தொல்காப்பியப் பூங்கா* *கலைஞர். மு. கருணாநிதி* தோழமையுடன் சீனி.சந்திரசேகரன் 0 கருத்துகள்

தினம் ஒரு புத்தகம்* --------------------------------- புத்தகத் திருவிழாவில் வாங்கப்பட்ட புத்தகம். பண்டிதர்கள் மட்டுமே அனுபவித்துக் கொண்டிருந்த தமிழ் செல்வத்தை எல்லா தமிழர்களுக்கும் பொதுவுடமை ஆக்கி அள்ளித் தந்திருக்கிறார் கலைஞர். கற்பிக்கும் முறையை கையாள்வதில் அவர் வல்லவர் என்பதற்குச் சான்றாக உயிர், மெய் ஆகிய எழுத்துக்களின் எண்ணிக்கையை கற்போர் உள்ளத்தில் பதிக்க கையாளும் பாங்கையும், தமிழ் என்னும் சொல்லில் மெய்யெழுத்துக்களின் மூவினமும் அடங்கியிருப்பதை எடுத்தியம்பும் பான்மையும், மானமில்லை, மாத்திரை, போன்றவற்றை குட்டி கதைகள் வாயிலாக தெளிவாக விளங்க செய்யும் சிறப்பையும் கூறலாம். பூங்காவில் இருந்து நூறு மலர்களை கொய்து தந்திருக்கிறார் இந்நூலில். அத்தனையும் தேன் சிந்தும் மலர்கள். அவற்றிலிருந்து சில மட்டும். இங்கே இன ஒற்றுமை வல்லினம், மெல்லினம், இடையினம் ஒன்றுபட்டு 'தமிழ்' இன்று தகத்தகாய ஒளிபரப்பும் போது தமிழர்கள் பல கூறுகளாக பிளவுபட்டு கிடப்பது நியாயம்தானா? இனத்திற்கு ஓரெழுத்து இணைந்து தமிழ் உருவாகி இருக்கும் போது ஏற்கனவே உருவான தமிழர் இனம் ஏன் சிதைந்து கிடக்கவேண்டும். வல்லெழுத்து என்ப கசடதபற மெல்லெழுத்து என்ப ங ஞ ண ந ம ன இடையெழுத்து என்ப யரலவழள எழுத்ததிகாரம் 19 20 21 நூற்பா பிறப்பியல் பெருமை உந்திக் கமலத்தில் இருந்து காற்று தோன்றி அது மேலே வந்து தலை, கழுத்து, நெஞ்சு இவற்றில் நின்று, பல், உதடு, நாக்கு, மூக்கு, அண்ணம், என்எட்டு உறுப்புகளிலும் தொடர்புற்று எல்லா எழுத்துகளும் தோன்றும். உந்தி முதலா முந்து வளி தோன்றி தலையிலும் இடரினும்... எழுத்ததிகாரம் பிறப்பியல் நூற்பா 1 புத்தகக் கடை உரிமையாளரிடம் ஒருவர் எது கேட்டாலும் கேட்ட புத்தகத்தை விட்டுவிட்டு வேறு புத்தகம் இருப்பதாக சொல்கிறீர் இது என்ன வேடிக்கை என்று கேட்டார். அதற்கு புத்தக உரிமையாளர் இது தொல்காப்பியத்தின் வழிகாட்டுதல். இல்லையென்று சொல்லாமல் என்ன இருக்கிறதோ அதைச் சொல்லி வாங்க வைத்தால் வணிகம் பெருகும் என்று சொன்னார். எப்பொருள் ஆயினும் அல்லது இல் எனில் அப் பொருள் அல்லாபப் பிறிது பொருள் கூறல் சொல்லதிகாரம் கிளவியாக்கம் நூற்பா 35 பெருமிதம் நான்கு கல்வி, தறுகண், இசைமை, கொடை இந்நான்குமே பெருமிதம். கல்வி தறுகண் இசைமை கொடை என சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே பொருளதிகாரம் மெய்ப்பாட்டியல் நூற்பா 9 முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களை கவர்ந்த மலர். அன்றே வளர்ந்திருந்த அறிவியல் ஒன்றறிவதுவே உற்றறிவதுவே இரண்டறி வதுவே அதனொடு நாவே மூன்று அறிவதுவே அவற்றோடு மூக்கே நான்கு அறிவதுவே அவற்றோடு கண்ணே ஐந்து அறிவதுவே அவற்றோடு செவியே ஆறு அறிவதுவே அவற்றோடு மனனே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே பொருளதிகாரம் மரபியல் நூற்பா 27 மக்கள் ஆறறிவுடையோர். அவற்றில் ஒன்றிரண்டு குறைவதற்கும், நிலையாக இருப்பதற்கும், இந்த இலக்கணம் பொறுப்பல்ல. காலத்தால் பாணினிக்கும் கௌடில்யருக்கும் முற்பட்ட தொல்காப்பியரின் இலக்கிய இலக்கண இன்பத்தில் தானும் மூழ்கித் திளைத்து நம்மையும் பூங்கா போக அழைக்கின்றார். இந்நூலை தொல்காப்பியத்தில் என்ன இருக்கிறது என எள்ளி ஒதுக்குபவரும், தொல்காப்பியம் எப்படி இருக்குமோ என அஞ்சி ஒதுக்குபவரும் படித்தால், அவர்தம் நிலையை மாற்றி தொல்காப்பியத்தை சுவைக்க முனைவர். *நூல்* *தொல்காப்பியப் பூங்கா* *கலைஞர். மு. கருணாநிதி* தோழமையுடன் சீனி.சந்திரசேகரன் 0 கருத்துகள்

கருத்துகள்