படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா.இரவி !

சுரதா - சில குறிப்புகள்..,* 1921 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதி பிறந்த ராசகோபாலன், பின்னாளில் தன் பெயரை சுரதா என மாற்றிக்கொண்டார். பாரதிதாசனின் இயற்பெயரான சுப்புரத்தினம் என்பதை அடிப்படையாக கொண்டு சுப்புரத்தினதாசன் என்று தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டார். ஒருமுறை அஞ்சலட்டையின் இறுதியில் சுப்புரத்தினதாசன் என்று தம் பெயரை எழுதுவதற்கு இடம் போதவில்லை என்று அதனைச் சுருக்கி சு.ர.தா. என்று எழுதியவர், காலப்போக்கில் அவ்வாறே தம் பெயரை எழுதத் தொடங்கினார். எழுத்துகளுக்கு நடுவில் போடப்பட்ட புள்ளிகளை எடுத்து விட சுரதா என்று நிலைத்தது. கவிதைக்கு புது வடிவம் கொடுத்த உவமைக் கவிஞராக, சிறந்த இலக்கியப் படைப்பாளியாக சுரதா என்ற பெயரில் வலம் வந்தார். செய்யுள் மரபு மாறாமல் உவமைகளுடன் கவிதை படைப்பதில் வல்லவர் என்பதால் உவமைக் கவிஞர் என போற்றப்பட்டார். காலையில் சூரியனை பார்த்து தாமரை மலரும். அந்தியில் கருக்கலைப் பார்த்து மல்லிகை மலரும். இரவில் நிலவைப் பார்த்து அல்லி மலரும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. மேகம் கருத்து, மழை பெய்யும் காலத்தில் மின்னல் அடிக்கும் ஓரிரு மணித்துளிகளில் பட்டுத் தெறிக்கும் மின்னலின் சுடரைக் கண்டு தாழை மலர்கிறது என்ற அறிவியல் உவமையை தன் காதல் கவிதையில் எளிதாக நுழைத்தவர் கவிஞர் சுரதா. இப்படி யாருக்கும் உதிக்காத உவமைகளை எளிதாக அள்ளி தெளிப்பார். அதனால்தான் அவர் ‘உவமைக் கவிஞர்’ என்று அழைக்கப்பட்டார்.செய்யுளை உவமைகளுகளுடன் எடுத்து கூறுவதில் புலமை பெற்ற சுரதா.., தமிழ், கவிதை ஆகியவற்றில் ஈடுபாடு கொண்ட புரவலர்கள், ஆர்வலர்கள் ஆகியோரை இணைத்துச் சில வினோதக் கவியரங்கங்களை நடத்துபவராக இருந்தார் சுரதா. படகுக் கவியரங்கம், கப்பல் கவியரங்கம், விமானக் கவியரங்கம் என வித்தியாசமான கவியரங்குகளை ஒரு கொண்டாட்ட நிகழ்வாக மாற்றியதில் அவருக்கு மிகுந்த பங்குண்டு. 100-க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார். “அமுதும் தேனும் எதற்கு, நீ அருகினில் இருக்கையிலே எனக்கு” மற்றும் “ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா” ஆகிய பாடல்கள் என்றும் மங்காத புகழ் பெற்றவையாகும். பல நூல்களாக இருந்த பாரதிதாசன் கவிதைகள், இவரது முயற்சியால் ஒரே தொகுப்பாக வெளியிடப்பட்டது. தமிழக அரசின் பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் ராஜராஜன் விருது, மகாகவி குமரன் ஆசான் விருது உள்ளிட்ட பல விருதுகள், பரிசுகள் பெற்றுள்ளார் சுரதா. இவரது தமிழ் தொண்டை கௌரவித்து சென்னையில் இவருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது. அரசியலில் பெரியாரையும், இலக்கியத்தில் பாரதிதாசனையுமே சுரதா வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்டார். ஆனாலும், தனது எழுத்தியக்கத்தில் உள்ளடக்கம், வடிவம் என எதிலும் அந்தத் தாக்கம் வந்துவிடாதவாறு கவனமாகவும் இருந்தார். கவிதை படைப்பதை உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்த உவமைக் கவிஞர் சுரதா 2006ஆம் ஆண்டு உலகை விட்டு மறைந்தார். இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

கருத்துகள்