மனதின் ஓசைகள்! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் ! வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி!

மனதின் ஓசைகள்! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் ! வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி! ***** நூலாசிரியர் கவிதாயினி அ.. நூர்ஜஹான் அவர்களின் மனத்தின் ஓசை தான், ‘மனதின் ஓசைகள்’ என்ற பெயரில் வரும் ‘சிறுகதைத் தொகுப்பு’. தான் சந்தித்த, உணர்ந்த மனிதர்களை பாத்திரங்களாக்கி உலவ விட்டுள்ளார். நூலாசிரியர் வறுமையில் பிறந்தபோதும் கடினமாக உழைத்து படித்து முன்னேறி அறப்பணியாம் ஆசிரியப் பணியாற்றி வருகிறார். ஆசிரியர் பணியோடு நின்று விடாமல் தொடர்ந்து கவிதை, கதை என எழுதி தொடர்ந்து தொய்வின்றி இலக்கியப்பணியும் ஆற்றி வருகின்றார். முதுபெரும் எழுத்தாளர்களான திருச்சி சந்தர், கர்ணன் ஆகியோரின் குருகுலத்தில் பயின்றவர். சிறுகதையை, முன்னணி எழுத்தாளர்கள் போலவே சிறப்பாக எழுதி உள்ளார். வானொலியில் ஒலிபரப்பானவற்றையும் எழுதி நூலாக்கி உள்ளார். ‘சொல்லால் சுட்ட சுகம்’ கதையில் பார்வையற்ற மாற்றுத் திறனாளியான மகேந்திரன் கரம்பிடித்து வழித்துணை மட்டுமல்ல, வாழ்க்கைத் துணையும் ஆகிவிடும் பாரதி பாராட்டுக்குரியவள். கதைகள் முழுவதிலும் மனிதநேயம் கொடிகட்டி பறக்கின்றது. கவிதாயினி என்பதால் கவித்துவமான சொல்லாட்சியுடன் கதைகளை வடித்துள்ளார். பேருந்தில் பயணம் செய்யும் போது நடத்துனருடன் நடந்த உரையாடல்களை உற்றுநோக்கி தினமும் சந்தித்த நிகழ்வுகளை எல்லாம் காட்சிப்படுத்தி கதை வடித்துள்ளார். திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வையும் நேரடியாக பார்ப்பது போன்ற உணர்வையும் ஏற்படுத்தி எழுத்தாற்றல் வெற்றி பெறுகின்றது. கவியரங்கங்களிலும் கவிதை பாடி கலக்கி வருபவர் நூலாசிரியர். சமூக ஊடகங்களான புலனம், முகநூல் முதலான-வற்றிலும் கவிதை, கதை என எழுதி வரும் பன்முக ஆற்றலாளர். ‘பாரதி கண்ட புதுமைப்பெண்’ணாக வலம் வருபவர். பாரதி மீது பற்றுக்கொண்ட காரணத்தால் கதையின் நாயகிக்கு ‘பாரதி’ என்று பெயர் சூட்டி உள்ளார். ‘பாரதி’ என்ற பெயரும் இருபாலருக்கும் பொருந்தும் விதமானது பாரதியின் கவித்திறமைக்கு கிடைத்த வெற்றியாகும். கதையில் கவிதையும் இடம் பெற்றுள்ளது சிறப்பு. நூலாசிரியர் முதலில் கவிஞர், பின்னர் எழுத்தாளர் என்பதால் கவிதை உணர்வு அவருடன், அவர் எழுத்தில் இரண்டறக் கலந்துள்ளது. ‘அழியாத கோலம்’ கதை, படிக்கும் வாசகர்களின் மனதில் அழியாத கோலமாகப் பதிந்து விடுகின்றது. எழுத்தாற்றலின் வெற்றி என்றே சொல்ல வேண்டும். எளிதில் புரியும் வண்ணம் நீரோடை போன்ற எளிய நடை, ஆனால் வலிய கருத்துக்களை போகிற போக்கில் கதையின் மூலம் உணர்த்தி உள்ளார். ‘அழியாத கோலம் கதையின் தொடக்க வரிகளை உங்கள் பார்வைக்குத் தருகிறேன். “இதமான சில்லென்ற தென்றல் மெல்லியதாய் வீசிட இரவெல்லாம் வராத தூக்கம் தொற்றிக் கொள்ளும் காலைப் பொழுது போர்வையை விலக்கியபடியே கண் விழித்தாள்” பானு. ‘கண் விழித்தாள் பானு’ என்று தான் மற்ற எழுத்தாளர்கள் தொடங்கி இருப்பார்கள். நூலாசிரியர் கவிதாயினி ஆ. நூர்ஜஹான் எழுத்தில் கற்பனைவளம், தமிழ் சொல்லாட்சி ரசனை இருப்பதால் படிப்போரின் உள்ளத்தைக் கவரும்வண்ணம் சிறப்பாக எழுதி உள்ளார், பாராட்டுகள். வேலைக்குச் செல்லும் பெண்கள் வீட்டிலும் வேலை பார்க்க வேண்டி உள்ளது. அவர்களுக்கு ஓய்வு என்பதை இல்லை, ‘ஞாயிற்றுக்கிழமை பெண்களுக்கு இல்லை’ என்கிற விதமாக கதைகளில் பெண்ணியமும் பேசி உள்ளார். நூலாசிரியர், ஆசிரியர் என்பதால் தன் வீட்டில் நடந்தது, பயணித்தது, பள்ளிக்குச் சென்றது, பயணித்தது என்றெல்லாம் கதைகளில் வந்து விடுகின்றன. சில நிகழ்வுகள் உண்மையாக எழுதி இருப்பதால் படிக்கும் வாசகர்களுக்கு சுவையாக உள்ளது. கதையோடு வாசகர்களும் மூழ்கிவிடும் வண்ணம் சிறப்பான நடை, பாராட்டுகள். கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் கவிதை, கொஞ்சம் உண்மை, கொஞ்சும் தமிழ் கலந்த கலவை தான் இந்த சிறுகதை தொகுப்பு. பானு ஆசிரியர், முனியாண்டி என்ற ஏழை மாணவனிடம் காட்டும் அன்பு, நெகிழ்ச்சி. ஆசிரியர்கள் பள்ளியில் பாடம் நடத்துவது என்பதோடு நின்று விடாமல், மாணவ-மாணவியரின் சூழ்நிலை அறிந்து உதவிடும் உள்ளம் வேண்டும் என்பதை அறிவுறுத்தும் விதமாக கதை உள்ளது. இது கதை மட்டுமல்ல, பானு ஆசிரியர் வேறு யாருமல்ல, நூலாசிரியர் நூர்ஜஹான் தான். ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டே ஏழை மாணவ-மாணவியருக்கு மனிதநேயப்பணிகளை செய்து வருவதை நான் அறிவேன், பாராட்டுகள். ‘நுரைப்பூக்கள்’ கதையில் முதல் வரி தொடக்கமே முத்தாய்ப்பு. இதோ பாருங்கள் : “சக்தி உயர்ந்ததா? சிவம் உயர்ந்ததா? சஞ்சலம் மிகுந்த போராட்டம் இங்கு சக்தியும் சிவமும் இனைந்திடில் வாழ்க்கைக் கோவிலில் இன்பத் தேரோட்டம் நித்தமும் தானே?” கணவன்-மனைவி இருவரும் புரிதலுடன் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும் என்ற வாழ்வியல் கருத்தை முதல் வரியிலேயே முத்தாய்ப்பாக உணர்த்தி உள்ளார். நூலாசிரியர், ஆசிரியர், கவிதாயினி, எழுத்தாளர் அ. நூர்ஜஹான் அவர்களுக்கு பாராட்டுகள். தங்களின் இலக்கியப் பயணத்தில் மைல்கல் தான் இந்த “மனதின் ஓசைகள்” நூல். சிறப்பாக வந்துள்ளது, பாராட்டுகள். ஒரு சிறுகதை எப்படி எழுத வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறும் விதமாக கதைகள் உள்ளன. ஒரு வேண்டுகோள் : அடுத்து ஒரு நாவல் எழுதுங்கள். ------------------------------------------------------------------- நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் அவர்களின் மடல் ! ஐயா நன்றி நன்றி நன்றி குட்டு பட்டாலும் மோதிர கையால் குட்டு பட வேண்டும் என்று சொல்வார்கள் அதைபோல பன்முக திறனாளர் மதுரையில் இருபது அண்டுகளுக்கு முன்பே தன் கவிதைகளை இணையத்தில் வெளியிட்டு உலகெங்கும் உலாவரச்செய்தவர் . பளீச்செனும் வைர வரிகளுக்கு சொந்தக்காரர் !மதுரையின் அடையாளம் எங்கெங்கு தமிழ்முழங்குகிறதோ, அங்கே ஹைககூ திலகம் ரவி ஐயா இருப்பார்கள், பல்வேறு பணிகளுக்கு நடுவே என் கதைகளை படித்து அதுவும் சிறப்பான வகையில் மதிப்புரை தந்துள்ளார் ,இது எனக்கு கிடைத்த மிகபெரிய அங்கிகாரம்! அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன் உங்கள் விருப்ப படியே அடுத்த சிறுகதை தொகுப்பும் எழுதுகிறேன் ஐயா வணங்கி மகிழ்கிறேன் மிக்க மகிழ்ச்சி ஐயா!!!

கருத்துகள்