பைந்தமிழ் பாவலர் பாரதி
- கவிஞர் இரா. இரவி
பன்மொழி அறிஞன் மகாகவி பாரதி
பண்டைத்தமிழை சிறப்பெனச் செப்பியவன் பாரதி
அறிந்திட்ட மொழிகளில் உச்சம் தமிழ்மொழி
அன்றே பாடியவன் ஆடியவன் பாரதி
சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி
செந்தமிழை மாணவனுக்கு கற்பித்த ஆசான் பாரதி
செந்தமிழ்நாடு என்று பெயர் சூட்டி மகிழ்ந்தவன்
செந்தமிழ்க் கவிதைகளை தினமும் யாத்தவன் பாரதி
ஹைக்கூ கவிதைகளை அறிமுகம் செய்தவன்
ஹைக்கூ விதையை அன்றே விதைத்தவன் பாரதி
பாமரருக்கும் புரியும் வண்ணம் பா வடித்தவன்
பண்டிதர் தமிழை எளிமைப்படுத்தியவன் பாரதி
தமிழன்னைக்கு கவிதைகளால் அணிகலன் அணிவித்தவன்
தமிழுக்குப் பெருமைகளை பாடலால் ஈட்டியவன்
உலகின் முதல்மொழி தமிழ்மொழி என்பதை அன்றே
உணர்ந்த காரணத்தால் போற்றிப் புகழ்ந்தவன் பாரதி
தமிழ்மொழி பேசினால் ஆயுள் நீடிக்கும்
தமிழை ஆராய்ந்து கூறும் ஆராய்ச்சி முடிவு
தமிழை உச்சரித்தால் சுவாச எண்ணிக்கை குறையும்
தரணியில் வாழும் நாள் அதிகரிக்கும் என்கின்றனர்
தமிழின் அருமை பெருமை அறிந்தவன் பாரதி
தமிழுக்கு மணிமகுடம் சூட்டி மகிழ்ந்தவன் பாரதி
பைந்தமிழ் பாவலன் பாரதி என்றும் வாழ்வான்
பைந்தமிழ் போலவே நீடித்து என்றும் வாழ்வான்…
கருத்துகள்
கருத்துரையிடுக