படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா.இரவி !

படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி.*🌹வைரமுத்துவிடம் 60 கேள்விகள். அவசரத்திலும் அசராத பதில்கள்; அசாதாரணமான பதில்கள். இதோ...🌹* 1. ''இதுவரை வந்த தமிழ் சினிமாக்களில் நீங்கள் அதிகம் பார்த்த படம் எது?'' '''நாடோடி மன்னன்’. சினிமா என்ற பிம்பத்தை ஆறு வயதில் எனக்குள் கட்டி எழுப்பிய முதல் படம். இன்றும் ரசிக்கிறேன். 60-ல் இருந்து 6-க்குப் பயணப்படுகிறேன்!'' 2. ''பிடித்த வாகனம்?'' ''நான் ஓட்டிய முதல் வாகனம்தான் எனக்குப் பிடித்த வாகனம். சைக்கிள்!’' 3. ''தமிழ்நாட்டுப் பொதுவாழ்வில் நீங்கள் வியந்தது?'' ''பெரியாரின் துணிச்சல்!'' 4. ''கலைஞரின் பழைய படங்களில் ஒன்றை இப்போது ரீமேக் செய்ய வேண்டும் என்றால் உங்கள் தேர்வு எது?'' '''பராசக்தி’!'' 5. ''கலைஞர் எழுதிய வசனங்களில் உங்களுக்குப் பிடித்தது?'' '''என் சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டுத் தடாகத்தைச் சுத்தம் செய்கிறதே மீன், அதைப்போல...’!'' 6. ''கண்ணதாசன், வாலி வரிகளில் பிடித்தவை?'' ''நூற்றுக்கணக்கில் சொல்லலாம்... 'ஏழைகளின் ஆசையும் கோவில்மணி ஓசையும் வேறுபட்டால் என்ன செய்வது? - தர்மமே மாறுபட்டால் எங்கு செல்வது?’ - இது கண்ணதாசன் வரிகள். 'மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா? மாலை நிலா ஏழையென்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா? ’ - இது வாலி வரிகள். இன்னும் இப்படி எத்தனையோ!'' 7. ''மெட்டுக்கு எழுதிய முதல் பாடல் எது... உங்களின் வரிகளுக்கு மெட்டு அமைக்கப்பட்ட முதல் பாடல் எது?'' ''மெட்டுக்கு எழுதியது, 'இது ஒரு பொன்மாலைப் பொழுது...’; வரிகளுக்கு மெட்டு அமைக்கப்பட்டது, 'விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே...’!'' 8. ''முதன்முதலில் வாங்கிய சம்பளம்?'' ''1976-ல் தமிழ்நாடு ஆட்சிமொழி ஆணையத்தில் முதல் மாதச் சம்பளமாக 652 ரூபாய் பெற்றேன். திரையுலகில் என் முதல் பாடலான 'இது ஒரு பொன்மாலைப் பொழுது...’க்காக பணக்கட்டு ஒன்றை எடுத்து நீட்டினார் பாரதிராஜா. அதில் இருந்து 50 ரூபாய் மட்டும் உருவிக்கொண்டேன்!'' 9. ''சினிமாவில் நடிக்க வந்த வாய்ப்புகள் குறித்து?'' '''காதல் ஓவியம்’, 'மண்வாசனை’ இரண்டிலும் நடிக்க பாரதிராஜா அழைத்தார். புன்னகையோடு மறுத்துவிட்டேன். ஒருவேளை நடித்திருந்தால்... 'காதல் ஓவியம்’ வெற்றி பெற்றிருக்கலாம்; 'மண்வாசனை’ தோல்வி கண்டிருக்கலாம்!'' 10. ''வைரமுத்து என்றவுடன் நினைவுக்கு வருவது உங்கள் வெள்ளை குர்தா. உங்களின் அடை யாளமாகிப்போன இந்த ஆடையை எப்போது முதல் அணியத் தொடங்கி னீர்கள்... அதற்கான காரணம் என்ன?'' ''1987-ம் ஆண்டு முதல் அணியத் தொடங்கினேன். எல்லா வகை ஆடைகளையும் அணிந்து பார்த்த பிறகு, இதுதான் சரி என்று உடம்பு ஒப்புக்கொண்டது. உடம்பின் பேச்சைத் தான் உடை கேட்க வேண்டும்!'' 11.''பிடித்த திருக்குறள் எது... ஏன்?'' '''ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்’ - தன்னம்பிக்கையின் உச்சம்!'' 12.''உங்கள் வர்ணனையில் உங்களுக்குப் பிடித்த வரிகள்?'' '' 'சோழன் குயில் பாடுகையில் சோலைக் குயில் ஓய்வெடுக்கும். மெல்லினங்கள் பாடு கண்ணே வல்லினங்கள் வாய் வலிக்கும்’!'' 13. ''ரஜினி, கமல் தந்த மறக்க முடியாத பரிசு?'' ''ரஜினி - தங்கச் சங்கிலி. கமல் - எரிமலைக் குழம்பில் செய்த பேனா!'' 14. ''உங்கள் அடையாளங்களுள் உங்கள் குரலும் ஒன்று. குரலைப் பாதுகாப்பதற்காகச் சிறப்பு முறைகள் ஏதேனும் கையாள்கிறீர்களா?'' ''அப்படி ஒன்றும் இல்லை. குளிரூட்டப்பட்ட எதையும் பருகுவதும் இல்லை; உண்பதும் இல்லை!'' 15. ''புத்தகங்களில் கையெழுத்துப் போட்டுக் கொடுக்கும்போது என்ன எழுதித் தருவீர்கள்?'' ''சிறகிருந்தால் போதும் சிறியதுதான் வானம்!'' 16.''பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம் இயக்கியதில் பிடித்த படங்கள்?'' ''பாலசந்தரின், 'அபூர்வ ராகங்கள்’, 'தண்ணீர் தண்ணீர்’. பாரதிராஜாவின் 'முதல் மரியாதை’, 'கிழக்குச் சீமையிலே’. மணிரத்னத்தின் 'நாயகன்’, 'இருவர்’.'' 17. ''பிடித்த அயல்நாட்டுத் திரைப்படங்கள்?'' '''பென்ஹர்’, 'அவதார்’!'' 18. ''பிடித்த அயல்நாடு?'' ''சுவிட்சர்லாந்து.'' 19. ''உங்களுக்குப் பிடித்த வரலாற்று நாயகன்?'' ''ராஜராஜ சோழன்!'' 20. ''ஜெயலலிதாவைச் சந்தித்தது உண்டா?'' ''இரு முறை சந்தித்தது உண்டு. ஒன்று திருமண மேடையில்; மற்றொன்று திரைப்பட மேடையில்!'' 21. ''எழுதுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்ட பாடலும், மிகக் குறைந்த நேரம் எடுத்துக்கொண்ட பாடலும் எது?'' ''இரவு 2 மணிக்கு எழுதத் தொடங்கி அதிகாலை 5 மணிக்கு முடித்த பாடல், 'சங்கீத ஜாதி முல்லை...’; 'எட்டு எட்டா மனுஷ வாழ்வைப் பிரிச்சுக்கோ...’ - நான் 10 நிமிடங்களில் எழுதியது!'' 22. ''பிடித்த உணவு?'' ''பசி வந்து உண்ணும் உணவு!'' 23. ''மீண்டும் மீண்டும் திருத்தி எழுதிய பாடல்?'' '' 'வீரபாண்டிக் கோட்டையிலே...’!'' 24. ''ரஜினியின் பன்ச் டயலாக்கில் உங்களுக்குப் பிடித்தது?'' ''என் வழி... தனி வழி!'' 25. ''உங்கள் கவிதைகள் எந்தெந்த மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன?'' ''ஆங்கிலம், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காளம், நார்வேஜியன்!'' 26. ''தமிழ், ஆங்கிலம் தவிர வேறு மொழிகள் தெரியுமா?'' ''தெரியாது.'' 27. ''பிடித்த வெளிநாட்டுப் பெண்மணிகள்?'' ''மரியா ஷரபோவா, ஏஞ்சலீனா ஜோலி, ஜெனிஃபர் லோபஸ், செரீனா வில்லியம்ஸ்!'' 28. ''மீண்டும் மீண்டும் படிக்கும் புத்தகம்?'' Broken Wings (முறிந்த சிறகுகள்), கலீல் ஜிப்ரான் எழுதிய குறுங்காவியம்!'' 29. '' 'கொண்டையில் தாழம்பூ, நெஞ்சிலே வாழைப்பூ, கூடையில் என்ன பூ? குஷ்பு...’ என்றும், 'எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று அது ஏதோ உன்னிடம் இருக்கிறது...’ என்றும் இரண்டு பாடல்கள் குஷ்புவைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். இதுகுறித்து குஷ்பு உங்களிடம் எதுவும் பேசியிருக்கிறாரா?'' ''ஐஸ்வர்யா ராய் தவிர எந்தப் பாடல் குறித்தும், எந்த நடிகையும் என்னோடு பேசியது இல்லை!’ 30. ''உங்கள் பாடல்களை அதிகம் பாடிய பாடகர், பாடகி யார்?'' ''எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா.'' 31. ''விவசாய அனுபவம் உண்டா?'' ''பரம்பரைப் பிழைப்பே அதுதானே!'' 32. ''வெண்மை தவிர உங்களுக்குப் பிடித்த நிறம்?'' ''பச்சை.'' 33. ''மறக்க முடியாத வாசகம்?'' ''குடலில் ஒரு அவுன்ஸ் மலமும், மூளையில் ஒரு அவுன்ஸ் அவமானமும் மிச்சம் இல்லாத மனிதன் எவனும் இல்லை!'' 34. ''பிடித்தது?'' ''மேற்குத் தொடர்ச்சி மலைகள்!'' 35. ''பிடிக்காதது?'' ''ஒட்டடை, சிகரெட் வாசனை!'' 36. ''எந்த நாட்டு மழை பிடிக்கும்?'' ''மலேசிய மழை. காரணம், அதிசுத்தமானது!'' 37. ''மறக்க முடியாத விபத்து?'' ''என் தம்பிக்கு நேர்ந்தது!'' 38. '' உங்கள் அப்பாவுடன் பேசிய கடைசி வார்த்தைகள்?'' '' 'தைரியமா இருங்க; நாங்க இருக்கோம்’!'' 39. ''விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உங்கள் பாடல் வரிகளை, கவிதைகளை ரசித்ததாக யாரும் சொல்லிக் கேட்டது உண்டா?'' ''ஆமாம். 'உங்களைப் பார்த்தால் பிய்த்துத் தின்றுவிடுவார்; அவ்வளவு பிரியம்’ என்று அவரைப் பார்த்தவர்கள் வந்து சொன்னார்கள்!'' 40. ''உங்களை வியக்கவைத்த ஆங்கில வாசகம்?'' '' 'A quick brown fox jumps over the lazy dog’.’ ஆங்கிலத்தின் 26 எழுத்துகளும் இந்த ஒரே வாக்கியத்தில் அடக்கம்!'' 41. ''நீங்கள் எழுதியதில் அதிகம் விற்பனையான புத்தகங்கள்?'' '''வைகறை மேகங்கள்’ இதுவரை 33 பதிப்புகள்; 'மூன்றாம் உலகப்போர்’ ஒரே ஆண்டில் 11 பதிப்புகள்!'' 42. ''அப்துல் கலாமிடம் வியப்பது?'' ''அரசியல் சாராத தேச மேம்பாடு!'' 43. ''ஆறு தேசிய விருதுகள் எந்தெந்தப் பாடல்களுக்கு?'' '''பூங்காத்து திரும்புமா...’- முதல் மரியாதை, 'சின்னச் சின்ன ஆசை...’- ரோஜா, 'போறாளே பொன்னுத்தாயி...’ - கருத்தம்மா, 'முதல் முறை கிள்ளிப் பார்த்தேன்...’ - சங்கமம், 'ஒரு தெய்வம் தந்த பூவே...’ - கன்னத்தில் முத்தமிட்டால், 'கள்ளிக்காட்டில் பொறந்த தாயே...’- தென்மேற்குப் பருவக்காற்று!'' 44. ''தமிழில் நீங்கள் பரிந்துரைக்கும் புதிய கவிதை நூல்கள்?'' '''எப்போதும் விடிந்துகொண்டிருக்கிறது’ - தேவதச்சன், 'பூனை எழுதிய அறை’ - கல்யாண்ஜி, 'மாமத யானை’ - குட்டிரேவதி, 'தவளைக்கல் சிறுமி’ - கார்த்திக் நேத்தா, 'எனது மதுக்குடுவை’ - மாலதி மைத்ரி, 'அரைக்கணத்தின் புத்தகம்’ - சமயவேல், 'ஈ தனது பெயரை மறந்துபோனது’ - றஷ்மி.'' 45. ''யாரை மறக்க முடியவில்லை?'' ''சிவாஜியை. அவரை எரித்த தளத்தில் இருந்து 600 மீட்டர் தொலைவில்தான் நான் குடியிருக் கிறேன். பழைய படங்களைப் பார்க்கும் போதெல்லாம் அவர் நினைவு வந்து வாட்டுகிறது!'' 46. ''உங்கள் பேனா அதிகம் எழுதிய வார்த்தை?'' ''பல்லவி!'' 47. ''பேரன் பேத்தியிடம் ரசிப்பது?'' ''பேரனின் குறும்பு; பேத்தியின் அன்பு!'' 48. ''நேற்று எழுதியதில் நாளை ஹிட் ஆகும் என்று நீங்கள் நினைக்கும் பாடல்?'' '''நண்பேன்டா’ என்ற படத்தில் நயன்தாராவைப் பார்த்து உதயநிதி பாடும் பாடல் ஒன்று: 'ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா? உன்னோடு காதல் சொல்லி நயந்தாரா? நாலைந்து பேர்கள் பின்னால் அலைந்தாரா? நான்தான் உன் ஜோடி என்று பயந்தாரா?’ '' 49. ''அடிக்கடி முணுமுணுக்கும் எம்.ஜி.ஆர் பாடல்?'' '' 'மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ...’!'' 50. ''சிவாஜி பாடல்?'' '' 'தூங்காத கண்ணென்று ஒன்று...’!'' 51. ''திரையுலகுக்கு வெளியே உங்களின் நெருங்கிய நண்பர் யார்?'' ''வசந்த பவன் ரவி!'' 52. ''மற்ற பாடலாசிரியர்களோடு ஒப்பிடும்போது, சம்பளம் வாங்கியதில் சாதனை ஏதும் உண்டா?'' ''வருமான வரி சரியாகக் கட்டுவதால், மனம் திறக்கிறேன். சில பாடல்களுக்கு இந்திப் பாடலாசிரியர்களைவிட அதிகம் பெற்றது உண்டு!'' 53. ''நீங்கள் நாத்திகராக இருப்பதனால், ஏதேனும் சங்கடத்தைச் சந்தித்தது உண்டா?'' ''சந்தித்துக்கொண்டே இருக்கிறேன். கடவுளே மன்னித்தாலும், மனிதர்கள் மன்னிக்க மாட்டார்கள்போல என்று தோன்றுகிறது!'' 54. ''நீங்கள் ரசித்துக்கேட்ட அனுபவ மொழி?'' ''முஸ்லிம் பெரியவர் ஒருவர் சொன்னது: 'நீ ராஜாவோ... பிச்சைக்காரனோ... உண்டது, உடுத்தது, கொண்டது, கொடுத்தது... இந்த நாலும்தான் மிச்சம்’!'' 55. ''ஒரு குறுங்கதை சொல்ல முடியுமா?'' ''பார்வையற்ற பெண்ணைக் காதலித்தான் ஒருவன். 'பார்வை கொடுத்தால் உன்னையே மணப்பேன்’ என்றாள் அவள். அவனும் பார்வை கொடுத்தான். கண்திறந்து பார்த்தவள் தன் காதலன் கண் இல்லாதவன் என்பதை கண்டு, 'நான் உன்னை மணக்க மாட்டேன்’ என்று மறுத்துவிட்டாள். காதலன் கண்ணீரோடு முணுமுணுத்தான், 'என்னை நிராகரித்தவளே... என் கண்ணை நிராகரிக்க முடியாதல்லவா?’ '' 56. ''உடல் நலத்தில் எதற்கு முன்னுரிமை கொடுப்பீர்கள்?'' ''பற்கள், குடல், பாதங்கள்!'' 57 ''நீண்ட நாட்களாகக் கடைப்பிடிக்கும் பழக்கம்?'' ''ஒரு நாளில் ஒருவருக்காவது உதவி செய்வது!'' 58. ''இனிவரும் தலைமுறையில் தமிழ் இருக்குமா?'' ''தமிழ்நாட்டு எல்லைக்குள் இயங்கும் அனைத்து பள்ளிகளிலும் பள்ளி இறுதிவரை தமிழை ஒரு பாடமாகப் படித்தாக வேண்டும் என்பது கட்டாயமானால், தமிழாசிரியர்கள் தங்கள் மொழித்திறத்தை மேம்படுத்திக்கொண்டால், தமிழ் வளர்ப்பதில் தங்களுக்கும் பொறுப்பு உண்டு என்று ஊடகங்கள் உறுதிகொண்டால், தமிழ் - வயிற்று மொழி அல்ல; வாழ்க்கை மொழி என தமிழர்கள் நம்பினால்... தமிழ் என்றும் இருக்கும்!'' 59. ''மனிதனின் உண்மை முகம் எது?'' ''எந்தத் துறையில் ஒருவன் பொருள் ஈட்டினானோ அல்லது புகழ் ஈட்டினானோ, அந்தத் துறையைக் கழித்துவிட்டு மிச்சப்படுவது எதுவோ அது!'' 60. ''இந்த 60 என்ன சொல்கிறது?'' ''சமூகம் உன்னை நினைக்க வேண்டும் என்று செயல்படாதே; சமூகத்தை நினைத்து நீ செயல்படு!'' Vairamuthu அன்புடன் சாரதாசெந்தில்

கருத்துகள்