உதிராப் பூக்கள்- ( இரா. இரவியின் தேர்ந்தெடுத்த நூறு ஹைக்கூக்கள்) கவிஞர் ஆத்மார்த்தி - ஒரு பார்வை - பொன். குமார் !

( இரா. இரவியின் தேர்ந்தெடுத்த நூறு ஹைக்கூக்கள்) கவிஞர் ஆத்மார்த்தி - ஒரு பார்வை - பொன். குமார் ! மகாகவி பாரதி தமிழுக்கு ஹைக்கூவை அறிமுகம் செய்து வைத்தாலும் ஹைக்கூவை வளர்த்தெடுத்த பங்கு கவிஞர் சி. மணி, கவிஞர் தமிழ் நாடன், எழுத்தாளர் சுஜாதா, எழுத்தாளர் சந்திரலேகா ஆகியோருக்கும் உண்டு. 1980களில் கவிஞர் அமுத பாரதி, கவிஞர் அறிவுமதி, கவிஞர் ஈரோடு தமிழன்பன் ஆகியோர் தொகுப்புகளை வெளியிட்டு தொடங்கி வைத்தார்கள். 1990களில் ஹைக்கூ மிகப்பிரபலமானது. வெகு பிரசித்தமானது. அனைத்துத் தரப்பினரும் ஹைக்கூத்தளத்தில் இயங்கினர். ஹைக்கூ ஓர் இயக்கமாகவே உருவானது. கவிஞர் மு. முருகேஷ் முக்கியமானவராக இருந்தார். கவிஞர் இரா. இரவியும் இயக்கத்தில் ஒருவராக இருந்து இன்று வரை இயங்கி வருகிறார். ஹைக்கூ எழுதி வருகிறார். ஹைக்கூத் தொகுப்புகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அவர் வெளியிட்டுள்ள ஹைக்கூத் தொகுப்புகள் விவரம் 1999 ஹைக்கூ கவிதைகள் ( ஹைக்கூக்கள்) 2003 விழிகளில் ஹைக்கூ ( ஹைக்கூக்கள்) 2004 உள்ளத்தில் ஹைக்கூ ( ஹைக்கூக்கள்) 2005 நெஞ்சத்தில் ஹைக்கூ ( ஹைக்கூக்கள்) 2007 இதயத்தில் ஹைக்கூ ( ஹைக்கூக்கள்) 2011 சுட்டும் விழி ( ஹைக்கூக்கள்) 2014 ஆயிரம் ஹைக்கூ (ஹைக்கூக்கள்) 2015 ஹைக்கூ முதற்றே உலகு ( ஹைக்கூக்கள்) 2017 ஹைக்கூ உலா (ஹைக்கூக்கள்) இணையங்களிலும் ஹைக்கூக்களை உலா வரச் செய்துள்ளார். கல்லூரி பாடத்திட்டங்களிலும் இரா. இரவியின் ஹைக்கூக்கள் இடம் பெற்றுள்ளன. மாணவர்களும் ஆய்வுச் செய்து வருகின்றனர். முகநூலிலும் முத்திரை பதித்து வருகிறார். புலனத்திலும் பதிவித்து வருகிறார். ஹைக்கூ அவர் இலக்கு. இரா. இரவிக்கு ஹைக்கூ மூச்சு. ஹைக்கூக் குறித்தே எப்போதும் இருக்கும் அவர் பேச்சு. ஒரு நூறு பூக்கள் மலரட்டும் என்றார் மாவோ. ஓர் ஆயிரம் ஹைக்கூக்களுக்கு மேல் மலரச் செய்துள்ளார் இரா. இரவி. கோபம், கொஞ்சல், சாடல், தேடல், எதிர்ப்பு, ஆதரவு, தமிழ், தமிழர் என சகலவிதமான பொருண்மையிலும் இரா. இரவியின் ஹைக்கூக்கள் இருக்கும். ஒவ்வொரு ஹைக்கூவாக வாசிக்கும் போது ஓர் உணர்வு கிடைக்கும். ஒவ்வொரு தொகுப்பாக வாசிக்கும் போது ஓர் உணர்வு ஏற்படும். ஒட்டுமொத்தமாக வாசிக்கும் போது ஓர் உணர்வு உண்டாகும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹைக்கூக்களில் ஒரு நூறு ஹைக்கூக்களை மட்டும் தேர்ந்தெடுத்துத் தொகுத்துத் தந்துள்ளார் கவிஞர் ஆத்மார்த்தி. தொகுப்பின் தலைப்பு ' உதிராப் பூக்கள்'. இரா. இரவியின் தேர்ந்தெடுத்த நூறு ஹைக்கூக்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. கவிஞர் ஆத்மார்த்தி ஒரு தேர்ந்த கவிஞர். கட்டுரையாளர். பத்துக்கும் மேற்பட்ட தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். ஒரு நல்ல வாசிப்பாளருமாவார். கவிதை ரசனையைக் கொண்டிருப்பவர். இரா. இரவியின் ஹைக்கூக்களைத் தேர்ந்தெடுக்க ஆத்மார்த்தியைத் தேர்ந்து எடுத்திருப்பது சிறப்பு. கவிஞர் ஆத்மார்த்தியின் கவிதைகளில் பிடித்தமானதில் ஒன்று ரொம்பத்தான் அதிகாரம் செய்கிறது இந்த அன்பை வைத்துக் கொண்டு என்ன செய்வது? தலைப்பு ' அதிகாரம்'. தொகுப்பு ' கனவின் உபநடிகன்'. கவிஞர் ஆத்மார்த்தி தேர்ந்தெடுத்த நூறு ஹைக்கூக்களில் ஒரு பத்தை மட்டும் தேர்ந்தெடுத்து தரப்பட்டுள்ளது. அவை சிற்பி வீட்டு படிக்கல்லானாலும் சிலையாவதில்லை உலகெல்லாம் உறவு பக்கத்து வீடு பகை மனிதன் கிருமி தாக்கியது உயிரற்ற பொருளையும் கணினி புதிய வீடு வரவில்லை உறக்கம் வாங்கிய கடன் மழை அறியாது சாலை ஓவியன் பசி காட்சிப் பிழை நகரவில்லை சூரியன் விதைத்த நிலத்தில் பாய்ச்சிய நீரில் பாலிதின் பைகள் குடும்ப அட்டை வண்ணம் மாறியது வாழ்க்கை? புத்தாடை நெய்தும் நெசவாளி வாழ்க்கை கந்தல் நிலம் விற்றுக் கிடைத்த காசெல்லாம் பெற்றவனின் முகம் பத்தைத் தேர்ந்தெடுப்பதற்குள் பட்ட பாடு ஆத்மார்த்தி பட்ட பாட்டை உணர்த்தியது. தேர்ந்தெடுப்பது ஓர் எளிதான பணியல்ல. ஆத்மார்த்தித் தேர்ந்தவர் என்பதால் அழகாக, இலகுவாக தேர்ந்தெடுத்துள்ளார். ஆத்மார்த்தியின் ரசனையும் நிலைப்பாடும் புரிகிறது. ஆத்மார்த்தி தேர்ந்தெடுத்தவை ஆழமானவை. அர்த்தமுள்ளவை. ஹைக்கூக்களின் மீதான குற்றச்சாட்டே ஒரே பொருளில் பல ஹைக்கூக்கள் ஒரே தொகுப்பில் இருப்பதுதான். இத்தொகுப்பிலும் பல ஹைக்கூக்கள் ஒரே பாடு பொருள் கொண்டவை. எடுத்துக்காட்டு வண்ணத்துப்பூச்சியைப் பற்றியவை. ஒரு பாடுபொருளுக்கு ஒன்றென இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும். ஹைக்கூ என்பதே காட்சிப்பதிவாகும். காட்சியாக விரியச் செய்யும். ஒவ்வொரு ஹைக்கூவிற்கும் ஹைக்கூவிற்கு ஏற்ப ஒரு படத்தைப் போட்டுள்ளார். முகம் மலர் அகம் மலரும் இன்முகம் என்னும் ஹைக்கூவிற்கு கவிஞர் இரா. இரவியின் புகைப்படத்தையே போட்டுள்ளார். அவரின் தன்னம்பிக்கை பாராட்டுக்குரியது. எப்போதும் இன்முகத்துடன் இருக்க வாழ்த்துகள். " கவிஞர் இரா. இரவி ஏகப்பட்ட ஹைக்கூ கவிதைகளை எழுதிக்கொண்டே இருக்கிறார். அவற்றில் சிறந்த ஹைக்கூக்களைத் தேர்ந்தெடுத்து நூலாகப் படைக்க வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தை கவிஞர் இரா. இரவியிடமும் கவிஞர் ஆத்மாரத்தியிடமும் முன்மொழிந்தேன். ஆத்மார்த்தி அவர்கள் இந்தப்பணியை நேர்த்தியாகச் செய்து மனத்தில் மின்னல் அடிக்கிற நூறு கவிதைகளை கடலில் மூழ்கி முத்தெடுத்து தொகுத்து இருக்கிறார் " என முதுமுனைவர் வெ. இறையன்பு இ. ஆ. ப. எழுதியுள்ளது உண்மை என்று தொகுப்பு உணர்த்துகிறது. கடலில் மூழ்கி முத்தெடுப்பதை விட கடினமான பணி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹைக்கூக்களில் ஒரு நூறை மட்டும் தேர்ந்தெடுப்பது. சொற்சிக்கனத்துடன் சிறப்பாக உள்ளன ஹைக்கூக்கள். கவிஞர் இரா. இரவியின் அடையாளம் ஹைக்கூக்களில் தெரிகிறது. தேர்ந்தெடுத்த சிறுகதைகள், தேர்ந்தெடுத்த கவிதைகள் தொகுப்பு ஏராளம் வந்துள்ளன. தேர்ந்தெடுத்த ஹைக்கூக்கள் அடங்கிய தொகுப்பு இதுவே முதலாக இருக்கும். ஒரு மரத்தில் ஓராயிரம் பூக்கள் மலர்ந்தாலும் ' உதிராப் பூக்கள்' ஒரு நூறாவது இருக்கும். கவிஞர் இரா. இரவியின் ஹைக்கூக்கள் என்றும் உதிராப் பூக்களாக இருந்து ஹைக்கூ வாசம் வீசிக்கொண்டேயிருக்கும். கவிஞர் இரா. இரவிக்கு வாழ்த்துகள். கவிஞர் ஆத்மார்த்திக்கு பாராட்டுகள்.. உள்ளம் கவரும் ஒரு நூறு ஹைக்கூக்கள் உதிராப் பூக்கள். வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை 600017 பொன். குமார் 9003344742

கருத்துகள்