ிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி கவிஞர் பாக்யபாரதியின் முதல் தமிழ் ஹைக்கூ நூல் இது. இந்நூலிற்கு முதல் ஹைக்கூ நூல் எழுதிய கவிஞர் அமுதபாரதியும், திரைப்படப் பாடலாசிரியர் பிறைசூடன் ஆகிய இருவரும் சிறப்பான அணிந்துரை நல்கி உள்ளனர். பாவலர் மா. இராமமூர்த்தி அவர்கள் வாழ்த்துரை வழங்கி உள்ளார். பழுத்த பழம் கீழே விழவேயில்லை ஓவியமாய் மரம்! ஜப்பானிய ஹைக்கூவைப் போல காட்சிப்படுத்தும் ஹைக்கூ மூன்றாவது வரி திருப்பம் என்ற ஹைக்கூ உத்தியினை அறிந்து நூல் முழுவதும் சிறப்பாக ஹைக்கூ கவிதைகளை வடித்துள்ளார். நூலாசிரியர் கவிஞர் பாக்யபாரதி. பாராட்டுக்கள். அமைதிப்புறா பார்க்க அழகாக உள்ளது யுத்தமில்லா பூமி … போரில்லாத உலகம் மலர வேண்டும். இந்த நவீன கணினி யுகத்தில் சிந்தித்துப் பார்த்து எந்தஒரு நாடும் போர் புரியக்கூடாது. போரில் இருபுறமும் அழிவே மிஞ்சும். எதையும் பேசித் தீர்க்க வேண்டும். வரிசையாக எலும்புக் கூடுகள் அடையாளம் காண இயலவில்லை சாதி… சுடுகாட்டில் எரிக்கப்பட்ட பிணங்களில் கிடைத்த எலும்புக்கூட்டை வைத்து எந்த சாதி என்று கூற முடியுமா? முடியாது. சாதி வேற்றுமையை மறந்து, சகோதர உணர்வுடன் சங்கமிக்க வேண்டும். சாதி என்பது கற்பிக்கப்பட்ட கற்பனை என்பதை எள்ளல் சுவையுடன் உணர்த்தி உள்ளார். ஓய்வு நேரம் சிந்தனையைக் கிளறுகிறது கேட்கும் பாடல்… ஓய்வு நேரத்தில் தனிமையில் பாடல் கேட்பது இனிமை மட்டுமல்ல. பல்வேறு மலரும் நினைவுகளை மலர்வித்து மகிழ்விக்கும். அதனை அனுபவித்து உணர்ந்து வடித்த ஹைக்கூ நன்று. ஏழைகளின் பணத்தில் ஏற்றம் காண்கிறார் போலிச் சாமியார்… முற்றும் துறந்த முனிவர் என்பார்கள். திருவோடு தவிர வேறு ஒன்றும் சொந்தமில்லை என்பார்கள் அன்றைய சாமியார்கள். ஆனால் இன்றைய சாமியார்கள் கார்ப்பரேட் கம்பெனியாகி கோடிகளுக்கு அதிபதியாகி சுகபோக ஏகபோக வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். சாமியார்களை நம்பி மோசம் போகும் அப்பாவி மக்கள் திருந்திட வேண்டும். கடுமையான சட்டங்கள் கண்டு கொள்வதில்லை பணக்காரர்களை … உண்மை தான், ஏழை விவசாயி சில ஆயிரங்கள் தர வேண்டி இருந்தால் கேட்டுக் கேட்டு தொல்லை தந்து தற்கொலைக்கு வழிவகுக்கின்றனர். பல்லாயிரம் கோடி கடன் பெற்று கொள்ளையடித்தவர்களை வெளிநாட்டிற்கு தப்பவிட்டு வேடிக்கை பார்த்து வருகின்றனர். குறைந்தபட்சம் கைது கூட செய்வதில்லை. இந்த நாட்டு நடப்பை ஹைக்கூவின் மூலம் நன்கு உணர்த்தி உள்ளார். நீரில்லா ஏரி முழுவதும் கருவேல மரங்கள்… கருவேல மரங்கள் நிலத்தடி நீரை குடித்து வருகின்றன. கருவேல மரங்களை வெட்டி வீழ்த்துவது நாட்டுக்கு நலம் பயக்கும். தமிழ்நாட்டில் அதிகரித்தபடி ஆங்கில மோகம்… தொலைக்காட்சியில் பேசி வரும் தமிங்கிலப் பேச்சு நாடு முழுவதும் பரவி வருகின்றது. தமிழ்நாட்டில் தமிழர் தமிழ் பேசவில்லை. தமிங்கிலமே பேசி வருகின்றனர். தமிங்கிலப் பேச்சுக்கு முடிவு கட்ட வேண்டும். தமிழை பிறமொழிக் கலப்பின்றி நல்ல தமிழில் பேசிட அனைவரும் முன்வர வேண்டும். எறிந்த கல் தரைச்குச் சென்றதும் மறையும் தண்ணீர் வளையம் … ஒரு குளத்தையும் குளத்தில் கல் எறிவதையும் அதனால் உருவாகும் வளையங்களையும் படிக்கும் வாசகர்களுக்கு மனக்கண்ணில் காட்சிப்படுத்தி வெற்றி பெறுகின்றார். பாராட்டுகள். ஏமாளி மீது பொய்யான வழக்குகள் எங்கே மனிதம்? அப்பாவியான ஏமாளி மீது பொய் வழக்கு போடும் பழக்கம் உள்ளது. மனிதாபிமானமின்றி நடக்கும் காவல்துறையின் செயலுக்கு கண்டனத்தைப் பதிவு செய்தது சிறப்பு. காக்கைக் கூட்டிலிருந்து எட்டிப் பார்க்கும் குயில் குஞ்சு… குயிலுக்கு அடைகாத்து குஞ்சு பொரிக்கத் தெரியாது. ஆனால் காகத்திற்கு தெரியாமல் காக்கையின் கூட்டில் முட்டையை வைத்துவிட, காகம் குயிலில் முட்டையையும் அடைகாத்து குஞ்சாக்கி விடும். இந்த நடைமுறை உண்மையை ஹைக்கூவின் மூலம் உணர்த்தியது சிறப்பு. பக்கத்தில் சென்றும் தொட முடியவில்லை கானல் நீர் … கானல் நீர் என்பது உண்மையல்ல. தூரத்தில் நீர் போல காட்சியளித்தாலும் அருகே சென்று பார்த்தால் நீர் இருக்காது. வித்தியாசமான உணர்வுகளை உணர்த்தியது நன்று. நல்லவனுக்கு இன்றைய பெயர் பிழைக்கத் தெரியாதவன்… பொய் பேசாமல் உண்மை மட்டுமே பேசி ஊழல் புரியாமல் கையூட்டு பெறாமல் குறுக்கு வழியில் செல்லாமல் அறவழியில் நடக்கும் நல்லவனை `பிழைக்கத் தெரியாதவன்` என்று கேலி பேசுவதை நிறுத்துங்கள் என்று வலியுறுத்தும் வடித்த ஹைக்கூ நன்று. நல்லவனின் சிறப்பு நால்வரைக் காப்பாற்றியது உடலுறுப்புத் தானம் ரத்த தானம். விழி தானம் தாண்டி உடல் தானம் பற்றிய விழிப்புணர்வு வந்து பலர் மூளைச்சாவு அடைந்து இனி பிழைக்க சாத்தியமில்லை என்ற நிலை வந்ததும் உடல் தானம் தந்து பல உயிர்கள் காப்பாற்றுவது விஞ்ஞான விசித்திரம். நல்ல உள்ளத்தால் இது சாத்தியமாகின்றது. படுக்கையில் தந்தை பாகப்பிரிவினையில் மகன்கள் சொத்து இல்லாத ஏழை வீட்டில் சொத்துச் சண்டைக்கு வாய்ப்பில்லை. ஆனால் சொத்துள்ள பணக்கார வீட்டில் சொத்துச் சண்டைகள் வந்து சகோதரர்களே பகைவர்களாக மாறி விடுகின்றனர். பணத்தாசை ஒழிக்க வேண்டும். மொத்தத்தில் சிந்திக்க வைக்கும் ஹைக்கூக்களின் அணிவகுப்பு சிறப்பு. பாராட்டுகள்.

கருத்துகள்