காலக்கவிதைகள்! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன்! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !

காலக்கவிதைகள்! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன்! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! நூலாசிரியர் கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அவர்கள் உதவி கணக்கு அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். எழுதிய கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார்கள். மரபுக் கவிதை மற்றும் புதுக்கவிதை விருந்தாக உள்ளது. மேன்மை கண்ட மே தின விழா! உழைக்கும் வர்க்கம் ஒன்று சேர்ந்து உருவெடுத்த ஒரு விழா ஒற்றுமையின் உயர்வை உலகம் உணர்ந்து கொண்ட திருவிழா உயர்வு தாழ்வு வேற்றுமையை வேரறுத்த ஒரு விழா உன்னதமாய் மனிதநேயம் போற்ற வந்த திருவிழா! உழைப்பாளர்களின் தினமான மே தின விழா பற்றிய கவிதை சிறப்பு. நூல் முழுவதும் மனித நேயம் வலியுறுத்தும் விதமான கவிதைகள் நிறைந்து உள்ளன. மதுரையில் நடக்கும் இலக்கிய விழாக்களில் தவறாமல் கலந்துகொண்டு வரும் நூல் ஆசிரியர் சமுதாயத்தை உற்றுநோக்கி வடித்துள்ள கவிதைகள் சிறப்பு. பாராட்டுகள். நிழலோட்டமே இனிய நினைவாகுமே இதழோரமே உனது சுவையாகுமே நித்தம் நித்தம் சித்தம் மயக்கும் சித்திரப்பாவை என் முத்தம் உன் பித்தம் தெளிய எத்தனை வேண்டும் தரட்டுமா? நான் மொத்தம் கண்ணம் கண்ணம் எண்ணத் தூண்டும் பொன்னுடல் ஆடுது உன் முன்னம் – என் வண்ணம் கண்டு வாரித்தந்திடு வழங்கிடுவேன் இரு தேன்கிண்ணம். இளமை ததும்பும் வண்ணம் காதல் கவிதைகளும் சுவைபட எழுதி உள்ளார். பாராட்டுகள். நூலின் கவிதைகளுக்கும் நூல் ஆசிரியர் வயதுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. இளைஞனைப் போலவே காதல் கவிதைகளை ரசனையோடு வடித்துள்ளார். முயற்சி திருவினையாக்கும் காலமொன்று உனக்கென்றே காத்திருக்கும் உன் கண் முன்னே ஊனமென்று எண்ணாதே எதையும் ஊன மென்று எண்ணாதே! தன்னம்பிக்கை விதை விதைக்கும் விதமாக தன்னம்பிக்கை கவிதைகளும் நூலில் பல உள்ளன. எளிய சொற்களின் மூலம் வலிய கருத்துகளை வலியுறுத்தும் விதமாக கவிதைகள் வடித்துள்ளனர். காதல் என் வாழ்வில் கானல் நீர் தானோ! காதலின் தோல்வியில் கலங்கி நிற்கின்றேன்! சோகத்தின் எல்லையில் சுகம் காணுகின்றேன் காதலென் வாழ்வில் கானல் நீர் தானோ! காதலென் வாழ்வில் கானல் நீர் தானோ! காதலில் தோல்வி அடைந்த இளைஞனின் உள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டும் விதமாக கவிதை வடித்துள்ளார். எட்டாத கனி என்றும், ஒருதலை ராகம் என்றும் கவிதைகள் எழுதி உள்ளார். காதல் சோகத்தால் சோர்ந்து விடாதே என அறிவுரை, அறஉரை வழங்கி உள்ளார். ஓய்வூதியர் தினம் இதிலே ஒன்று கூடுவோம் அரசுப்பணியில் உள்ளோர்க்கு எப்போதெல்லாம் அதிகப்படி அகவிலைப்படியது உயர்கிறதோ அப்போதெல்லாம் ஓய்வூதியர்க்கும் உயர்த்த வேண்டுமேன்றே ஒப்பற்ற தீர்ப்பைத் தந்து ஒளியேற்றி வைத்த நன்னாள்! நூலாசிரியர் ஓர் ஓய்வூதியர் என்பதால் ஓய்வூதியர் தினத்தைக் கொண்டாடி உள்ளார். அகவிலைப்படி, ஓய்வூதியருக்கும் அரசு ஊழியருக்கு உயர்த்துவதைப் போலவே உயர்த்திட வேண்டும் என்று வழங்கப்பட்ட தீர்ப்பை மேற்கோள் காட்டி வடித்துள்ள கவிதை நன்று. மக்கள் சக்தி மனது வைத்தால் அத்தனையும் சாத்தியந்தான்! கதிரவன் எழுந்தான் காரிருள் அகன்றது கலைஞரின் வருகையால் தமிழகம் நிமிர்ந்தது! மனிதநேயம் போற்றுகின்றார். சக மனிதர்களை நேசித்துள்ளார். இன்னல் பட்ட மனிதர்களின் இன்னல் களைய சிந்தித்து உள்ளார். பல்வேறு துன்பங்களை எடுத்து இயம்பி, அவைகள் நீங்கி, மக்கள் வாழ்வில் மகிழ்ச்சி ஒளி பரவ வேண்டும், துன்ப இருள் நீங்க வேண்டும். சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டு அறம் பாடி உள்ளார். நாட்டில் நீதி நிலவ வேண்டும். அநீதி அழிய வேண்டும். நாடு நலம் பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் வடித்துள்ள கவிதைகள் சமுதாயத்தை நெறிப்படுத்தும் விதமாக வடித்துள்ளார். மொத்தத்தில் கவிதைகளின் மூலம் தமிழ் விருந்து வைத்து உள்ளார். நூலாசிரியர் ஆ. சுந்தரபாண்டியன் அவர்கள் ‘ஆ’ என்று வியக்கும்வண்ணம் கவிதைகள் யாத்துள்ளார். பாராட்டுகள்.

கருத்துகள்