அம்மா அப்பா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !

அம்மா அப்பா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் கவிபாரதி மு. வாசுகி! நூல் வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை – 11. தொலைபேசி : 044-24342810 பக்கம் : 94 விலை : 9௦ அம்மா அப்பா - கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை நல்ல எண்ணத்தாலும் எழுத்தாலும் எல்லோரின் மனதிலும் இடம்பிடித்து வரும் இனிய கவிஞர் இரா.இரவி அவர்களின் இருபத்திஏழாவது நூலான ‘அம்மா அப்பா’ என்ற கவிதை நூல் பெருமைமிகு வானதி பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது. முன்பக்க அட்டையில் ஒரு குடும்பத்தின் பிணைப்பை ஏற்படுத்தும் வகையில் படங்கள் அழகாக அமைந்துள்ளது. பின்பக்க அட்டையில் உலகமே அறிந்த கு.ஞானசம்பந்தன் ஐயா மற்றும் ஏர்வாடி இராதாகிருஷ்ணன் ஐயா அவர்களின் முகமும், அவர்களின் பெருமைமிகு வரிகளும் ‘முகவரி’யாய் இரா.இரவி அவர்களுக்கு மாறிவிட்டது சிறப்பிலும் சிறப்பு. மாமனிதர் அப்துல்கலாம் அவர்களோடு கவிஞர் இரா.இரவி அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், கலாம் அவர்கள் தனது பொற்கரங்களால் எழுதிய கடிதம் போன்றவற்றை பலரும் அறிந்துகொள்ள இந்நூல் வகை செய்திருக்கிறது. இதனால் இரா.இரவி அவர்களுக்கு இன்னும் ‘நன்மதிப்பு’ உயரும் என்றே கூறலாம். இந்நூலில் உள்ள அனைத்து தலைப்பு கவிதைகளும் இன்றைய இளையதலைமுறைக்கு அவசியமானது தான். அன்று அநீதி ஆணுக்கு கைச்சிலம்பு பெண்ணுக்கு காலச் சிலம்பு! என்ற வரிகள் பெண்ணுக்கு இவ்வுலகில் ஏற்படும் நிலையை எடுத்துரைக்கிறது. மேலும் பெண்களை மதிக்க வேண்டும் என்பதற்காகவே கவிஞர் இவ்வரிகளை எழுதியுள்ளார். ரத்தத்தில் ஊதிவிட்ட ஆணாதிக்கச் சிந்தனைகளை ரத்து செய்துவிட்டு மதியுங்கள் பெண்களை ; என பெண்ணினத்திற்காக வார்த்தைகளால் வழக்கறிஞரைப் போல் வாதாடுகிறார். மேலும் திருநங்கைகளைப் பற்றிய கவிதையில் வழி இல்லாத வாழ்க்கை வலி மிகுந்த வாழ்க்கை திருநங்கைகள்! என்ற இரண்டே வரிகளில் அவர்களின் மொத்த வாழ்க்கையையும் படம்பிடித்து விளக்கியிருப்பது சிறப்பு. இந்நூலின் அனைத்து கவிதைகளும் சமுதாய அக்கறையை வெளிப்படுத்தும் விதமாகவே அமைந்திருக்கின்றன. கவிஞர் இரா. இரவி அவர்கள் இன்னும் பல நூல்கள் படைக்கட்டும்! இனிவரும் தலைமுறையினரும் அனுபவிக்கட்டும்! -- நூலாசிரியரின் 27ஆவது நூல் இது நாம்இவ் உலகில் வாழ காரணமான அம்மா, அப்பாவின் பெருமைகளை எடுத்துரைக்கும் நூல். இந்நூலுக்கு கவிதை உறவு ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் மற்றும் கலைமாமனி முனைவர் கு. ஞானசம்பந்தன் ஆகிய இருவரும் தம் சிறப்பான அணிந்துரை அளித்து நூலுக்கு மேலும் அழகூட்டுகின்றனர். நூலாசிரியர் அவர்கள் தமிழ்நாடு சுற்றுலா துறையில் பணியாற்றி விருப்பஓய்வு பெற்றவர். மதுரையின் சிறந்த ஆளுமைகளுள் ஒருவர். தம் படைப்பாற்றல் மூலம் இணைய வழி உலகம் முழுவதும் வாசகர்களை பெற்றவர். இவரின் 27-ஆவது நூல் இது. இனி நூலிற்குள் செல்வோம். இவ்உலகிற்கு நாம் வரக்காரணமான தாய் பற்றி நூல், ‘‘தன் தூக்கம் மறந்து பெற்ற தன் சேயின் தூக்கம் காத்தவள்’’ – தாய் திருநங்கைகளை நம்மில் ஒருவராய் பார்க்க வேண்டுமென நூல், ‘‘கேலியாகப் பேசாதீர்கள் தோழியாகப் பாருங்கள் திருநங்கைகள்’’ உயிர்காக்கும் தானங்களில் சிறந்த தானமான இரத்த தானம் பற்றி நூல். ‘‘தானத்தில் சிறந்த்து ரத்த தானம் தானத்தால் வாழ்கிறது உயிர்கள் தினம்.’’ மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும் வானம் குறித்து நூல். ‘‘உயிர் பறவைகள் உலோகப் பறவைகள் உலவிடும் வானம்! உற்று நோக்குவோரின் உள்ளம் கொள்ளையிடும் வானம்! இவ்உலகில் நாம் பிறந்த்து முதல் நமக்காக உழைத்து தேய்ந்தவர் அப்பா. ‘‘திறமைகளை பயிற்றுவித்த ஆசான் நீங்கள் சான்றோனாக்கி மனம் மகிழ்ந்தவர் நீங்கள்! சந்தோசங்களை வழங்கிய வள்ளல் நீங்கள்!’’ எளிமையின் சிகரமாக வாழ்ந்து கொள்கை இலட்சியத்துடன் மறைந்த நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் குறித்து நூல். ‘‘மாமனிதர் அப்துல் கலாம் ! படகோட்டி மகனாகப் பிறந்து முதற்குடிமகனானவர்! மாணவர்களின் முன்னேற்றத்தில் அவர் வாழ்கிறார்! விண்ணில் உள்ள எவுகணைகளில் அவர் வாழ்கிறார்!’’ மொத்தத்தில் நூல் முழுவதும் தாய்தந்தையரின் அன்பும் ஆதரவும் நூல்ஆசிரியராம் எடுத்துரைக்கப்பட்ட இனியநூல்!

கருத்துகள்