படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா.இரவி !

தமிழர் திருநாளாம் தைத்திருநாள்.. இதை சிலர் ஆட்சேபனை செய்கிறார்கள். அது என்ன தைப்பொங்கலை தமிழர் விழா என்று கொண்டாடுவது.? மற்ற மாநிலங்களில் மகரசங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடுகிறார்களே... ஆம். உண்மைதான். மகரசங்கராந்தி வழிபாடு முறைக்கும் தைப்பொங்கலுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. தமிழர்களின் தனித்துவமான பழக்கங்களைக் கொண்டதுதான் தைப்பொங்கல்.. மகரசங்கராந்தி போலவே.. மேச சங்கராந்தி, கடக சங்கராந்தி என்றெல்லாம் மாதப்பிறப்பு உண்டு. ஆனால் தைப்பொங்கல் என்பது ஒன்றே ஒன்றுதான். தமிழர்களுக்கு மட்டும்தான். ஆகவேதான் இது தமிழர் பண்டிகை. ஆடி மாதத்தில் விதைத்தவை தைமாதத்தில் வீடு வந்து சேரும். கதிரவனுக்கும் கால்நடைகளுக்கும் நன்றி சொல்லும் விதமாக முதல்நாள் பொங்கல் .. மறு நாள் மாட்டுப்பொங்கல். புதுப்பானை.. புது அரிசி. சர்க்கரை சேர்த்து பொங்கிவரும்போது பொங்கலோ பொங்கல் என்று சத்தமிட்டு குதூகலம் அடைவது இந்நாளின் மரபு. தமிழர்களிடம் மட்டும் இருக்கும் மரபு. பொதுவாகவே தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டு முறைகளின் தொடக்கம் என்பதே பொங்கல்தான். எந்த ஒரு சுபகாரியம் என்றாலும், குழந்தைகளுக்கு முடியிறக்குதல், காதுகுத்தல், கல்யாணம், கருமாதி, குலதெய்வ வழிபாடு என்று எதுவாக இருந்தாலும் முதலில் பொங்கல் வைத்துதான் அதை தொடங்குவார்கள். தமிழர்களுக்கே உரிய பாரம்பரியம் இதுவாகும். இது இந்திரவிழா, பலராமன் விழா என்று ஒரு கிராமத்துப் பெரியவரிடம் கூறினால் அவர் நம்மை முறைத்துப்பார்ப்பார். எவ்விதக் கலப்படக் கதைகளும் அற்ற ஒரு திருநாள் பொங்கல் நாள். பொங்கல் பண்டிகை இந்து தர்ம வழிபாட்டின் கீழ் உள்ளதா என்றால்.. ஆம்.. நிச்சயமாக உள்ளது. ஆனால்.. இந்து தர்மம் என்பதன் வரையறை யாது.? என்றக் கேள்வியும் எழுகிறது. விபூதி, சந்தனம், குங்குமம், தேங்காய் உடைத்தல், படையல் , பூமாலை ..கரம்குவித்தல் இவையெல்லாம் இந்து தர்மம்தான்.. ஆனால்.... எவ்வித வேத ஆகம சாத்திர சுலோகங்கள் எதுவும் சொல்வதில்லை. சொல்லவும் தெரியாது. இவர்களுக்குத் தெரிந்த ஒரே சுலோகம்.. " பொங்கலோ பொங்கல் " அவ்வளவுதான்... அன்புடன்.. மா.மாரிராஜன் ..

கருத்துகள்