படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி. *பெரியார் இவருக்கு இணை யார்?*

படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி. *பெரியார் இவருக்கு இணை யார்?* ஏய் தாடிக்கார கிழவா நீ வளைந்த கோலெடுத்து வலம் வந்த செங்கோல் புழுவென சிறுத்துக் கிடந்த சமூகத்தை அறிவூசியால் குத்தி குத்தி நெளியச்செய்தாய் ஆறறிவில் பகுத்தறிவை உணர வைத்தாய் மானமும் அறிவுமே அழகென நெஞ்சினில் தைத்தாய் காயங்களைக் கூட துச்சமென தூக்கிப்போட்ட வெங்காயம் நீ மூத்திரச்சட்டியோடு சுற்றிச்சுற்றி சமூகத்து மூடமல நாற்றத்தை அப்புறப்படுத்தியப் பெருமகன் நீ சரிசம விதையை சரிகம பாடி நின்ற வஞ்சியர்தம் நெஞ்சதனில் ஆழ ஊன்றியவன் கால்பிடித்து வாழ்வதும் கால்கழுவி வாழ்வதுமல்ல வீரம் என தீர்க்கமாய்ச் சொன்னவன் மூடநம்பிக்கைகளின் முதுகெலும்பை நொறுக்கியெறிந்த பயில்வான் ஆதலால் தான் நீ காற்றில் கரைந்தபின்னும் துளிர்க்கும் தலைமுறையும் உன்னையே பயில்வான் இன்றுவரை உன் கோலெடுத்து வலம் வந்தால் குரங்குகள் எல்லாம் தன்னாலே ஆடுகின்றன இன்றுவரை நீதானே பெரியார் உனக்கு இவ்வுலகில் இணை யார்? ஈரோட்டு அறிவுத்தேரோட்டியே எப்போதும் எங்கள் செயல்களிருக்கும் கிழவா உனைப் பின்பற்றியே மூடத்தனத்தை வெறுத்தொதுக்கிய அறிவுக்கண்ணாடி உலகமே திரள்கிறது அதனால் உன் பின்னாடி உனைப்பற்றி ஆயிரம் அவதூறுகள் இருக்கலாம் உன் கருத்தினை அறிவிலிகள் மறுக்கலாம் எது எப்படியோ நீயோர் பகுத்தறிவுச் சூரியன் தமிழகத்தை தலைநிமிரச் செய்கிற வீரியன் நீ இறந்த பின்னும் பிறந்த குழந்தை உன் பேரைச் சொல்கிறதென்றால் நீ சாதிமதங்கடந்த சரித்திரப் பெரியார் தானே வீணே தூற்றுபவர்களில் இல்லை நானே நீ பரப்பிய விதைகளில் நானும் ஒன்றாகிறேன் பற்றிப் பரவட்டும் பாரெங்கும் உன் பகுத்தறிவுத் தீ நீ மறைந்த நாளில் என் நினைவஞ்சலி *சீனி.தனஞ்செழியன்*

கருத்துகள்