகுமா? காவடிச் சிந்து பாவகையில் சிறந்த கவிதை எழுதி உள்ளார். பாராட்டுகள். நூல் முழுவதும் தமிழுக்கு வரும் கேடுகளைச் சாடி தமிழ் வளர்க்கும் வழிவகைகளைக் கூறி தமிழன்னைக்கு பாமாலை சூட்டி உள்ளார். எங்கள் தமிழ் எங்கும் தமிழ்! மன்றத்தில் பிறமொழிச் சொல் தவிர்த்த தில்லை மதிகெட்ட மாந்தரிங்கு திருந்த வில்லை குன்றத்தில் ஏற்றிவைத்த விளக்காய் நின்று குணமாக நற்தமிழைக் காத்தல் நன்றே! பல கவிதைகள் பாடியும் மேடைகளில் வலியுறுத்தியும் மக்கள் திருந்தியபாடில்லை. ஊடகங்களிலும் தமிழ்க்கொலை நாளும் நடந்து வருகிறது. மனம் கொதித்து பொறுத்தது போதும் பொங்கி எழு தமிழா என்பதாக கவிதைகள் முழுவதும் சிறப்புமிக்க செந்தமிழை சிதைக்கலாமா? தமிழை தமிழாகப் பேசு, தமிழாக எழுது என தமிழ்நாட்டுத் தமிழருக்கு அறிவுறுத்தும் வண்ணம் அற்புதமாக கவிதைகள் வடித்துள்ளார். நூலாசிரியர் கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் அவர்கள் தொடர்ந்து நூல்கள் எழுதிட வேண்டும். வெளியிட வேண்டும். தமிழ்மொழி அழிப்புக்கு மொழிக்கலப்பிற்கு முடிவு கட்ட வேண்டும், வாழ்த்துக்கள். ******

கருத்துகள்

கருத்துரையிடுக